Published:Updated:

அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்... பின்னணியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானா?

அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்
பிரீமியம் ஸ்டோரி
அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்

வருவாய்த்துறை, தொல்லியல் துறையினரிடம் இது பற்றி முறையிட்டால், ‘இது எங்களுடைய பொறுப்பில்லை’ என்கிறார்கள்.

அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்... பின்னணியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானா?

வருவாய்த்துறை, தொல்லியல் துறையினரிடம் இது பற்றி முறையிட்டால், ‘இது எங்களுடைய பொறுப்பில்லை’ என்கிறார்கள்.

Published:Updated:
அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்
பிரீமியம் ஸ்டோரி
அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்

சிங்கவரம் மலைக்கோயிலுக்குப் பாதை அமைக்கிறோம் என்கிற பெயரில் பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பதால், பிரசித்தி பெற்ற மலைக்கோயில் சேதமாகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட மக்கள். ‘‘இதன் பின்னணியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் இருப்பதால், அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்’’ என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று, சிங்கவரம் ரங்கநாதர் கோயில். பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்த குடைவரைக் கோயில் சுமார் 1,400 ஆண்டுகள் பழைமையானது. மலைமீது அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்காகப் படிக்கட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், வாகனங்கள் மூலம் செல்வதற்காக மலைப்பாதைகள் அமைக்கும் பணி கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. இதற்காக மலையிலுள்ள பாறைகள் அனுமதியின்றி தகர்க்கப்படுவதாகவும், அதைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்றும் 2018-ல் அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பிறகும் பணிகள் தொடர்ந்தன.

அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்... பின்னணியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானா?

தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, இந்தக் கோயிலுக்கு மலைப்பாதை, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, தமிழக அரசின் பட்ஜெட்டில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அனுமதியின்றி வெடிவைத்து, பாறைகள் தகர்க்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்துள்ள அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் செஞ்சி ராஜாவிடம் பேசினோம்... ‘‘மிகவும் பழைமையான இந்தக் குடைவரைக் கோயிலின் ஒவ்வொரு பாறையும், மற்றொரு பாறையுடன் தொடர்புடையது. ஒரு பாறைக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது மற்றொரு பாறையை பாதிக்கும். கடந்த ஆட்சியின்போது மலைமேல் பாதை அமைக்கிறோம் என்று ஏதேதோ செய்தார்கள். அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். தி.மு.க ஆட்சிக்கு வந்து செஞ்சி மஸ்தான் அமைச்சரான பிறகு, ‘மக்கள் கோரிக்கை வைத்தார்கள்’ என்று கூறி, அவரது தூண்டுதலின் பேரில்தான் அவரின் ஆதரவாளர்கள் மூன்று பேர் பாறைகளை வெடிவைத்துத் தகர்த்தார்கள். பாறைகளை வெடி வைத்துத் தகர்த்ததால், சமீபத்தில் பெய்த மழையின்போது, கோயிலின் ஒரு பகுதி மதில் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. அதேபோல, வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பாறைகள் எங்கே போயின என்பதும் மர்மமாகவே உள்ளது.

அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்... பின்னணியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானா?
அனுமதியின்றி தகர்க்கப்படும் பாறைகள்... பின்னணியில் அமைச்சர் செஞ்சி மஸ்தானா?

வருவாய்த்துறை, தொல்லியல் துறையினரிடம் இது பற்றி முறையிட்டால், ‘இது எங்களுடைய பொறுப்பில்லை’ என்கிறார்கள். இந்து சமய அறநிலைத் துறையினரும், ‘கோயில் மட்டும்தான் எங்கள் பொறுப்பு’ என்று தட்டிக்கழிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த விஜயகுமார் மூலம் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், புகாரை ஏற்கவில்லை. சட்டவிரோதமாக வெடிவைத்த செயலுக்கு காவல்துறை வழக்கு பதிய வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலரான ரங்கராஜன் நரசிம்மன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையடுத்து, மலைப்பாதை அமைக்கும் பணிகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

செஞ்சி ராஜா, ரங்கராஜன் நரசிம்மன், குணசேகரன்
செஞ்சி ராஜா, ரங்கராஜன் நரசிம்மன், குணசேகரன்

தி.மு.க-வின் செஞ்சி ஒன்றியப் பொருளாளரும், கோயிலின் முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவருமான குணசேகரன்தான், மலைப்பாதையில் சாலை அமைக்கும் பணிகளை முன்னின்று செய்தவர். அவரிடம் பேசினால், ‘‘நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நிதியை எதிர்பார்க்காமல் மக்களிடம் பணம் வசூலித்து சாலை அமைத்துவருகிறோம். கார் பார்க்கிங் வரும் இடத்தில் குண்டான மூன்று பெரிய கற்கள் இருந்தன. அவை பாறைகள் இல்லை... தனிக்கற்கள்தான். அவை சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்ததால்தான், அவற்றை வெடிவைத்துத் தகர்த்தோம். எங்கள் ஊர் கோயில்மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது. செஞ்சி ராஜாவுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் ஆகாது. அதனாலேயே இப்படிக் குற்றம்சாட்டுகிறார்கள். கோயிலுக்கு அருகேயுள்ள சுனையில் தண்ணீர் வழிந்து சென்றுதான் மதில்சுவர் சரிந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பும் இதேபோல் மதில்சுவர் சரிந்து விழுந்து, பின்னர் சரிசெய்யப்பட்டது. அமைச்சரின் ஆதரவாளர்கள் மூன்று பேர் பின்னணியில் இருக்கிறார்கள் என்று சொல்வதும் தவறான குற்றச்சாட்டு. நானும், ரங்கநாதன் என்பவரும்தான் தி.மு.க-வில் இருக்கிறோம். ஏழுமலை என்பவர் ஆன்மிகவாதி. அமைச்சருக்கு இதில் சம்பந்தம் இல்லை’’ என்றார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் பேசியபோது, ‘‘ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு, மலைப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, மக்கள் பிரதிநிதியாக எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதற்காக நான் அரசிடம் 3 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுத் தந்தேன். பணி மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசுத் தரப்பிலிருந்து பணிகளை இன்னும் தொடங்கவில்லை. ஊர் மக்களே அவர்களின் விருப்பத்தின் பேரில் நல்ல எண்ணத்தோடு செய்கிறார்கள். கோயில் நலனுக்காகக் கடந்த ஆட்சியின்போது அ.தி.மு.க-வினரிடம் கோரிக்கை வைத்தார்கள். இப்போது என்னிடம் கேட்கிறார்கள். அதேபோல மழையால்தான் மதில் சுவர் இடிந்துவிட்டது. கோயிலுக்குப் பாதை அமைக்கும் முயற்சியில் நான் ஆர்வம் காட்டுகிறேன் என்பதற்காகவே சிலர் திரித்துப் பேசுகிறார்கள்’’ என்றார்.

வளர்ச்சிப் பணிகள் செய்யும் அதேநேரத்தில் பழைமையான கோயிலுக்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அரசின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism