பிரீமியம் ஸ்டோரி

ஃபாஸ்ட்டாக் 2.0

நெடுஞ்சாலைகளில் கார்களில் பயணம் போகிறவர்கள் இனி டோல்கேட்டில் பணம் கட்டுவதற்குப் பதில், ஃபாஸ்ட்டாக் மூலம் அரை நொடியில் பணம் கட்டிவிட்டு பயணத்தைத் தொடரலாம். வருகிற டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா முழுக்க உள்ள 450-க்கு மேற்பட்ட டோல்கேட்டுகளில் ஃபாஸ்ட்டாக் மூலமே பணம் செலுத்த வேண்டும். இந்த ஃபாஸ்ட்டாக்கினை ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ உள்பட 22-க்கும் மேற்பட்ட வங்கிகள் அளிக்கின்றன. ஆனால், ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி, இந்த ஃபாஸ்ட்டாக் கார்டுமூலம் பெட்ரோல், டீசல் போடும்படி மாற்றித் தந்திருக்கிறது.

#இனி காத்திருக்கத் தேவையில்லை!

நாணயம் பிட்ஸ்...

இரண்டு வாழைப்பழம் ரூ.442

இரண்டு வாழைப்பழத்தின் விலை அதிகபட்சம் ரூ.20 இருக்குமா? ஆனால், ரூ.442 பில் போட்டிருக் கிறது சண்டிகரில் உள்ள ஜெ.டபிள்யூ மேரியட் ஹோட்டல். இந்த ஹோட்டலில் தங்கிய இந்தி நடிகர் ராகுல் போஸ் இரண்டு வாழைப்பழங்களுக்கு ஆர்டர் செய்தார். இதற்குத் தரப்பட்ட பில்லில் ரூ.442 என்றிருந்ததைப் பார்த்துப் பதறிப்போனவர், அதை போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட, அந்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது சண்டிகர் வருமான வரி அலுவலகம். ஆனால், அகில இந்திய ஹோட்டல்கள் கூட்டமைப்போ, ‘‘இதில் தவறு ஒன்றுமில்லை. ரோட்டோரக் கடையில் ஒரு டீ விலை ரூ.10. ஸ்டார் ஹோட்டலில் ரூ.250. ரோட்டோக் கடையில் உள்ள விலையை ஸ்டார் ஹோட்டலிலும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்’’ என்று கேட்டிருக்கிறது.

#எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குங்குறாங்களே, அது இதுதானா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாணயம் பிட்ஸ்...

பெஸ்ட் சிட்டி பெங்களூரு!

கல்லூரி மற்றும் பல்கலையில் படிக்கும் மாணவர்களின் பார்வையில், பெஸ்ட் சிட்டி எது என்கிற பட்டியலை வெளி யிட்டிருக்கிறது ‘க்வாக்குவரெல்லி சிமோண்ட்’ (QS) என்கிற நிறுவனம். இந்தப் பட்டியலில் 81-வது இடம் பெங்களூருக்குக் கிடைத்திருக்கிறது. மும்பைக்கு 85-வது இடமும், டெல்லிக்கு 107-வது இடமும், சென்னைக்கு 117-வது இடமும் கிடைத்திருக்கிறது.

கடந்த ஆண்டைவிட சென்னை இரண்டு இடங்களுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. தங்கும் வசதி, படித்து முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்பு எனப் பல காரணிகளை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறதாம்!

#100 இடங்களுக்குள் சென்னை எப்போது வரும்?

கர்க் போனார், குமார் வந்தார்!

இதுவரை நிதித் துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்த்ர கர்க் திடீரென எரிசக்தித் துறை செயலாளராக மாற்றப்பட, அதில் அவருக்கு இஷ்டமே இல்லை. எனவே, சீக்கிரமே வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டார்.

இதைத் தொடர்ந்து நிதித் துறை செயலாளராக யாரை நியமிப்பது என்று யோசித்த நிதி அமைச்சகம், ஜார்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜீவ் குமாரை அந்தப் பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறது.

#சும்மா தீயா வேலை செய்யணும் சாரு..!

நாணயம் பிட்ஸ்...

தயாரிப்பைக் குறைத்த கார் நிறுவனங்கள்!

கார் விற்பனை கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து கார் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிதாகத் தயாராகும் கார்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மட்டும் 11% அளவுக்கு கார் தயாரிப்பைக் குறைத்துக்கொண்டுள்ளது. இந்த மூன்று மாதங்களில் ஆறு லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டில் இதே காலத்தில் 6.90 லட்சம் கார்கள் விற்பனையாகின.

#விற்பனை குறைஞ்சாலும் விலையைக் குறைக்கமாட்டேன் என்கிறார்களே!

வரவுக்கு மீறி செலவழிக்கும் மத்திய அரசாங்கம்!

வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற கதையாக இருக்கிறது மத்திய அரசாங்கத்தின் செயல்பாடு. 2019-20-ல் மத்திய அரசின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.7.03,999 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 61.4% அதிகம். கடந்த ஏப்ரல் - ஜூனில் மத்திய அரசு செய்த செலவு ரூ.7,21,705 கோடி. ஆனால், வருமானமாக வந்ததோ ரூ.2,89,605 கோடி மட்டுமே. ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டுமே ரூ.1,41,000 கோடியைக் கட்டுகிறது மத்திய அரசாங்கம்.

#அக்கவுன்ட்ஸை நல்லாப் பாருங்க ஆபீஸர்ஸ்!

22% அதிகரித்த பா.ஜ.க-வின் சொத்து மதிப்பு!

பிசினஸ் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரிக்கிற மாதிரி, அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் சொத்து மதிப்பு கடந்த 2017-ல் ரூ.1,213 கோடியாக இருந்தது, 2018-ல் 22% உயர்ந்து, ரூ.1,483 கோடியாக அதிகரித்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.680 கோடியிலிருந்து, ரூ.724 கோடியாக உயர்ந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.463 கோடியிலிருந்து ரூ.482 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.854 கோடியிலிருந்து ரூ.724 கோடியாகக் குறைந்திருக்கிறது.

#கட்சியோடு சொத்து மதிப்பும் தேய்கிறதே!

நாணயம் பிட்ஸ்...

200 யூனிட் வரை கட்டணமில்லை!

புது டெல்லி மாநிலத்தின் முதல்வர் அரவிந்த், தன்னுடைய மாநில மக்களுக்கு ஸ்வீட் ஷாக்கினைத் தந்திருக்கிறார். அந்த மாநில மக்கள் 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. 400 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தினால், 50% மானியம் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்துக்குத் தேர்தல் வரப்போகிறது. தேர்தலில் ஜெயிக்க இப்போதே சலுகைகளை அறிவிக்கத் தொடங்கிவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்!

#பா.ஜ.க-வுக்கு சரியான போட்டி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு