Published:Updated:

அடையாளத்தை உறுதிசெய்ய அவ்வளவு போராட்டங்கள்!

நாகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாகேந்திரன்

“வெயிலும் மழையும் சேர்ந்து வர்ற மாதிரி கண்ணீரும் புன்னகையும் கலந்ததுதான் சார் என் வாழ்க்கை.

“பசியைத் தீர்ப்பது ஒரே ஒரு கனிதான்... ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!”

- ‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன்.

“என் பெயர் நாகேந்திரன். சுருக்கமா நண்பர்கள் என்னை `நாகி’ன்னு கூப்பிடுவாங்க. பசிச்சு அழும் வயித்தை சாப்பிட்டு ஆசுவாசப்படுத்தாம டீ குடிச்சு சமாதானப்படுத்துற ஒரு சராசரி இந்தியக் குடிமகன் நான்!”

- வித்தியாசமாய்த் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நாகேந்திரன், 42 வயதைக் கடந்த பேச்சிலர். 30 வருடங்களாய்ப் போராடி தன் பூர்வீகம் என்ன, பெற்றோர் யார் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆதரவற்றோர் விடுதியில் வளர்ந்து, மில்களில் வேலை பார்த்து, விபத்துக்குள்ளாகி, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு, நடைபாதைகளில் உறங்கி, சந்தேக கேஸில் அலைக்கழிக்கப்பட்டு, தற்கொலை முயற்சிகளும் தோல்வியில் முடிந்து, ஒரு கட்டத்தில் வேட்டை நாயைப்போலத் துரத்தும் வாழ்க்கையைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு போராடிப் பட்டம்பெற்று இன்று பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சென்னைத் தலைமை அலுவலகத்தில் சீனியர் ஆபீஸ் அசிஸ்டென்ட் ஜெனரலாக அமர்ந்திருக்கிறார்.

“வெயிலும் மழையும் சேர்ந்து வர்ற மாதிரி கண்ணீரும் புன்னகையும் கலந்ததுதான் சார் என் வாழ்க்கை. கடவுள் உங்க வாழ்க்கையில ஒரு கதவை அடைச்சா இன்னொரு கதவைத் திறப்பார்னு சொல்வாங்க. எனக்கு அடைக்கப்பட்ட பல கதவுகளை நானே உடைச்சு நான் கண்டடைந்த ஒரு கருவறைதான் என் பி.எஸ்.என்.எல் வேலை...என் வாழ்க்கையை விகடன் வாசகர்கள்கிட்ட பகிர்ந்துக்கிட்டா நிச்சயம் ஏதோ ஒருவகையில் நீங்கள் துவண்டுபோகிற சந்தர்ப்பத்தில் உங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும்னு நம்புறேன்!” - நாகேந்திரன் பேசும்போதே உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

அடையாளத்தை உறுதிசெய்ய அவ்வளவு போராட்டங்கள்!

“சின்னவயசுல திண்டுக்கல் காந்திகிராம் டிரஸ்ட்டோட சௌபாக்யா இல்லம்கிற ஆதரவற்ற சிறுவர் இல்லத்துல நான் வளர்ந்தேன். எனக்கு அந்த இல்லத்தை நடத்துன டாக்டர் கௌசல்யா தேவிதான் எல்லாமா இருந்தாங்க. அங்கே வேலை பார்த்த பத்மநாதன் சார், சரளா மிஸ், வார்டன் எல்லோருமே நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அதனால என்னைப் பெத்தவங்க யார்னு ஒருநாளும் நினைச்சுப் பார்த்தது கிடையாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆசிரமம் பக்கத்துல சாரியார் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் இருந்தார். எங்க இல்லத்துக்கு வருவார். விபத்துல கால் இழந்ததால் வீல்சேர்லதான் எப்பவும் இருப்பார். அவர் மாற்றுத்திறனாளிங்கிறதால அவருக்கு உதவி செஞ்சிட்டு அவர்கூடவே இருப்பேன். ரொம்பக் குறும்புத்தனம் பண்ணுவேன். அவர் சட்டைப் பாக்கெட்ல இருக்குற பணத்தை அவருக்கே தெரியாம எடுத்துட்டு தியேட்டருக்குப் போவேன். இஷ்டம்போல தின்பண்டம் வாங்கி சாப்பிடுவேன். ஒருநாள் அவர் நான் பணம் எடுக்குறதைப் பார்த்துட்டார். நான் பிடிபட்ட அதிர்ச்சியில் இருக்கேன். ஆனால் அவர், ‘என்கிட்ட கேட்டா நானே தந்திருப்பேனே ராஜா? எந்தச் சூழலிலும் திருடமட்டும் கூடாதுப்பா’ என அன்போடு சொன்னார். அன்னிக்கு மட்டும் என்னை அடிச்சிருந்தா, மோசமா நடத்தியிருந்தா என்னவாகியிருப்பேனோ தெரியலை. ஆனா, அதுக்குப்பிறகு வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் நேர்மையா இருந்திருக்கேன்.

பெற்றோர்
பெற்றோர்

சாரியார் மறைவுக்குப் பிறகு, படிக்க விருப்பமில்லாம ஆசிரமத்துல சொல்லிட்டு குமாரபாளையத்திலிருக்கும் ஸ்பின்னிங் மில்லில் வேலைக்குச் சேர்ந்தேன். தங்குறதுக்கு இடம் இல்லாததால் மில்லுக்குள் குப்பை கொட்டிவைக்கப்படும் அறையில் தங்கியிருந்தேன். கொதிக்கும் தகரம் வேய்ந்த அறையில் நாளெல்லாம் சுருண்டு படுத்துக்கிடப்பேன். இரவு முழுவதும் மில் வேலை. பகலில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது பாம்புகள் தேள்கள் ஊரும். ரெண்டுவாட்டி தேள்கடி வாங்கியிருக்கேன்.

அடையாளத்தை உறுதிசெய்ய அவ்வளவு போராட்டங்கள்!

அடுத்து ஒரு பெரிய மெக்கானிக் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தேன். இந்தமுறை உசிருக்குப் பிரச்னையில்லை. ஆனால், எனக்கு ஆங்கிலம் தெரியாததால ஸ்பேர் பார்ட்ஸை சரியா எடுத்துக் கொடுக்கத் திணறினேன். கம்பெனியில திட்டு விழுந்துச்சு. சமயங்களில் அடியும் விழும். அங்கே இருந்து கிளம்பி சூரம்பட்டிவலசுவில் மூர்த்தி என்பவரின் லேத் பேக்டரியில் போய்ச் சேர்ந்தேன். அந்தப்பகுதியில மிகப்பெரிய பேக்டரி அது. வாழ்க்கையில சீக்கிரம் முன்னேறணும்னு தொடர்ந்து 7 ஷிப்ட் தூங்காம வேலை செஞ்சேன். ஒருநாள் அசந்து மெஷினுக்குள்ள என் கைய விட்டுட்டேன். லேசான அடியோட தப்பிச்சிட்டேன். முருகேசன்கிற பெரியவர் என் காயத்துக்கு மருந்து போட்டு தூங்கவெச்சிட்டு எனக்குப் பதிலா அவர் மெஷின்ல வேலை பார்த்தார். என் கண்ணு முன்னாடி அவர் கை துண்டான கொடுமையைப் பார்த்தேன். ரத்தச்சகதியில அவர் கிடந்தப்போ டக்குனு அவரைத் தூக்க யாருமே முன் வரல. அவரை நானே தோளில் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். அவர் கையை வெட்டி எடுத்துட்டாங்க. ரெண்டுநாள் கழிச்சு ஆஸ்பத்திரில போய்ப் பார்த்தப்போ குற்ற உணர்ச்சில அழுது புலம்பினேன். ஆறுதலா சில வார்த்தைகள் பேசினார். “பரவாயில்லை தம்பி... நீ என் மகன் போலப்பா. உனக்காகத்தானே என் கை போச்சு!” என்று எனக்கு ஆறுதல் சொன்னார்.

அடையாளத்தை உறுதிசெய்ய அவ்வளவு போராட்டங்கள்!

அந்த ஒரு வார்த்தை எனக்குள்ள பல மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. ஆமாம். என்னால் கையை இழந்த ஒருத்தர் என்னை மகனாவே நினைக்கிறார்னா நிச்சயம் என்னைப் பெத்தவங்க என்மேல அன்பாத்தான் இருந்திருப்பாங்க. காரணமே இல்லாம என்னை ஆசிரமத்துல விட்டுட்டுப் போயிருக்க மாட்டாங்க. இத்தனை வருஷமா அம்மா அப்பா பற்றிய தேடல் எதுவுமே இல்லாம, குறையே இல்லாம வளர்த்தெடுத்த ஆசிரமத்துக்கு நன்றி சொல்லுற அதே நேரத்துல என்னைப் பெத்தவங்க யார்னு கேட்டுத் தெரிஞ்சுப்போம். என்ன காரணத்துக்காக அங்கே என் பெற்றோர் விட்டுட்டுப் போனாங்கன்னு கண்டுபிடிப்போமேன்னு களமிறங்கினேன். ஆனா, அது அத்தனை ஈஸியா இல்லை!” - சின்ன பிரேக் விட்டு நம்மை உபசரித்தபடி பெற்றோரைத் தேடும் படலத்துக்கு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“காந்தி கிராமம் ஆசிரமத்துல என்னைச் சேர்த்து விட்டவங்களோட போட்டோஸ் நிச்சயம் இருக்கும்கிறதால அங்கே இருந்த ஆவணங்களை எடுத்துப்பார்த்தா என்னைத் தவிர எல்லாப் பசங்களுக்கும் யார் சேர்த்துவிட்டாங்கன்னு போட்டோ இருந்தது. வெள்ளத்துல பாதிக்கப்பட்டு டேமேஜான ஆவண அறையில பெருசா எதுவுமே எடுக்க முடியல. ஆனா, ரொம்பப் பிரயத்தனப்பட்டு அங்கே வேலைபார்த்த மிஸ் நீலா என் தந்தையோட பென்சன் பாஸ்புக் டேமேஜான நிலைல இருந்ததைக் கண்டுபிடிச்சிக் கொடுத்தாங்க. அதை வெச்சு எங்க அப்பா என்னவா இருந்தார்னு தெரிஞ்சுக்கிட்டேன்.என்னோட பெரியம்மா ஆசிரமத்துக்கு எழுதுன ஒரு கடிதமும் கிடைச்சது.

அடையாளத்தை உறுதிசெய்ய அவ்வளவு போராட்டங்கள்!

அப்பா சந்திரசேகரன் புரசைவாக்கத்துல இருக்குற சோஷியல் வெல்ஃபேர் ஆபீஸ்ல செக்யூரிட்டியா இருந்தவர்னும் அவர் என்னை 2 வயசுக்குழந்தையா இருக்குறப்பவே இங்கே வந்து விட்டுட்டார்னும் அவங்க சொல்லிப் புரிஞ்சுக்கிட்டேன். அங்கே இருந்து கிளம்பி நாலு வருஷம் அப்பா அம்மாவைத் தேடி அலைஞ்சேன். அப்புறம் அப்பாவோட தூரத்து உறவினர் மூலமா ஒரு தகவல் கேள்விப்பட்டேன். நான் பிறக்குறப்போ இரட்டைக்குழந்தையாம். ஒரு பையன் இறந்தே பிறந்ததாவும் பிரசவத்துல அம்மா விஜயலட்சுமி இறந்ததுட்டாதாவும் சொன்னாங்க. அப்பா என்னை ஹோம்ல விட்ட பிறகு ஒரு வருஷம் மாசமாசம் பணம் அனுப்பியிருக்கிறார். மறுமணமும் செஞ்சிருக்கார். அந்த வருஷமே தீ விபத்துல அப்பாவும் சித்தியும் இறந்துபோயிட்டாங்க. இதை எல்லாத்தையும் கேள்விப்பட்டதும் மனசுக்கு கஷ்டமா இருந்தது. எப்படியாவது என்னை உருவாக்க ஆசைப்பட்ட அப்பா அம்மாவுக்காகவும், என்னைக் கண்ணின் மணியா பார்த்துக்கிட்ட ஆசிரமத்துக்காகவும் சாதிக்கணும்னு வெறி வந்துச்சு. தற்கொலை எண்ணமெல்லாம் தூரப்போட்டுட்டு விட்டுப்போன படிப்பைத் தொடரலாம்னு முடிவெடுத்தேன்.

என்கூட ஆசிரமத்து ஸ்கூல்ல படிச்ச சீனியர் பாலமுருகன் அண்ணா என்னை அவர்கூட தங்க வெச்சு புக்ஸ் வாங்கிக் கொடுத்து பிரைவேட்ல ஸ்கூல் தேர்வை எழுத வெச்சார். பக்கத்து வீட்டுல ஸ்கூல் டீச்சரா இருந்த மீனா மேடம் எனக்கு இலவசமா டியூஷன்லாம் எடுத்தாங்க. மீனா மேடத்தோட சகோதரர் பி.எஸ்.என்.எல் ஊழியர். என்னை டெலிகாம் அசிஸ்டென்ட் தேர்வெழுதச் சொன்னார். பள்ளி இறுதித் தேர்வோட அதையும் சக்சஸ்புல்லா எழுதினேன். தேர்வெழுதிய கையோடு மீண்டும் சென்னைக்குக் கிளம்பி வந்தேன். டிகிரியும் பிறப்புச் சான்றிதழும் கட்டாயம் தேவைப்பட்டது. எங்கிட்ட இருந்த சில டாக்குமென்ட்களும் அழிஞ்சுபோனதால விரக்தி ஆகிட்டேன்.

தாலுகா ஆபீஸ், கார்ப்பரேஷன் ஆபீஸ், பென்சன் ஆபீஸ்னு ஒவ்வொரு அலுவலகமா போய் நாள்கணக்கில் நின்னு சந்திரசேகரனோட பையன்தான் நான்னு சமீபத்துலதான் சர்ட்டிபிகேட் வாங்கினேன். ஆனா அதுக்கு முன்னால டெல்லி தலைமை அலுவலகத்துக்குப் போய் என்னைப் பற்றிய விவரங்களை நிரூபிக்க, படாதபாடு பட்டிருக்கேன். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி சமீபத்தில் இறந்த சங்கர், அப்போ டெல்லியில் தங்கியிருந்தார். அவர் உதவியால சென்னை டெலிகாம்ல தற்காலிகப் பணியாளரா அசிஸ்டென்ட் வேலை கிடைச்சது. சென்னைக்கு சங்கர் கிளம்பினப்போ என்னையும் கூட்டி வந்து ரூம்மேட்டாக்கிட்டார். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி ஆரம்பிச்சப்போ எங்கிட்ட பி.எஸ்.என்.எல் கனெக்‌ஷனோட போன் இருந்தது. அதைத்தான் அகாடமியை அவர் பத்துக்குப் பத்து ரூம்ல ஆரம்பிச்சப்போ தொடர்பு எண்ணாகக் கொடுத்தார். நானும் அட்மிஷனுக்கு உதவி செஞ்சேன். இன்னொருபுறம் பட்டப்படிப்பை அஞ்சலில் முடிச்சிருந்ததால சென்னை அலுவலக மேலாளர் எனக்காக மெனக்கெட்டு என் பணியை நிரந்தரமாக்கினார். அதுக்குப்பிறகு என் வாழ்க்கை எனும் பரமபதத்துல பாம்புகளே இல்லை. ஒரே ஒரு இழப்பு சங்கர் மரணம் மட்டும் தான். 30 டெலிகாம் அதிகாரிகள் என் பணி நிரந்தரத்துக்காகவும், வேலை வாங்கிக் கொடுக்கவும் அப்பாவைக் கண்டுபிடிக்கவும் மெனக்கெட்டாங்க. அவங்க தயவாலதான் 30 வருஷப் போராட்டத்துக்கு அர்த்தம் கிடைச்சது. என் பர்ஸ்ல என் அப்பா அம்மா படம் இப்ப ஜம்முனு இருக்கு. என்னை வளர்த்து ஆளாக்குன ஆசிரமத்துக்கு ஏதாச்சும் செய்யணும்... அதுக்காகவாவது இதே ஆபீஸ்ல அதிகாரியா ஆகணும். அப்புறம் இன்னொரு கனவும் இருக்கு. இப்ப நான் ஓய்வுநேரத்துல பகுதிநேர கானுயிர் புகைப்படக்காரனா காடுகளுக்குள் அலையறேன். நான் எடுத்த 13 டிஜிட்டல் புகைப்படங்களை நேஷனல் ஜியாக்ரபி சேனல் அங்கீகரிச்சிருக்கு. ரிட்டையர்மென்ட் வாழ்க்கைக்குப் பிறகு இந்தியா முழுவதும் இருக்கும் வனங்களில் கானுயிர் புகைப்படக்காரனா சுத்தணும்!” என்றவர், நெருப்பில் சுட்டுக்கொண்ட அவசரத்தில்,

“சார் டைம் ஆச்சு... இன்னிக்கு பெர்மிஷன் போட்டிருக்கேன். டெலிகாம் சர்வர் பிராப்ளத்தை சரி பண்ணணும். கிளம்புறேன்!”- விறுவிறுவென அண்ணா சாலையை நோக்கி நடையைக் கட்டினார் நாகேந்திரன் த/பெ சந்திரசேகரன்.