Published:Updated:

சிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்! - கொரோனாகால வழிகாட்டல்

அவசியத் தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

பிரீமியம் ஸ்டோரி
பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் பரவலால் மாதச் சம்பளம் வாங்குபவர்களும் சுயதொழில் செய்பவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தில் பலருக்குச் சம்பளம் குறைந்திருந்திருக்கிறது; பலர் வேலையை இழந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது குடும்ப பட்ஜெட். இதுவரை பட்ஜெட் போட்டு செலவு செய்யாதவர்கள்கூட இப்போது பட்ஜெட் போட்டு, அதற்குள் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்! - கொரோனாகால வழிகாட்டல்

கொரோனா பாதிப்பு முழுமையாக எப்போது சரியாகும், குறைக்கப்பட்ட சம்பளம் எப்போது அதிகரிக்கப்படும், வேலை இழந்தவர்களுக்கு எப்போது மீண்டும் வேலை கிடைக்கும்... இவையெல்லாம் யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்விகள். இந்த ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்தான்.

``வழக்கமான பட்ஜெட்டைப் போடுவதைவிட, இந்தச் சிக்கலான நேரத்தில் சிறப்பான சிக்கன பட்ஜெட் போட வேண்டியது அவசியம்’’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகரும், பிளான்2பிராஸ்பர் (Plan2prosper.in) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியுமான புவனா ஸ்ரீராம். சிக்கன பட்ஜெட்டுக்கான நுணுக்கங்களை விரிவாக அவரே விளக்குகிறார்.

தவிர்க்கக் கூடாத செலவுகள்!

“எந்த பட்ஜெட்டாக இருந்தாலும் அதில் தவிர்க்கக் கூடாத செலவுகள் என்று சில இருக்கும். முக்கியமாக, இந்த சிக்கலான கொரோனா காலத்தில் எந்தக் காரணம் கொண்டும் ஆயுள் காப்பீடு, ஆரோக்கியக் காப்பீடுகளுக்கான பிரீமியம் கட்டுவதை நிறுத்தக் கூடாது. ஏனென்றால், திடீரென ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் இழப்பீடு கிடைக்காமல் போகக்கூடும். இது உங்களை, உங்கள் குடும்பத்தினரை பெரும் நிதிச் சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும்.

பட்ஜெட்
பட்ஜெட்

அடுத்தது, கடனுக்கான மாதத் தவணை. `கடன் தவணையை மூன்று மாதம் தள்ளிச் செலுத்திக்கொள்ளலாம்’ என்பதை ஆர்.பி.ஐ-யின் அறிவுரைப்படி வங்கிகள் அனுமதித்துள்ளன. ஆனால், இந்த மூன்று மாத காலத்துக்கு வட்டி போடப்படும். இந்த வட்டி காரணமாக, பிற்பாடு கூடுதல் மாதங்கள் தவணை செலுத்த வேண்டிவரும். இதைத் தவிர்க்க கடன் மாதத் தவணையைச் செலுத்தி விடுவது நல்லது.

கடந்த காலத்தில் சில முதலீடுகளை நாம் செய்யத் தொடங்கியிருப்போம். இப்போது வருமானம் குறைந்திருந்தால், அவற்றை நிறுத்தப் பரிசீலிக்கலாம். வருமானம் குறைந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள், அந்த முதலீடுகளைத் தொடர்வதே நல்லது. உதாரணமாக, உங்களால் முடியும் என்கிறபட்சத்தில், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யை நிறுத்தாதீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர்க்கக்கூடிய செலவுகள்

குடும்பமாக உட்கார்ந்து பேசுங்கள்; ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு எவ்வளவு செலவுகளைக் குறைக்க முடியும் என்பதை விவாதித்து முடிவு செய்யுங்கள். கொரோனா பாதிப்பு முடிந்து அனைத்து இடங்களிலும் இயல்புநிலை திரும்பும் வரை எதிலெல்லாம் செலவைக் குறைக்க முடியும் என்று பாருங்கள். வழக்கமாக, நம் வீட்டுக் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் செலவழிப்போம் என்றால், இப்போது 250 ரூபாய் செலவில் அதை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியுமா என்று பாருங்கள். மகிழ்ச்சி என்பது எவ்வளவு பணத்தைச் செலவு செய்கிறோம் என்பதைவிட, அதை எவ்வளவு மனநிறைவாகச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்பதை எல்லோருக்கும் புரியவையுங்கள்.

பட்ஜெட்
பட்ஜெட்

அவசியத் தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் கணிசமான பணத்தை உங்களால் மிச்சப்படுத்த முடியும். கொரோனா பாதிப்புக்குப் பிறகு உங்கள் நிதி நிலைமை சரியாகும் காலம் வரை இதைப் பின்பற்றலாம். முடிந்தால், வாழ்க்கை முழுக்க சிக்கனமாக இருந்தால் பிற்காலத்தில் பணக்கஷ்டம் இல்லாமல் உங்களால் இருக்க முடியும்.

வீட்டில் சமைத்துச் சாப்பிட்டால் செலவு குறைவாக இருக்கும்; ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம். இதற்கு பதில், ஹோட்டலுக்குச் சென்று அல்லது வீட்டுக்கே ஆர்டர் செய்து சாப்பிட்டால் செலவு அதிகமாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்க்கவும். இப்போது பல விஷயங்களை ஸ்மார்ட்போன் மூலம் சிறப்பாகச் செய்ய முடியும். உங்களின் அலுவலக மீட்டிங்குகளைக்கூட போன் மூலம் சிறப்பாக நடத்திவிட முடியும்.

வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்களை மொத்த விலைக் கடையில் வாங்க முடியுமா என்று பாருங்கள். பொருள்களை மொத்தமாக வாங்கும்போது செலவு நிச்சயம் குறையும். ஒவ்வொரு மாதம் ஒரு பொருளை வாங்குவதாக இருந்தால்கூட, ஒரு வருடத்தில் பல பொருள்களை மொத்தமாக நீங்கள் வாங்குவதன் மூலம் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். துணிமணி வாங்கும்போதுகூட மொத்த விலைக் கடைகளில் சென்று வாங்கினால் செலவு குறையும்.

கார்களைப் பயன்படுத்துபவர்கள், வீட்டில் இருசக்கர வாகனங்கள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்துங்கள். மேலும், உங்களின் நிதிநிலை சரியாகும் வரை பொது வாகனங்களான பஸ், ரயில் போன்றவற்றைப் பயன்படுத்தத் தயங்காதீர்கள்.

செலவைக் குறைக்க 67% பேர் திட்டம்..!

அண்மையில் மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி (McKinsey), இந்திய நுகர்வோர்களிடையே சர்வே ஒன்றை நடத்தியது. அதில், சம்பளம் / வருமான இழப்பு ஏற்பட்ட 55% பேரில், தங்கள் செலவை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டிருப் பதாக 67% பேர் தெரிவித்தி ருக்கிறார்கள்.

சிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்! - கொரோனாகால வழிகாட்டல்

சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் செலவு, கேபிள் டி.வி கட்டணம் ஆகியவற்றைக் குறைக்காமல் தொடர்வதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புதிய ஆடைகள், காலணி, மதுபானம், சிகரெட், நொறுக்குத்தீனிகள், வெளியில் சென்று சாப்பிடுவது, எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், வாகனம் வாங்குவது, ஆபரணங்கள் வாங்குவது, சினிமா தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது போன்ற செலவுகளைக் குறைக்கவிருப்பதாக சொன்னார்கள். இவர்களைப்போல, உங்களால் செலவுகளைக் குறைக்க முடியுமா என்று பாருங்கள். முழுமையாக ஹோட்டல் சாப்பாடு, தியேட்டருக்குச் செல்வதைத் தவிர்க்க முடியாதென்றால், மாதத்துக்கு நான்கு முறை செல்லும் நிலையில் ஒன்று அல்லது இரண்டு முறையாகக் குறைக்கப் பாருங்கள். அலுவலக வேலைக்குச் செல்ல, அருகிலிருப்பவர்கள் இணைந்து சுழற்சி முறையில் காரைப் பயன்படுத்தலாம்.

இப்படிச் செலவு களைக் குறைப்பது ஒருபக்கம் என்றால், வருமானத்தை உயர்த்துவது எப்படி என்பதற்கான வழிகளைக் கண்டறிவது இன்னொரு பக்கம். வீட்டில் ஒருவர் சம்பாதிப்பார், மற்றவர்கள் அந்த ஒரு சம்பாத்தியத்தைச் சார்ந்திருக்கலாம் என்று இருக்காமல், தங்களால் முடிந்த அளவுக்கு எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்று பார்க்கலாம்.

பெண்கள் தங்களுக்குத் தெரிந்த வேலைகளைச் செய்வதுடன், உயர்நிலை மற்றும் கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்த அளவுக்கு வேலை செய்யும்படி ஊக்குவிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு வருமானம் ஈட்டித் தர நினைக்கிறார்களா என்பதே முக்கியம்.

கொரோனா பாதிப்பு விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நாம் உயிர்வாழ்வது முக்கியம்... உடல், நிதி, மன மற்றும் உணர்வுரீதியாக. இதை ஒரு பிரச்னையாகப் பார்ப்பதற்கு பதில், புதிய விஷயங்களை முயல்வதற்கான வாய்ப்பாகப் பாருங்கள்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் புவனா ஸ்ரீராம். கொரோனாகாலக் கஷ்டங்களை எளிதாகக் கடக்க இந்த வழிகாட்டல் நிச்சயம் உதவும்!

அத்தியாவசியம் மட்டுமே என் சாய்ஸ்!

கிறிஸ்ட்டின் வசந்தா, ஆசிரியை

சிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்! - கொரோனாகால வழிகாட்டல்

“முதலில் எனக்கும் என் கணவருக்கும் வரும் வருமானத்தைப் பட்டியலிட்டுக் கொள்வேன். பிறகு, வீட்டுக்குத் தேவையான மிகவும் அத்தியாவசியப் பொருள்களுக்காகக் குறிப்பிட்ட தொகையைப் பிரித்து வைத்துவிடுவேன். தற்போது வாடகை, லோன் போன்றவை செலுத்தத் தேவையில்லையென்றாலும், பல இடங்களில் வசூலிக்கவே செய்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இந்த நிலை எனக்கும் வரக்கூடும் என்பதால், அதற்காகவும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவைக்கிறேன். நீண்ட நாள்கள் கெடாமலிருக்கும் மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கி வைத்து, அதற்கேற்ப உணவுகளையும் தயார் செய்கிறேன். ஊரடங்கு காலத்தில் செல்போன், கணினி போன்றவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் அவற்றுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளன. எனவே, பயன்பாடில்லாத நேரத்தில் மின்சாரம் தொடர்பான கருவிகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அடிக்கடி பார்க்கிறேன். தவணை முறையில் பொருள் வாங்குவதையும் தவிர்த்திருக்கிறேன். பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காகக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.’’

செலவுகளைப் பகிர்ந்துகொள்கிறோம்!

லதா, குடும்பத் தலைவி

சிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்! - கொரோனாகால வழிகாட்டல்

“எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். என் வீட்டுக்கு அருகில் வசிக்கும் என் சகோதரியுடன் இணைந்து பகிர்ந்து வாழ்ந்து வருகிறோம். என் சகோதரியுடன் சேர்ந்து மொத்தமாக மளிகைப் பொருள்களை வாங்கிப் பங்கிட்டு வைத்துவிட்டேன். அனைவரும் ஒரே வீட்டில் இருப்பதால் இரட்டிப்பு செலவுதான் என்றாலும், தனித்தனியாகச் செலவழிப்பதைவிட, கூட்டுக் குடும்பமாக மாறிப் பகிர்ந்துகொள்வதால் அதிகப்படியான செலவுகள் குறைந்திருப்பதுதான் நிதர்சனம். ஒருத்தருக்காக டி.வி., ஏ.சி போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்த்துவிட்டு, எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம், டி.வி பார்க்கிறோம். இதனால் மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மொத்தத்தில் பகிர்வதிலிருக்கும் நன்மைகளை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம்.’’

செலவுகளைக் குறைக்கும் சூட்சுமம்!

பானுமதி, குடும்பத் தலைவி

சிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்! - கொரோனாகால வழிகாட்டல்

“ `சிக்கனமாகச் செலவழித்து, நிம்மதியான வாழ்க்கை வாழப் பெண்களால் மட்டுமே முடியும்’ என்பது என் நம்பிக்கை. நாங்கள் விவசாயக் குடும்பம். எங்கள் வீட்டில் மாடு இருப்பதால் பால், தயிர் போன்றவற்றுக்குக் குறைபாடு இருக்காது. குறைந்த விலைக்கு அவற்றை விற்கவும் செய்கிறேன். இதனால் செலவு மிச்சமாகி, லாபம் அதிகரிக்கிறது. அதேபோல மொட்டைமாடியில் சிறிய தோட்டம் வைத்திருக்கிறேன். இதனால், தக்காளி போன்ற சில காய்கறிகளை வெளியில் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஊரடங்கு ஆரம்பத்திலிருந்து மேலும் மூன்று காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கியிருக்கிறேன். மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வீட்டிலிருந்தாலும், மாவு மற்றும் மசாலாப் பொருள்களை அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்து உபயோகப்படுத்துகிறேன். இதனால் மின்சாரச் செலவு வெகுவாகக் குறைந்திருக்கிறது. நம்மிடம் எந்தெந்தப் பொருள்கள் இருக்கின்றன, எவை அநாவசியமாக இருக்கின்றன, எவை அத்தியாவசியம் என மூன்று பட்டியலாகப் பிரித்து, அதற்கேற்றபடி மளிகைச் சாமான்களை வாங்குகிறேன். ரேஷன் கடையைப் பயன்படுத்திக்கொள்வதால் மேலும் செலவு குறைகிறது.’’

ஆடம்பரச் செலவுகளுக்குத் தடை!

ரோஸ் மேரி, குடும்பத் தலைவி

சிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்! - கொரோனாகால வழிகாட்டல்

‘‘ஊரடங்குக்கு முன்பிருந்த என் கடந்தகால பட்ஜெட்டை எடுத்துப் பார்த்தேன். அதில் ஆடம்பரச் செலவுகள் அதிகம். அவை முழுவதும் இந்த மாதத்தில் என்னுடைய சேமிப்பாகிவிட்டன. கிரெடிட் கார்டு பயன்பாட்டில் மறைமுகக் கட்டணங்கள் அதிகம் என்பதால், கிரெடிட் கார்டு பயன்பாட்டை முழுமையாகத் தவிர்த்திருக்கிறேன். வீட்டின் பொருளாதாரச் சூழலைத் தெரிந்துகொண்டு, காய்கறி மற்றும் இதர மளிகைப் பொருள்களைத் தேவையான நாள்களுக்கு வாங்கி, அவற்றை எப்படி, எவ்வளவு நாள்களுக்குப் பயன்படுத்தலாம், எதை முதலில் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுத்துகிறேன். பட்ஜெட் போடுவது பெரிதல்ல, அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியம்.’’

தொகுப்பு: கானப்ரியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு