தூத்துக்குடி மாவட்டம், மணக்கரையில் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த ரௌடி துரைமுத்து என்பவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீஸார்மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதில், தலையில் வெடிகுண்டு வெடித்ததில், காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரௌடி துரைமுத்துவும் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார்.

ரௌடி வீசிய வெடிகுண்டுத் தாக்குதலில் காவலர் உயிரிழந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தினரை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது. `உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்’ எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு தென் மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களிலுள்ள 480 காவல் நிலையங்களில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தந்தக் காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லைக்கு வருகைதந்த காவல்துறை தலைவர் திரிபாதி, டி.ஐ.ஜி அலுவலகத்தில் அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த காவலர் சுப்பிரமணியன் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி திரிபாதி, ``நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்துக்கு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, காவல்துறை சார்பிலும் உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

`பணியின்போது உயிரிழக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்களில் சிலருக்கு ஒரு கோடி ரூபாய், சிலருக்கு 50 லட்சம் ரூபாய், சிலருக்கு இன்னும் குறைவாக என வழங்கப்படுவது பாரபட்சமாக இல்லையா?’ எனச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து பேசிய டி.ஜி.பி திரிபாதி, ``காவல்துறையினர் உயிரிழந்தால் எந்தவிதப் பாரபட்சமுமின்றி நிதி உதவி அளிக்கப்பட்டுவருகிறது.
ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணி, வழக்குகள், சம்பவங்களின் அடிப்படையில் அரசுக்கு நாங்கள் தெரியப்படுத்துவதன் அடிப்படையில் அரசு உதவித்தொகை வழங்குகிறது. தற்போது காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு தமிழக முதல்வர்`50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார். அதனால் இதில் எந்தப் பாரபட்சமும் இல்லை.

எல்லாச் சம்பவங்களும் ஒரே மாதிரியானது அல்ல. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியையும் பொறுத்து அரசு நிவாரண உதவியை முடிவு செய்கிறது. இறந்த காவலரின் உடலில் நாட்டு வெடிகுண்டுகளிலிருந்து வெளியேறிய ஆணிகள் இருக்கின்றனவா என்பது பற்றி உடற்கூறாய்வு முடிவு வெளிவந்த பின்னரே தெரியவரும்.
குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதாகத் தெரியவந்தால், அதைச் சமாளிக்கும் வகையில் அதைவிடவும் கூடுதல் தொழில்நுட்பத்தைக் காவல்துறையினர் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு சம்பவத்தைவைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் இருப்பதாகச் சொல்வதில் உண்மையில்லை.திரிபாதி, காவல்துறை இயக்குநர்
தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் இருப்பதாகச் சொல்வதில் உண்மையில்லை. காவல்துறையினர்தான் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நமது காவல்துறையிலிருக்கும் உபகரணங்கள், தொழில்நுட்பங்கள், திறமைகள் ஆகியவைதான் நமக்கான பாதுகாப்பு. நம்மிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் இது போன்ற எதிர்பாராத வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.

அதனால், `காவலர்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று சொல்ல முடியாது. காவல்துறையில் நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. உடல் தகுதியுடன் மனநலப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. ஏதோ ஓரிரு துரதிர்ஷ்டச் சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. இன்னும்கூடக் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.
நான் காவல்துறை குடும்பத்தின் தலைவர். நமது குடும்பத்தில் இது போன்ற சம்பவம் நடந்துவிட்டது. நான் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதால் வந்திருக்கிறேன். காவல்துறையினர் மீது யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எனக்கு காவல்துறையினரைப் பற்றி முழுமையாகத் தெரியும்.
தங்களைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படாமல் பொதுமக்களின் பாதுகாப்புக்காகக் காவலர்கள் உழைக்கிறார்கள்.திரிபாதி, தமிழக காவல்துறை இயக்குநர்
அவர்கள் குடும்பத்தைப் பார்க்காமல், நேரம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். தங்களின் உடல்நலத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, காவல்துறையினரைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் பற்றிக் கவலைப்படாமல் எங்கள் வேலையை இன்னும் நல்ல முறையில் நாங்கள் செய்துகொண்டிருப்போம்” என்று தெரிவித்தார்.
பின்னர், காவலர் சுப்பிரமணியனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, அவர் தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளை கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.