Published:Updated:

கறுப்பு, வெள்ளை, மஞ்சள்... படுத்தியெடுக்கும் பூஞ்சைகள்... அறிகுறிகள் முதல் சிகிச்சை கட்டணம் வரை!

பூஞ்சை
பிரீமியம் ஸ்டோரி
News
பூஞ்சை

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது அது பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது

ஒவ்வோர் உருமாற்றத்துக்குப் பிறகும் நாம் எதிர்பாராத விதத்தில் தாக்குதலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இரண்டாவது அலையில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தது கரும்பூஞ்சைத் தொற்று. `இந்த பாதிப்புக்கு ஆளானவர்கள் சிகிச்சைக்குச் சற்று காலம் தாழ்த்தினாலும் பார்வை பறிபோகும் அதற்கடுத்த நிலையில் மரணம்தான்’ என்று கறுப்பு பூஞ்சை நோய் குறித்து வெளியான தகவல்கள் அச்சமூட்டின. இப்போது கொரோனா தாக்கம் குறைந்திருப்பது ஆறுதல் அளித் தாலும் `டெல்டா பிளஸ்’ பரவ ஆரம்பித்திருக்கும் இந்தச் சூழலில், பூஞ்சை நோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சை மருத்துவ நிபுணர் நரேந்திரனிடம் இதுகுறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்...

கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்றவை எப்படித் தோன்றுகின்றன?

தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் நீண்ட நேரம் வெளியில் வைத்திருக்கும் உணவுப் பொருள்களில் பூஞ்சைகள் தோன்று வதை நாம் பார்த்திருப்போம். இதனால், சராசரி மனிதனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படு வதில்லை. அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு அவர் சுவாசிக்கும் காற்றின் வழியாக இந்தப் பூஞ்சை உள்ளே சென்று விட்டால், `அலர்ஜிக் ஃபங்கல் சைனஸைட்டிஸ்’ (Allergic Fungal Sinusitis) என்ற பிரச்னை ஏற்படலாம். இது பொது வான பிரச்னை. மூக்கில் சதை வளர்ந் தாலும், நீண்ட நாள்கள் சளித்தொல்லை சரியாகவில்லை என்றாலும் அதற்கு `அலர்ஜிக் ஃபங்கல் சைனஸைட்டிஸ்’ காரண மாக இருக்கலாம். இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், இப்போது பேசப் படுகிற பூஞ்சை நோய் தாக்குதலை `இன்வேஸிவ் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன்ஸ்' (Invasive Fungal Infections) என்று சொல்வோம். `இன்வேஸிவ் ஆஸ்ப்பகிளிசஸ்' (Invasive aspergillosis), 'இன்வேஸிவ் ம்யூக்கோமைக்கோசிஸ்' (Invasive mucormycosis) என்று இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. கொரோனாவுக்கு முன்பும் இந்த நோய்த்தொற்று இருந்தாலும்கூட கொரோனா காலத்தில் அதுவும் குறிப்பாக இரண்டாம் அலையில் இதனை அதிகமாகப் பார்க்கிறோம். இயல்பான நோய் எதிர்ப்புத் திறன் உள்ளவர் களுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. கட்டுப்பாட்டற்ற சர்க்கரை அளவுடன் நோய் எதிர்ப்புத் திறனும் குறைவாக உள்ளவர்கள்தான் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

நரேந்திரன்
நரேந்திரன்

பூஞ்சை நோய்கள் முன்பே இருந்தாலும் கொரோனா காலத்தில் மட்டும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதேன்?

நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனை, கொரோனா தாக்குதல் குறைத்துவிடுகிறது. ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது அது பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. சர்க்கரை நோய் இல்லாதவர்கள்கூட கொரோனா தொற்று சிகிச்சைக்குப் பிறகு சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர். காரணம் ஸ்டீராய்டு மருந்துகள். ஸ்டீராய்டுகள் கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்காற்றின. ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும்போது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். சர்க்கரை அளவு அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என இரண்டையும் ஒருசேர கொரோனா உருவாக்குவதால் முன்பைவிட பாதிப்பு அதிகமாகிவிட்டது.

இந்த நோய், மூக்கு, கண்கள் மற்றும் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு முன்பே தடுக்க முடியுமா?

மூக்கடைப்பு, முகத்தில் வலி அல்லது கண் களைச் சுற்றி வலி... இவைதான் ஆரம்பகட்ட அறிகுறிகள். பிறகு, மூக்கடைப்பு அதிகமாகி மூக்கிலிருந்து மாறுபட்ட நிறத்தில் சளி வெளி யேறலாம். மூக்கைச் சுற்றி வலி இருக்கும்போது சில நேரம் தொடர் இருமல் இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் சாதாரண அலர்ஜி யால்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக எச்சரிக்கையாகி மருத்துவரை அணுக வேண் டும். பார்வை மங்கலாவது பூஞ்சைகள் கண் களை பாதிக்க ஆரம்பித்துவிட்டதன் அறிகுறி. பூஞ்சைகள் மூளைக்குப் பரவும் போது தலைவலி ஏற்படலாம், நினைவிழந்து போவது மாதிரி தோன்றலாம். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி சிகிச்சையை ஆரம்பித்து விட்டால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு தடுத்து விடலாம்.

பூஞ்சை நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எப்போது கண்கள் அகற்றப் படும் நிலைக்குச் செல்கின்றனர்?

கண் நரம்புகளையும் கண்களுக்குச் செல்கிற ரத்தக் குழாயையும் பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் பார்வை பாதிக்கப்படும். பார்வை மங்கலாகத் தெரியும் நிலையில் இருந்தால்கூட கண்களை அகற்ற மாட்டோம். முழுமையாக பார்வை போய்விட்டது என்றால்தான் கண்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். நோய்த் தொற்று ஏற்பட்டு இரண்டு முதல் மூன்று வார காலம் கழித்தே ஒருவர் இந்த நிலையை எட்டுவார். ஆகையால், நோய் தாக்கிய உடனேயே பார்வை போய்விடாது. பார்வை போகிற நிலையில் ஒருவர் மருத்துவ மனைக்கு வருகிறாரென்றால் இரண்டு மூன்று வாரங் களுக்கு இந்த பாதிப்புகள் குறித்து அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்.

கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பங்கு என்ன... ஆறு டோஸ் போட வேண்டிய சூழலில் பற்றாக்குறையின் காரணமாக, வெறும் மூன்று டோஸ் மட்டுமே வழங்கப் பட்டதும், அது கொரோனா தொற்று உருமாறுவதற்கு வழிவகுத்து, பூஞ்சைத் தாக்குதலுக்கும் காரணமாகிறது என்றும் சொல்லப்பட்டதே?

ரெம்டெசிவிர் என்பது ஆன்ட்டி வைரல் மருந்துதான். கொரோனாவுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பட்டியலிலிருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனமும் ஐ.சி.எம்.ஆரும் நீக்கிவிட்டன. மருத்துவ மனையில் இருக்கும் சிகிச்சை நாள்களைக் குறைப்பதற்கு மட்டுமே அது பயன்படுகிறது. ஆரம்ப நிலை நோயாளிகளைத் தீவிர நிலைக்குச் செல்லாமல் தடுக்கிறது. ஆகையால், அதை பாதி டோஸ் கொடுப்பதால் வைரஸ் உருமாறுகிறது என்பது முற்றிலும் தவறான தகவல். பூஞ்சைத் தாக்குதலுக்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது. பூஞ்சைத் தாக்குதலுக் கான காரணமாக ஸ்டீராய்டுகளை மட்டும்தான் சொல்ல முடியும். அவையும் நேரடியாகப் பூஞ்சைத் தாக்குதலை ஏற்படுத்துவதில்லை. பக்க விளைவாகத்தான் ஏற்படுகிறது.

தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவ தால் முகத்துக்கு போதுமான காற்றோட் டம் கிடைப்பதில்லை. அதுவும் பூஞ்சைத் தாக்குதலுக்கு காரணமாகுமா?

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. அவருக்குச் சர்க்கரை நோயும் கட்டுப்பாடின்றி இருக்கிறது என்ற சூழலில் அவர் அணியும் முகக் கவசத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் அதில் பூஞ்சைகள் தோன்றினால் அவருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றபடி சாதாரண நபர்கள் முகக்கவசம் அணிவதால் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படாது. தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்திருக்கும்போது சுவாசிப்பதில் தொந்தரவு இருந்தால், தனி இடத்துக் குச் சென்று மாஸ்க்கைக் கழற்றிவிட்டு முகத்தை நன்றாகக் கழுவிக் கொள் ளுங்கள், மாஸ்க்கையும் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

கறுப்பு, வெள்ளை, மஞ்சள்...
படுத்தியெடுக்கும் பூஞ்சைகள்...
அறிகுறிகள் முதல் சிகிச்சை கட்டணம் வரை!
AndreasReh

அழுகிய பழங்கள், காய்கறிகள் போன்றவற்றிலிருந்து இந்த நோய் பரவு மெனில் காய்கறி, பழ மார்க்கெட்டுகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் வீடுகளில் காய்கறிகளைக் கையாளும் நபர் களுக்கும் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா?

நீங்கள் ஒரு காய்கறிக் கடையில் வேலை பார்க்கிறீர்கள் அல்லது வெங்காயம் வெட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்குச் சர்க்கரை நோய் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மூக்கில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், கறுப்பு பூஞ்சை தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. பெரியளவு தொந்தரவு இருந்தால் அலட்சியப்படுத் தாமல் மருத்துவரை அணுகினால் எளிதாகச் சரி செய்து விடலாம்.

இந்த நோய்க்கான சிகிச்சைகள் என்ன... அவை அரசு மருத்துவ மனைகளில் கிடைக்கின்றனவா… தனியார் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சைக்கான செலவுகள் எப்படி இருக்கும்?

இதற்கான ஆன்டி ஃபங்கல் மருந்து இருக்கிறது. ஆனால், இதை சாதாரண மாகச் சிறிய மருத்துவமனையில் கொடுக்க முடியாது பெரிய மருத்துவ மனையில்தான் கொடுக்க முடியும். ஏனெனில், இதனுடைய பக்க விளைவுகள் அதிகம். அந்த மருந்தைக் கொடுக்கும்போது சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மேலும் இந்த மருந்தில் பல வகைகள் உள்ளன. விலையும் அதிகம். இதற் கான மருத்துவச் செலவு என்பது தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 20,000 ரூபாயிலிருந்து 30,000-க்கும் மேல் இருக்கும். சிகிச்சை யின்போது சிறுநீரகம் பாதிக்கப் பட்டால் அதற்கான செலவுகள் தனி. தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இலவசமாகக் கிடைக்கிறது.