Published:Updated:

உவரி: கடலில் மூழ்கி பலியான சகோதரர்கள்; தாய் இறந்த 16-ம் நாளில் நிகழ்ந்த சோகம்!

கடல்
கடல் ( மாதிரிப் படம் )

தாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற சகோதரர்கள் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள துரைகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜான். அவரின் மனைவி ரெனி. இவர்களின் இரு மகன்கள் பிரவீன் (16), ஆக்னல் (18). இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார்கள்.

மீட்கப்பட்ட உடல்
மீட்கப்பட்ட உடல்

ஜானின் மனைவி ரெனி, கடந்த 16 தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தாய் மறைந்த சோகம் காரணமாக குடும்பத்தினர் இன்று நெல்லை மாவட்டம் உவரியிலுள்ள அந்தோணியார் கோயிலுக்குக் குடும்பத்துடன் வந்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள்.

கோயிலில் இருவரும் மொட்டையடித்து வழிபட்ட பின்னர், கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். வழக்கமாக உவரி கோயிலுக்கு வருபவர்கள் அருகிலுள்ள கடல் பகுதியில் குளிப்பார்கள். அதனால் கூட்டம் அதிகம் இருந்ததால், ஜான் தன் மகன் பிரவீன், ஆக்னல் ஆகியோருடன் சற்று தள்ளிச் சென்று குளித்திருக்கிறார்.

Vikatan

அவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ராட்சத அலை வந்து மூவரையும் இழுத்துச் சென்றிருக்கிறது. ஜான் தட்டுத் தடுமாறி கரைக்கு வந்திருக்கிறார். ஆனால் பிரவீன், ஆக்னல் ஆகியோரை அலை இழுத்துச் சென்றதால், அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் அச்சமடைந்து இருவரையும் தேடியிருக்கிறார்கள்.

கூடங்குளம் கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் இருவரின் உயிரற்ற உடல்களை மட்டுமே கடலோரக் காவல் படையினரால் மீட்க முடிந்தது.

உயிரிழந்த சகோதர்கள் ஆக்னல், பிரவீன்
உயிரிழந்த சகோதர்கள் ஆக்னல், பிரவீன்

தாயின் மறைவுக்குப் பிராத்தனை செய்துவிட்டு கடலில் குளித்த மகன்கள் இருவரும் கடலில் மூழ்கி பலியான சோகம் நடந்ததால் அந்தப் பகுதியே அதிர்ச்சியில் மூழ்கியது. அலை இழுத்துச் செல்லப்பட்டு உயிர் தப்பிய தந்தை ஜான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு