பிரீமியம் ஸ்டோரி

ஃப்ளிப்கார்ட்டின் ஆன்லைன் வீடியோ... அமேசானுக்குப் போட்டியா...?

நாணயம் பிட்ஸ்...

‘ஸ்ட்ரீமிங் வீடியோ’ தொழில்நுட்பத்தில் உலகையே கலக்கிவருகிறது அமேசான். இதற்குப் போட்டியாக ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் கூடிய விரைவில் ‘ஸ்ட்ரீமிங் வீடியோ’ சேவையைத் தொடங்கவிருக்கிறது. ‘ஃப்ளிப்கார்ட் வீடியோ’ என்றழைக்கப்படும் இந்தச் சேவையில் விளம்பரங்கள் இடம்பெறும் என்பதால், இதைப் பார்ப்பவர்களுக்கு இலவசமாகவே வழங்க முடிவு செய்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிர்வாகம். ஃப்ளிப்கார்ட்டின் பொருள்களை வாங்கவரும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப வீடியோக்கள் இருக்கும் என்றும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. முதலில் இந்தியில் தொடங்கப்படும் இந்தச் சேவையானது பிற்பாடு தமிழ், தெலுங்கு, வங்காளி மொழிகளிலும் வழங்கப்படுமாம்!

#சபாஷ், சரியான போட்டிதான்!

நாணயம் பிட்ஸ்...

வாவேவைத் தடை செய்யாதீர்கள்... எச்சரிக்கும் சீனா!

5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன் தயாரிப்பு நிறுவனமான வாவேவைத் தடை செய்யாதீர்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கிறது சீன அரசாங்கம். அமெரிக்க - சீன வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்க அரசாங்கம் சீனாவின் வாவேவைத் தடை செய்திருக்கிறது. இந்தத் தடையை உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவும் வாவேவைத் தடை செய்தால், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பொருள் களுக்குத் தடை விதிக்கப்படும் நிலை உருவாகலாம். ஆனால், நம் நாட்டிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் பொருள்களின் எண்ணிக்கை குறைவுதான். எனவே, இந்த விஷயத்தில் பதற்றமில்லாமல் இருக்கிறது இந்தியா!

#அமெரிக்கா - சீனப் பிரச்னையில நம்மள ஏன் இழுக்குறாங்க?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாணயம் பிட்ஸ்...

பங்கு விலை இறங்குமா... காத்திருக்கும் வாரன் பஃபெட்!

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது நல்ல லாபத்தில் சில பங்குகளை விற்று, அந்தப் பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும். சந்தை மீண்டும் இறங்கியபிறகு மீண்டும் அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். இது, வாரன் பஃபெட் போன்ற பெரும் முதலீட்டு மேதைகள் கடைப்பிடிக்கும் ரகசியம். கடந்த காலாண்டில் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,100 கோடி) பங்குகளை விற்று, அந்தப் பணத்தைக் கையில் தயாராக வைத்திருக்கிறார் வாரன் பஃபெட். இவரது பெர்க்‌ஷையர் ஹாத்வே நிறுவனத்திடம் தற்போதிருக்கும் ரொக்கப் பணம் எவ்வளவு தெரியுமா? 122 பில்லியன் டாலர்!

#கத்துக்க வேண்டிய முக்கியமான பாடம் பாஸ்!

நாணயம் பிட்ஸ்...

கார் ரீசார்ஜ் ஸ்டேஷன்... சென்னைக்கு எப்ப வரும்?

இந்தியாவின் முக்கியமான ஐந்து நகரங்களில் 500 எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ முடிவு செய்துள்ளது டாடா பவர் நிறுவனம். இந்த 500 சார்ஜிங் ஸ்டேஷன்களையும் டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் நிறுவ முடிவு செய்துள்ளது அந்த நிறுவனம். மின்சாரத்தால் இயங்கும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தான், எல்லா சார்ஜிங் ஸ்டேஷன்களையும் இந்த நகரங்களில் அமைக்கக் காரணம். சென்னையில் மின்சார கார்களை வைத்திருப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே சார்ஜிங் செய்துவருகிறார்கள்.

#ரீசார்ஜ் ஸ்டேஷன்களை சென்னைக்கு சீக்கிரமாகக் கொண்டுவந்தால் நல்லது!

நாணயம் பிட்ஸ்...

பொருளாதார மந்தம்... குறையும் லாரிகளின் வாடகை!

பொருளாதார நிலை சரியில்லை என்பது ஒருபக்கமிருக்க, லாரிகளுக்கான பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க லாரிகளின் வாடகை குறைந்துள்ளது. கடந்த ஜூலையில் விவசாய விளைபொருள் களை ஏற்றிச் செல்வது 15 சதவிகிதமும் தொழிற்சாலையிலிருந்து தயாராகும் பொருள்களை ஏற்றிச் செல்வது 7 சதவிகிதமும் குறைந்துள்ளன. மாதம் முழுக்க ஏற்றிச் செல்லும் லாரிகளின் வாடகை 30% அளவுக்குக் குறைந்திருக்கிறதாம். டீசல் விலை ஏறவில்லை என்றபோதிலும் கடந்த எட்டு மாதங்களுக்குமேலாக லாரிகளின் வாடகை குறைந்து வருவதைக் கண்டு, கடும் வருத்தத்தில் இருக்கிறார்கள் லாரி ஓனர்கள்.

#இதுவும் கடந்து போகும்!

நாணயம் பிட்ஸ்...

மிந்த்ராவிலிருந்து மெட்லைஃப்புக்கு... ஆனந்த் நாராயணனின் அடுத்த அட்டாக்!

ரெடிமேட் உடை விற்பனையிலிருந்து மருந்துப்பொருள் விற்பனைக்கு மாறி யிருக்கிறார் ஆனந்த் நாராயணன். ஆன்லைன்மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் மெட்லைஃப் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாகப் பதவியேற்றிருக்கிறார் ஆனந்த். வால்மார்ட் நிறுவனம், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியபின்பு, ஃபிளிப்கார்ட்டிலிருந்து விலகினார் ஆனந்த். ‘‘மருந்துப்பொருள்களுக்கான சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேல். இதில் 2% மட்டுமே ஆன்லைன்மூலம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என்கிறார் ஆனந்த்.

#மருந்து விற்பனையிலும் கலக்குங்க சாரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு