பிரீமியம் ஸ்டோரி

டாலர் கீழே, தங்கம் மேலே!

அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருவதால், இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. ஒரு டாலரின் மதிப்பு 68.90-ஆக தற்போது வர்த்தகம் ஆகிறது. டாலரின் மதிப்பு குறைந்தால், தங்கம் விலை இறங்கும். இதனால் நம்மவர்கள் குறைந்த செலவில் தங்கம் வாங்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த சமயத்தில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு அவுன்ஸ் (சுமார் 31 கிராம்) தங்கத்தின் விலை தற்போது 1,438 டாலர் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத விலை. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

#நம்மவர்கள் தங்கம் வாங்கக்கூடாது என்று உலக அளவில் சதி நடக்கிறதோ என்னவோ!

மியூச்சுவல் ஃபண்ட்... சச்சின் பன்சால் அடுத்த டார்க்கெட்!

நாணயம் பிட்ஸ்...

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தினை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்றதன்மூலம் கிடைத்த பணத்தைப் பல புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார் சச்சின் பன்சால். அந்த வகையில், பன்சாலின் அடுத்த முதலீடு எஸ்ஸெல் மியூச்சுவல் ஃபண்ட் (Essel MF) நிறுவனத்தில் இருக்கும் என்கிறார்கள். எஸ்ஸெல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,040 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சில நூறு கோடி ரூபாயை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் பன்சால். எஸ்.ஆர்.இ.ஐ (SREI) நிறுவனமும் எஸ்ஸெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

#ஃப்ளிப்கார்ட் மாதிரி, மியூச்சுவல் ஃபண்டிலும் அசத்துங்க பன்சால்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

300% உயர்ந்தது சீனாவின் கடன்!

சீனாவின் கடன் அதனுடைய ஜி.டி.பி-யைப்போல 300% அதிகரித்திருக்கிறது. கடன் வாங்கியாவது பொருளாதார வளர்ச்சியைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் சீனா எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் சீனாவின் கடன் ஏகத்துக்கும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு சீனாவின் ஜி.டி.பி-யைப்போல 297% இருந்தது, இந்த ஆண்டு 303 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது, சீனாவின் மொத்தக் கடன் 40 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருக் கிறது. இது உலக நாடுகளின் மொத்தக் கடனில் சுமார் 15% ஆகும்.

#கடன் அன்பை முறிக்கும்; உயிரையும் மாய்க்கும் என்பது சீனாவுக்குத் தெரியாதா?

வங்கித் துறையையும் அச்சுறுத்தும் #MeToo புகார்கள்!

நாணயம் பிட்ஸ்...

பிரபலங்களால் பாலியியல் தொல்லைக்குள்ளான பெண்களில் சிலர் #MeToo என்கிற டிரெண்டிங்கில் புகார் செய்வது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி யிருக்கிறது. அரசியல், சினிமா என சில பிரபலங்களுடன் மட்டுமே இந்த #MeToo புகார்கள் நின்றுவிடவில்லை; வங்கித் துறை அதிகாரிகள்மீதும் இந்தப் புகார் பாய்ந்து பயத்தைக் கிளப்பியிருக்கிறது. கடந்த 2018-19-ம் ஆண்டில் 18 பொதுத் துறை வங்கிகளின்மீது 91 #MeToo புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 68 புகார்கள் அந்த ஆண்டிலேயே விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. 23 புகார்கள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 14 தனியார் வங்கிகளில் 205 #MeToo புகார்கள் வந்திருக்கின்றன. இவற்றில் 193 புகார்கள் அந்த ஆண்டிலேயே விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன.

#ஆண்களே, இனியாவது ஜென்டில்மேன்களாக நடந்துகொள்ளுங்கள்!

ஸ்டேட் பேங்க் டு வேர்ல்டு பேங்க்!

நாணயம் பிட்ஸ்...

வங்கித் துறையில் நம் நாட்டவர்களுக்கு இருக்கும் திறமைக்கு மீண்டுமொரு அங்கீகாரம் கிடைத் திருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநராக இருந்த அன்சுலா காந்த், இப்போது உலக வங்கியின் மேலாண்மை இயக்குநராகவும் முதன்மை நிதி நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். உலக வங்கி தரும் கடன்களில் இருக்கும் ரிஸ்க் தொடர்பான விஷயங்களைக் கவனிக்கும் பொறுப்பு அன்சுலா காந்த் வசம் தரப்பட்டிருக்கிறது.

#கலக்குங்க மேடம்!

நாணயம் பிட்ஸ்...

டிஜிட்டல் பணப் பரிமாற்றம்... நான்காம் இடத்தில் தமிழகம்!

ஆன்லைன்மூலம் பணப் பரிமாற்றம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் கர்நாடகா இருக்கிறது. ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்கிறமாதிரி, அந்த மாநிலம் மிகப் பெரிய அளவில் டிஜிட்டல்மயமாகி இருப்பதாக ‘ரேசர்பே’ நிறுவனம் சொல்லியிருக்கிறது. ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் இரண்டாம் இடத்தில் மும்பையும், மூன்றாம் இடத்தில் டெல்லியும், நான்காம் இடத்தில் தமிழகமும், ஐந்தாம் இடத்தில் ஆந்திரப்பிரதேசமும் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு நகரங்களில் அதிக அளவில் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் நடக்கிறது.

#கொங்கு மண்டலம் நம்பர் ஒன்தான்!

அமித் ஷாவும் ஏர் இந்தியாவும்!

நாணயம் பிட்ஸ்...

ஏர் இந்தியா நிறுவனத்தின் முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்கான அமைச்சரவை கமிட்டியின் தலைவர் பதவிக்கு அமித்ஷா தேர்வு செய்யப்பட்டிருக் கிறார். இந்த கமிட்டியில் இருந்த நிதின் கட்காரி விடுவிக்கப்பட்டு, அமித்ஷா புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அமித் ஷா தவிர, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக விவகாரம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆகியோரும் இந்த கமிட்டியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

#ஏர் இந்தியா பிரச்னை இனியாவது தீருமா?

முதலீட்டைத் திரட்ட பி.இ நிறுவனங்களை நாடும் ரயில்வே!

நாணயம் பிட்ஸ்...

ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்தத் தேவையான முதலீட்டினை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது ரயில்வே அமைச்சகம். இந்தியா முழுக்க அதிக வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கும் இருபது ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இதற்கான முதலீட்டை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களிடமிருந்து பெற ரயில் அமைச்சகம் களமிறங்கியிருக்கிறது!

# டிக்கெட் கட்டணத்தை உயர்த்திடாதீங்க ஆபீஸர்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு