Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ்

பிட்ஸ்...

நாணயம் பிட்ஸ்...

ரூ.26 கோடிக்கு விலைபோன அரூப ஓவியம்

ஓவிய விரும்பிகள் இடையே புகழ்பெற்ற பெயர் சஃப்ரன்ஆர்ட்.காம். இந்த நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஓவிய விற்பனையில், இந்தியாவின் மிக முக்கியமான அரூப ஓவியர் வாசுதேவ் எஸ்.கெய்ட்டன்ட் வரைந்த ஓவியம் ஒன்று ரூ.26.90 கோடிக்கு விலைபோயிருக் கிறது. 1982-ம் ஆண்டு வரைந்த இந்த அரூப ஓவியத்துக்கு பெயரைக்கூட கெய்ட்டன்ட் வைக்கவில்லை. ஆனால், அந்த ஓவியம்தான் இப்போது ரூ.26 கோடிக்குமேல் விற்பனை ஆகியிருக்கிறது. புபென் காக்கர் வரைந்த ‘டிரேட்ஸ்மென்’ ஓவியம் ரூ.3.72 கோடிக்கும், ராம்குமார் வரைந்த ‘கம்போசீசன்’ ஓவியம் ரூ.2 கோடிக்கும் விலை போயிருக்கிறது. சஃப்ரன்ஆர்ட்.காம் சமீபத்தில் நடத்திய ஒருநாள் ஏலத்தில் மொத்தம் 59 கோடி ரூபாய்க்குமேல் ஓவியங்கள் விலைபோயின.

# ஓவியமும் லாபம் தரும் சொத்துதான்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
நாணயம் பிட்ஸ்...

காக்னிசன்ட்... புதிய சி.எம்.டி ராம்குமார் ராமமூர்த்தி!

ஐ.டி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராம்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். காக்னிசன்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தைக் கட்ட லஞ்சம் கொடுக்கப்பட்ட சர்ச்சை ஒருபக்கம், ஐ.டி தொழில் வளர்ச்சி குறைந்துவருவது இன்னொரு பக்கம் எனப் பல சவால்களைச் சந்தித்துவரும் நிலையில் ராம்குமார் ராமமூர்த்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தில் மொத்தம் 2.88 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இரண்டு மில்லியன் டாலரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று 16 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.

# புதிய தலைமையில் வளர்ச்சி பெருகட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏர் இந்தியா... வெற்றிகரமாக திரட்டிய ரூ.7,000 கோடி!

ஏர் இந்தியா நிறுவனம் தற்போது ரூ7,000 கோடிக்குப் புதிதாக பாண்டுகளை வெளியிட்டு வெற்றிகரமாகப் பணத்தைத் திரட்டியிருக்கிறது. 6.99% வட்டி கிடைக்கும் இந்த பாண்டில் டிரஸ்ட் கேப்பிட்டல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனங்கள் தலா ரூ.2,000 கோடிக்கும், எஸ்.பி.ஐ ரூ.1,100 கோடிக்கும் விண்ணப்பம் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே ரூ.64,000 கோடி கடன் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.19,435 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது!

# ஏர் இந்தியாவுக்கு ஏறுமுகம் வருமா?

போராடும் வங்கி ஊழியர்கள்!

வங்கி ஊழியர்களுக்கு 12% சம்பள உயர்வு தர அரசுத் தரப்பில் ஒப்புக்கொண்டாலும், அதனை ஏற்க மறுத்து போராடத் தயாராகின்றன ஊழியர் சங்கங்கள். வங்கி ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு அளிக்கலாம் என மத்திய அரசு முதலில் சொன்னது. இது போதாது என வங்கி சங்கங்கள் சொன்னதைத் தொடர்ந்து, தற்போது 12% என்று சொல்லியிருக்கிறது. 1% சம்பள உயர்வைக் கூடுதலாக அளித்தால், அதனால் அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு ரூ.526 கோடி. எனவே, இன்னும் 2% கூடுதலாகத் தரலாமே என்பது வங்கி ஊழியர்களின் எதிர்பார்ப்பு!

# நிறைவேறுமா பார்க்கலாம்!

நிறுத்தப்படும் சர்க்கரை ஆலைகள்!

தமிழகத்தில் மொத்தமுள்ள 25 சர்க்கரை ஆலைகளில் 14 ஆலைகள், போதிய அளவு கரும்பு இல்லாததால், செயல்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்படும் நிலைக்குச் சென்றுள்ளன. கடந்த 2018-19-ம் ஆண்டில் 8.83 லட்சம் டன் சர்க்கரை தமிழகத்தில் உற்பத்தியானது. இது 2017-18-ம் ஆண்டைவிட சுமார் 1.48 லட்சம் டன் அதிகம். தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி உயர்ந்த அளவுக்கு, கரும்பு விளைச்சல் அதிகரிக்கவில்லை. வேறு மாநிலங்களிலிருந்து கரும்பு கொண்டுவந்தால், உற்பத்திச் செலவு அதிகரித்துவிடும் என்பதால், சர்க்கரை ஆலைகள் நிறுத்தப்படும் நிலை!

# கசக்கும் செய்தி!

வெளிநாடுகளில் இந்தியர்கள்!

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்டியலில் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. உலக அளவில் 27 கோடி பேர், பிறந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளில் வசிக் கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 1.75 கோடி பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். 51 லட்சம் வெளிநாட்டவர் இந்தியாவில் வசிக்கிறார்கள். 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கை ஒரு லட்சம் குறைந்துள்ளது. இதற்கு ஆதார் உள்ளிட்டவை காரணமாகச் சொல்லப்படுகிறது.

# தாய்நாடே சொர்க்கம்!

நாணயம் பிட்ஸ்...

சிக்கலில் ஜி.சி.எக்ஸ்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் துணை நிறுவனமான ஜி.சி.எக்ஸ் நிறுவனம் திவால் நிலைக்குச் சென்றிருக்கிறது. இந்த நிறுவனம் 350 மில்லியன் டாலர் மதிப்பு பாண்டுகளை வெளி யிட்டிருந்தது. இந்த பாண்டுகள் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியன்று முதிர்ச்சியடைந்தது. ஆனால், இதற்கான பணத்தை தர முடியாததால், திவாலுக்கு விண்ணப்பித்துள்ளது ஜி.சி.எக்ஸ்!

# என்ன ஆச்சு அனில்?

நாணயம் பிட்ஸ்...

நெருங்கும் தீபாவளி... செலவழிக்கத் தயாராகும் மக்கள்!

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பண்டிகைக்கு நீங்கள் எவ்வளவு செலவழிக்கத் தயார் என்கிற கேள்வியை இந்தியாவில் 162 நகரங்களில் உள்ள மக்களிடம் கேட்டு, ஆன்லைன் சர்வேயை நடத்தியிருக் கிறது லோக்கல்சர்க்கிள்ஸ் என்கிற நிறுவனம். இந்த சர்வேயில் பதில் சொன்னவர்களில் 31% பேர், ரூ.10,000 முதல் ரூ.50,000 வரையும், 4% பேர் ரூ.50,000 மேல் செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருக் கிறார்கள். ஆனால், 17% பேர் இந்தப் பண்டிகையில் எந்தச் செலவும் செய்யப்போவதில்லை என்று சொல்லி யிருக்கிறார்கள். 12% பேர் வாகனங்கள், 12% பேர் கேட்ஜெட், 18% பேர் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

# களைகட்டட்டும் தீபாவளி விற்பனை!