Published:Updated:

`கேணியை அடைத்துவிட்டோம்!'- அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்துகிடக்கும் ஆழ்துளைக் கிணறு

தஞ்சாவூர் அருகே, அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகிலேயே, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்துகிடக்கிறது.

மூடப்படாத ஆழ்குழாய்
மூடப்படாத ஆழ்குழாய்

தஞ்சாவூர் அருகே, அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகிலேயே பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய்க் கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்துகிடக்கிறது. இதேபோல், கிணறு ஒன்றை அதிகாரிகள் நிரந்தரமாக மூடாமல், மரக்கம்புகளால் கிணற்றின் மேல் பகுதியில் அடுக்கியும், அதன்மேல் முள் செடியை வெட்டி போட்டும் மூடியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

மூடப்படாத ஆழ்குழாய்
மூடப்படாத ஆழ்குழாய்

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகிலேயே, துருப்பிடித்த நிலையில் இரண்டு அடி உயரத்திற்கு வெளியே தெரியும் ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் இருக்கிறது. அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள், மாவட்ட நிர்வாகம் இதை மூடுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சுஜித் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன், அதைத் தாங்க முடியாமல் பலரும் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து, மூடப்படாத ஆழ்துளைக் கிணறு மற்றும் பயன்பாட்டில் இல்லாத கிணறு போன்றவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அத்துடன், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிப்புக் குழாயாக மாற்றப்படும் என்றும் அறிவித்திருந்தது.

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தஞ்சாவூரில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், திறந்துகிடக்கும் ஆழ்துளைக் குழாயை அடைக்காமல் மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வைத்தி என்பவரிடம் பேசினோம். ``தஞ்சையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எங்க ஊர்.

இங்கு, அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். பள்ளிக்கு அருகிலேயே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. அதையொட்டி, பழைய பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய்க் கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது. அந்தக் குழாயை ஒட்டி பள்ளமும் இருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், திறந்து கிடக்கும் ஆழ்துளைக் குழாய்க்குப் பக்கத்திலேதான் வி.ஏ.ஓ அலுவலகம் உள்ளது.

கிணறு
கிணறு

இதேபோல், அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத பெரிய கிணறு ஒன்றை மூடுவதற்காக ஊழியர்கள் வந்தனர். மரக்கம்பை வைத்து கேணிக்கு மேல் அடுக்கிவைத்தனர். பின்னர், அதன்மேல் முள் செடிகளை வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். என்னவென்று கேட்டால், கேணியை அடைத்துவிட்டோம் என்கின்றனர். இரும்புக் கம்பியைக்கொண்டு முறையாக அடைக்காமல் இப்படி தற்காலிகமாக அடைப்பதற்கு, அதைச் செய்யாமலேயே இருக்கலாம். ஒரு சம்பவம் நடந்த பிறகும் இது போன்ற பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது வேதனையைத் தருகிறது'' என்றார்.