நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தொழில்துறையினரை கௌரவிக்கும் நாணயம் விகடனின் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் 2021’ நிகழ்வு, சென்னையில் கடந்த வாரம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அனந்த நாகேஸ்வரனுடன், நாட்டின் பொருளா தாரச் சூழல் குறித்துக் கலந்துரையாடினார் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன். அப்போது, “வங்கிகள் தற்போது கடன் வழங்கத் தயாராக இருந்தாலும், மக்கள் தயக்கமின்றிக் கடனுதவி பெறும் சூழல் இல்லை. முதலீட் டாளர்களும் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்குகின்றனர். கொரோனா உள்ளிட்ட அசாதாரணமான சூழ்நிலையால் ஏற்பட்டிருக்கும் இந்தத் தயக்கநிலை, அடுத்த ஆறு மாதங்களில் சரியாகும் என நம்பு கிறேன்” என்று குறிப்பிட்டார் அனந்த நாகேஸ்வரன்.
இந்த விழாவில் அப்போலோ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டிக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதை அனந்த நாகேஸ் வரன் வழங்க, தன் தந்தை சார்பாகப் பெற்றுக் கொண்டார், அந்தக் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி.
ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருக்குத் தரப்படும் ஸ்டார்ட்அப் சேம்பியன் அவார்டு விவசாய நிதி நிறுவனமான ‘சமுன்னதி’ நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் சி.இ.ஓ எஸ்.ஜி. அனில்குமாருக்குத் தரப்பட்டது. எல்.ஐ.சி நிறுவனத்தின் மண்டல மேலாளர் (Southern Region) பி.ஸ்ரீதர் இந்த விருதை வழங்கினார்.
‘பிசினஸ் மென்டார் (இன்ஸ்டிட்யூஷன்)’ அவார்டு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப் பான சி.ஐ.ஐ.க்கு (கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இன்டஸ்ட்ரி-தமிழ்நாடு) அமைப்புக்கு வழங்கினார் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன். தோல்வியால் துவளாமல், தொடர் முயற்சி யாலும் உழைப்பாலும் வெற்றிநடை போட்டு வரும் எம்.சி.ஆர் நிறுவனர்கள் எம்.சி.ராபின்- எம்.சி.ரிக்ஸன் சகோதரர்களுக்கு ‘ஃபீனிக்ஸ் விருது’.அதை ‘கவின்கேர்’ குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் வழங்கி உற்சாகப்படுத்தினார்.
ஆபரண நகை உற்பத்தியில் உலக அளவில் ‘டாப் 10’ நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ‘எமரால்டு ஜூவல் இன்டஸ்ட்ரி’யின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.சீனிவாசனுக்கு, ‘செல்ஃப்மேட் ஆன்ட்ரப்ரனர்’ விருது. இந்த விருதை ‘பொன் பியூர் கெமிக்கல்ஸ்’ நிறுவனத் தலைவர் பொன்னுசாமி, வழங்கினார்.
திருப்பூர் மாநகரம் முழுக்க 12 லட்சம் மரங்களைச் செழிப்புடன் வளர்த்து, சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் ‘கிளாசிக் போலோ’ நிறுவனத்துக்கு ‘சோஷியல் கான்சியஸ் னஸ் பிஸினஸ்’ விருது. ‘பிரின்ஸ் ஜூவல்லரி’ நிறுவனத் தலைவர் பிரின்ஸ் ஜோஸ் மற்றும் ‘பூம் கார்ஸ்’ நிறுவனத்தலைவர் ஹாஜி அலி ஆகியோர் இந்த விருதை வழங்க, ‘கிளாசிக் போலோ’ நிறுவன நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சிவராம் பெற்றுக்கொண்டார்.
மக்களின் விருப்பத்துக்கேற்ப தங்களின் தயாரிப்புகளில் தொடர்ந்து புதுமைகளைப் படைத்து அசத்திவரும் ‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மகாதேவனுக்கு, ‘பிசினஸ் இன்னோவேஷன்’ விருதை ‘மேட்ரிமோனி.காம்’ நிறுவன சி.இ.ஓ-வான முருகவேல் ஜானகிராமன், ஜி.ஆர்.டி நிறுவன நிர்வாக இயக்குநரான ஜி.ஆர்.அனந்த பத்மநாபன் இணைந்து வழங்கினர்.
தன்னலம் கருதாமல் புதிய தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டி வரும் ‘டி.வி.எஸ் கேப்பிடல் ஃபண்ட்ஸ்’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் கோபால் ஸ்ரீநிவாசனுக்கு ‘பிசினஸ் மென்டார்’ விருது. தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், “எங்கள் குடும்பத்தில் பலரும் நெடுங்கால விகடன் வாசகர்கள். நானெல்லாம் ஜூனியர் விகடன் ஆளு. தற்போது தொழில்துறை அமைச்சராக இருப்பதால், நாணயம் விகடனுடனும் சேர்த்து விட்டார்கள்” என்று சொல்லி கலகலப்பூட்டினார்.
தொழில்முனைவோர்களுக்குப் புதிய உற்சாகம் தருவதாக இருந்தது இந்த நிகழ்ச்சி!
