பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ்

பிட்ஸ்

ரூ.826 கோடி தானம்... முதலிடத்தில் ஷிவ் நாடார்!

நாணயம் பிட்ஸ்...

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் இந்த நிதி ஆண்டில் ரூ.826 கோடியைத் தானமாகத் தந்து, இந்தியாவிலேயே மிக அதிகமாக தானம் தந்த தொழிலதிபர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ரூ.402 கோடியைத் தானமாகத் தந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திலும், ரூ.353 கோடியைத் தந்து விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் நூறு பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிதி ஆண்டில் இதுவரை ரூ.4,300 கோடியைத் தானமாகத் தந்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களிலுள்ள நிறுவனங்களே 63% அளவுக்குத் தானமாகத் தந்திருக்கின்றன.

ஷிவ் நாடாரின் தானம் சிறக்கட்டும்!

நாணயம் பிட்ஸ்...

அடமானம்வைத்த பங்கை மீட்டெடுத்த சஜ்ஜன் ஜிண்டால்!

`அடமானம்வைத்த பொருளை எப்பாடுபட்டாவது மீட்டுவிட வேண்டும்’ என்பார்கள். தன்னிடமிருக்கும் பங்குகளை அடமானம்வைத்து, ஏறக்குறைய ரூ.2,500 கோடி வரை திரட்டியிருந்தார் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால். அடமானம் வைத்த இந்தப் பங்குகளை சஜ்ஜன் எப்படி மீட்கப்போகிறார் எனப் பலரும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்று, அடமானம் வைக்கப்பட்டிருந்த ரூ.1,150 கோடி மதிப்புள்ள பங்குகளை விடுவித்திருக்கிறார் சஜ்ஜன் ஜிண்டால். இந்த நிறுவனம் கடந்த மாதம் 500 மில்லியன் டாலரை சர்வதேசச் சந்தையில் பாண்டு வெளியிட்டதன் மூலம் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் சஜ்ஜன்!

நாணயம் பிட்ஸ்...

கிரிப்டோகரன்சி... தயாராகும் ஃபேஸ்புக்!

`டிஜிட்டல் கரன்சி’ என்று சொல்லப்படும் கிரிப்டோ கரன்சியை உருவாக்கி, அதை உலகம் முழுக்க நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அதிதீவிரமாகச் செயல்பட்டுவருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த நிறுவனம் லிப்ரா (Libra) என்ற கிரிப்டோகரன்சியை உருவாக்கி, அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர கடந்த சில ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. இதன் முக்கிய நடவடிக்கையாக, தற்போது 21 நிறுவனங்கள் ஃபேஸ்புக்கின் லிப்ராவை நடைமுறைப்படுத்துவதில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஊபர் டெக்னாலஜிஸ், ஸ்பாட்டிஃபை டெக்னாலஜிஸ் போன்ற சில சர்வதேச நிறுவனங்களும் அடக்கம்.

வெல்டன் ஃபேஸ்புக்!

நாணயம் பிட்ஸ்...

கடன் தள்ளுபடி தந்து ஏர் இந்தியாவை விற்கும் மத்திய அரசு!

ஏர் இந்தியா நிறுவனத்தை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இந்த நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.58,351 கோடி கடன் இருக்கிறது. ரூ.10 ஆயிரம் கோடி மட்டும் ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொண்டால் போதும்; மத்திய அரசு ஏறக்குறைய ரூ.20 ஆயிரம் கோடியை ஏற்றுக்கொள்ளச் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

விற்பதைத் தவிர வேறு வழியில்லை!

நாணயம் பிட்ஸ்...

காலியாகக் கிடக்கும் 11 லட்சம் வீடுகள்!

இந்தியா முழுக்க 11 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் காலியாகவே கிடப்பதாக நைட் ஃப்ராங்க் இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் பத்து மாநிலங்களில் 8.64 லட்சம் வீடுகள் காலியாக இருக்கின்றனவாம். இவற்றில் 19% வீடுகள் மகாராஷ்டிராவில் உள்ளன. குஜராத்தில் 11% வீடுகளும், உ.பி-யில் 9% வீடுகளும் விற்காமல் கிடக்கின்றனவாம். மகாராஷ்டிராவில் குருகிராம், பூனே, கிரேட்டர் மும்பை ஆகிய நகர்ப் பகுதிகளில் இவை அதிகமிருக்கின்றனவாம்!

ரியல் எஸ்டேட் எப்போது மீண்டெழும்?

நாணயம் பிட்ஸ்...

ஸ்டார்ட்அப் முதலீடு... கலக்கும் ரத்தன் டாடா!

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. 81 வயதாகும் இவர், ஓய்வு பெற்ற பிறகு பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துவருகிறார். ‘‘ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நான் முதலீடு செய்யத் தொடங்கியதே ஒரு விபத்துதான். டாடா நிறுவனத்திலிருந்தபோது ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் என்னால் முதலீடு செய்ய முடிந்ததில்லை. ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கும் ரத்தன் டாடா, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், ஸ்நாப்டீல், க்யூர்ஃபிட், க்ளைமாசெல், கார்தேக்கோ, லென்ஸ் கார்ட், நெஸ்ட்அவே, டாக்ஸ் ஸ்பாட் எனப் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.

ரத்தன், எப்போதும் சிறந்த உதாரண புருஷர்தான்!