Published:Updated:

`ஊருக்குப்போக வழியில்லை; பெண் தொழிலாளியை தாக்கிய கட்டட உரிமையாளர்!’- புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை

தொழிலாளர்
தொழிலாளர்

டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தைக் கட்டட உரிமையாளர் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் டெல்லியில் கட்டுமானப் பணிக்காக வந்துள்ளனர். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே தற்காலிக வீடுகள் அமைத்து தங்கி வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லை. சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். டெல்லியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது தெரிந்த அந்தக் குடும்பத்தினர் ரயில் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களால் பீகார் செல்லும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை. ஊருக்குத் திரும்ப முடியாத விரக்தியில் மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற இடத்துக்கே திரும்பியுள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்த நிலையில், அந்தக் கட்டட உரிமையாளர் அந்தக் குடும்பத்தை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி தாக்கியுள்ளார். உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்த மருத்துவர் ஒருவர் சென்றுள்ளார். அந்தப்பெண் நடந்தவற்றைக் கூறி கண்ணீர் வடித்துள்ளார்.

`விவசாயிகளின் தற்கொலைகளைக் கண்டிருப்போம்.. இனி ஆசிரியர்கள்!'- தெலங்கானா ஆசிரியர் வேதனை

இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள மருத்துவர் சோனாலி, ``சத்தம் கேட்டு என் வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்தேன். நான் கட்டடப்பணிகள் நடைபெறும் இடத்துக்கு விரைந்தபோது அந்தப்பெண் மீராவைப் பார்த்தேன். கட்டட உரிமையாளர் தன்னை அடித்து துன்புறுத்திவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டதாகக் கூறினார்.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

ரயில்நிலையம் சென்று அவர்கள் எந்த ஊர்களுக்கு ரயில்கள் செல்கிறது என்பது குறித்து விசாரித்துள்ளனர். முஸாஃபர்பூர் வரை மட்டுமே ரயில் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். அந்தப்பெண்ணின் ஊர் அங்கிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறினார். அங்கிருந்து எவ்வளவு தூரம் நடப்பது, அதனால்தான் மீண்டும் திரும்பிவிட்டதாகத் தெரிவித்தார். அந்தக் கட்டட உரிமையாளர்களுக்கும் அவர்களுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருந்தது. வேலை பார்த்ததற்கு பாதி கூலி மட்டுமே கொடுத்துள்ளார். மீதி பணம் தர வேண்டியுள்ளது. மாலை 4.30 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் இந்தச்சம்பவம் நடந்துள்ளது.

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை எட்டி உதைத்து அந்த இடத்தைக் காலி செய்யக் கூறியுள்ளார். அந்தப்பெண் தனது சூழ்நிலையை எடுத்துச் சொல்லிக் கெஞ்சியும் அவர் கேட்க வில்லை. கற்களைக் கொண்டு தாக்கியுள்ளார். உதவி கேட்டு என்னை அந்தப்பெண் அழைத்தார். அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை என்னிடம் விவரித்தார்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அந்தப்பெண் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவர் சோனாலி பேசுகையில், ``நான் இன்று இந்தச் சம்பவத்தில் தலையிட வேண்டும் என நினைத்தேன். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்கள் இல்லை. இதுபோன்ற கட்டட உரிமையாளர்கள் அடக்குமுறையுடனும், வன்முறையுடனும் செயல்படுகின்றனர்” என வேதனை தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு