Published:Updated:

`சாலை விபத்தில் மூளைச்சாவு!’- நான்கு பேருக்கு வாழ்வளித்த வங்காள மாணவர்

Representational Image
Representational Image

மேற்கு வங்கத்தில் சாலைவிபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தன் இறப்பிலும் நான்கு பேருக்கு வாழ்வு அளித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஜெய் கர்மாகர்தான் அந்த மாணவர்.

தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவந்த சுஜெய் ஜனவரி 7-ம் தேதி தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அவர்களது வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கர்மாகரின் நண்பர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட கர்மாகர், அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Representational Image
Representational Image

தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. மாணவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தக் கடினமான சூழலில் சுஜெய் கர்மாகரின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். உறுப்பு தானம் செய்வதற்கான பணிகளை மருத்துவமனை நிர்வாகமே மேற்கொண்டது. பின்னர், Regional Organ and Tissue Transplant Organisation அனுமதிக்காக காத்திருத்தனர். அந்த அமைப்பின் அனுமதி கிடைத்தவுடன் மாணவனின் உடலில் இருந்து உறுப்புகளை அகற்ற முடிவு செய்தனர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட 47 வயது மதிக்கத்தக்க நபருக்கு சுஜெயின் இதயத்தைப் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதேபோல் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தனர். இதையடுத்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. சுஜெய் கர்மாகரின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு 4 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக கொல்கத்தா காவல்துறையின் உதவியையும் நாடியுள்ளனர். இதற்காக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. போக்குவரத்தைச் சரிசெய்து உடல் உறுப்புகளை வேகமாக எடுத்துச்செல்ல உதவியுள்ளனர் காவல்துறையினர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்காவது முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம்

மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறையின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் உடல் உறுப்பு தானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு பல்வேறு மாநிலங்களின் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர். மாநில அரசின் இடைவிடாத பிரசாரங்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

`ரெயின்போ கிக்.. ஃபிரி ஸ்டைல்.. பக்கா ஃபினிஷிங்!’- இணையத்தைக் கலக்கிய கேரள மாணவி ஹதியா
பின் செல்ல