Published:Updated:

`அந்த விபத்து என் பார்வையை மாத்திடுச்சு!' - ஆதரவற்றோருக்கு முடி வெட்டிவிடும் நெல்லை தொழிலதிபர்

தொழிலதிபரின் மனிதாபிமானம்
தொழிலதிபரின் மனிதாபிமானம்

கொரோனா ஊரடங்குக் காலத்தில் சாலையோரங்களில் ஏராளமான மனநோயாளிகள் கவனிப்பாரின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் மனிதாபிமானம் மிகுந்த செயலில் நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் சாலையோரங்களில் ஏராளமான மனநோயாளிகள் கவனிப்பாரின்றி கிடக்கிறார்கள். பசித்தால் சாலைகளில் செல்வோரிடம் உணவு கேட்கும் அந்த நபர்கள் தற்போதைய ஊரடங்கு காரணமாக ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

சாலையோரங்களில் இருப்போருக்கு சில சமூக ஆர்வலர்கள் உணவு அளித்து வருவதால் அவர்களில் பலருக்கு உணவு கிடைத்துவிடுகிறது. ஆனால், சில மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிறரின் கண்ணில்படாதபடி எங்காவது நகருக்கு வெளியில் உள்ள இடங்களில் தனியாக நடந்து சென்றபடியே இருப்பதால் உணவுகூட கிடைக்காத நிலையில் உள்ளனர்.

சமூகப் பணியாற்ற காரில் வரும் தொழிலதிபர்
சமூகப் பணியாற்ற காரில் வரும் தொழிலதிபர்
ஏர்வாடி அவலம்: சட்ட நடைமுறைகளால் தவிக்கும் மனநோயாளிகள்!

நெல்லை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோரைப் பாதுகாக்க நெல்லை மாவட்ட நிர்வாகமும் நெல்லை மாநகராட்சியும் இணைந்து அவர்களை டவுன் கல்லணை பகுதியில் உள்ள பள்ளியில் தற்காலிகமாகத் தங்கவைத்து பராமரிக்கின்றனர்.

அங்கு அழைத்து வரப்படும் அனைவரையும் குளிக்கவைத்து, நீண்டு வளர்ந்திருக்கும் தலைமுடி வெட்டப்பட்டு, புத்தாடை அணிவிக்கப்படுகிறது. பின்னர் அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கேயே தங்கப் வைக்கப்படுகிறார்கள்.

கைவிடப்பட்டோர் தங்கியிருக்கும் மையத்தில் தன்னார்வலர்கள் பலரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில், அந்த மையத்துக்கு காரில் வந்த ஒருவர், தன் உடைகளை மாற்றிக் கொண்டதுடன், கொரோனா பாதுகாப்பு உடையணிந்தபடி அங்கிருந்த ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டிக் குளிக்க வைத்தார்.

ஆதரவற்றோர் மையம் வந்த மூதாட்டி
ஆதரவற்றோர் மையம் வந்த மூதாட்டி

கடந்த 18 வருடங்களாக உறவினர்கள் யாரும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் சாலையில் வசித்த மூதாட்டியொருவர் அந்த மையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரின் நீண்டு வளர்ந்த அழுக்கும் சிக்கலும் நிறைந்த முடியை எந்த சங்கோஜமும் இல்லாமல் வெட்டி விட்டார்.

மனிதாபிமானம் மிகுந்த அவரிடம் பேசினோம். ``என் பெயர் செல்வராஜ். எனக்கு தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சொந்த ஊர். ஆனால் கடந்த 20 வருடங்களாக நெல்லையில் பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

தொழிலதிபர் செல்வராஜ்
தொழிலதிபர் செல்வராஜ்

நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். குஜராத் மாநிலத்தில் இருந்து வீட்டுக்குத் தேவையான கூலிங் ஓடுகளை வாங்கி வந்து 10 மாவட்டங்களில் மொத்த வியாபாரம் செய்கிறேன். நானும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை பலரையும்போல சுற்றி நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் காரில் போய்க் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளாகிக் கிடந்தது. அதில் இருந்த ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். எல்லோரும் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிட்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதரின் உடலில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியபடி இருந்ததால் மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருந்தார். நேரம் ஆகிக் கொண்டிருந்ததே தவிர ஆம்புலன்ஸ் வரவில்லை. அதனால் நானே அவரை என் காரில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். சரியான நேரத்துக்கு அவரை கொண்டு சென்று சேர்த்ததால் உயிர் பிழைத்தார்.

சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தால் அவர்கள் நம்மை நெகிழ்ச்சியுடன் பார்த்து கும்பிடும்போது கிடைக்கும் மன நிம்மதிக்கு எதுவும் ஈடாக முடியாது. இதுவரை 15-க்கும் அதிகமானோரை சாலை விபத்துகளில் இருந்து மீட்டிருக்கிறேன்.

முடிவெட்டும் பணி
முடிவெட்டும் பணி

பிறகு என் நண்பர்கள் சாலமோன், மேக்ஸ் பிரின்ஸ் ஆகியோருடன் சேர்ந்து சாலையோரங்களில் இருப்போருக்கு உணவு கொடுக்கத் தொடங்கினோம். சாலையோரத்தில் கவனிப்பின்றி இருப்போரைக் குளிக்க வைக்க முயன்றோம். அப்படியே முடிவெட்டி விடவும் கற்றுக் கொண்டேன்.

தொழில் விஷயமாக நான் வெளியிடங்களுக்கு காரில் செல்லும்போது சாலையோரம் யாராலும் கவனிக்கப்படாதவர்கள் இருந்தால் காரை நிறுத்திவிட்டு அவர்களிடம் பேசுவேன். மனநலன் ரொம்ப பாதிக்கப்பட்டு மூர்க்கத்தனமாக இல்லாதவர்களாக இருந்தால் அருகில் உள்ள நீர் நிலைக்குக் கூட்டிச் சென்று முடி வெட்டிவிட்டு குளிக்க வைத்து என் காரில் எப்போதும் வைத்திருக்கும் புத்தாடையை அணிய வைத்து காப்பகத்தில் சேர்த்து விடுவேன்.

ஆதரவற்றோர் மையம்
ஆதரவற்றோர் மையம்

முடி வெட்டி குளிக்க வைத்த பிறகு அவர்களைப் பார்க்கும்போது நமக்கே மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் நான் என் வேலைகள் முடிந்ததும் தினமும் இந்த மையத்துக்கு வந்து புதிய நபர்களுக்கு முடிவெட்டி விடுகிறேன். இந்தப் பணிகளுக்கு குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். கைவிடப்பட்டவர்களுக்காக ஒரு இல்லம் அமைக்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், தொழிலதிபர் செல்வராஜ். கொரோனா ஊரடங்கு காலத்தில் மனிதாபிமானம் மிகுந்த செயலில் ஈடுபடும் அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு