Published:Updated:

`40 ஆண்டுகளாக நிம்மதி இழந்தோம்; அவரின் உடலை இங்கு புதைக்கக் கூடாது'- சேலம் கலெக்டரிடம் மக்கள் புகார்

``எங்க கிராமத்தை இரவு பகலாக காவல்துறையினர் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் குறைந்தது 40 ஆண்டுகளாக நிம்மதி இழந்து வாழ்ந்து வந்தோம்.''

ராமமூர்த்தி நகர்
ராமமூர்த்தி நகர் ( எம். விஜயகுமார் )

`கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் மணிவாசகத்தின் உடலை அவருடைய சொந்த ஊரான சேலம் ராமமூர்த்தி நகருக்குக் கொண்டு வரக் கூடாது. அவருடைய உடல் இங்கு கொண்டு வந்து புதைத்தால் அவர் சார்ந்த இயக்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக வருவார்கள். கிராமத்தில் இருக்கும் படித்த இளைஞர்களிடம் பேசி மூளைச் சலவை செய்து இயக்கத்திற்குக் கூட்டிட்டுப் போயிடுவார்கள். எங்க ஊரின் அமைதி சீர்குலைந்து விடும்' என்று ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த சிலர் கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்தார்கள்.

மணிவாசகம்
மணிவாசகம்

இதுபற்றி கலெக்டரிடம் மனு கொடுத்த காமராஜ், ``நாங்களும் மணிவாசகமும் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் மாவோயிஸ்ட் என்ற ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். நாங்கள் வேலையுண்டு வெட்டியுண்டு என்று வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். மணிவாசகத்தால் எங்க கிராமத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டதோடு காவல்துறை வட்டாரத்தில் கறுப்பு முத்திரையும் குத்தப்பட்டது. மணிவாசகத்தால் அவருடைய குடும்பம் மட்டுமல்ல எங்க கிராமமே பாதிக்கப்பட்டது.

எங்க கிராமத்தை இரவு பகலாக காவல்துறையினர் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் குறைந்தது 40 ஆண்டுகளாக நிம்மதி இழந்து வாழ்ந்து வந்தோம். தற்போது அவரை கேரளக் காவல்துறை சுட்டுக் கொன்றிருப்பதால் எங்க ஊரின் மேல் இருந்த களங்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், எங்க கிராமத்திற்கு மணிவாசகத்தின் உடலைக் கொண்டுவருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

காமராஜ்
காமராஜ்

நாங்கள் மணிவாசகத்தின் உடலை எங்க ஊருக்குக் கொண்டு வருவதை அனுமதிக்க மாட்டோம். அவருடைய உடலை இங்கு கொண்டு வந்து புதைத்தால் அவர் சார்ந்த இயக்கத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக வருவார்கள். கிராமத்தில் படித்த இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசி மூளைச் சலவை செய்து இயக்கத்திற்குக் கூட்டிட்டுப் போயிடுவார்கள். எங்க ஊரின் அமைதி சீர்குலைந்து விடும்.

அதனால் அவருடைய உடலை இங்கு புதைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு பா.ம.க வில் இருந்தேன். தற்போது எந்தக் கட்சியிலும் இல்லை. எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. நாங்களாகவேதான் வந்தோம்'' என்றவர்கள் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றே கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்றார்கள்.

விநாயகம்
விநாயகம்

இதுபற்றி தமிழ் தேச மக்கள் முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விநாயகம், ``தோழர் மணிவாசகத்தின் சொந்த கிராமமான ராமமூர்த்தி நகர் பொதுமக்கள் யாரும் அவருடைய உடலைக் கொண்டு வரக்கூடாது என்று கூறவில்லை. உளவுத்துறை திட்டமிட்டு ஆளுங்கட்சியினரையும், சாதி அரசியல் செய்யக் கூடிய சிலரையும் தூண்டிவிட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்திருக்கிறார்கள். இவர்களின் பேச்சை அங்கிருக்கும் மக்கள் நம்ப மாட்டார்கள். அந்த கிராம மக்களே இவர்களின் சிந்தனையை முறியடிப்பார்கள்'' என்றார்.