Published:Updated:

காபி நாயகன் சித்தார்த்தா... தற்கொலைக்கு என்னதான் காரணம்?

நிகழ்வு

பிரீமியம் ஸ்டோரி

ணக்காரர்கள் என்றாலே பகட்டான பெரிய பங்களா, படகு கார், கோடிகளில் பணம், சொகுசு வாழ்க்கை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கழுத்தை நெறிக்கும் பிரச்னைகளும் அவர்களுக்கு உண்டு. அந்தப் பிரச்னைகள் சில அவர்களின் உயிரைப் பறித்துவிடும் என்பதற்கு ஓர் உதாரணம்தான், காபி டே நிறுவனத்தின் வி.ஜி.சித்தார்த்தாவின் தற்கொலை. பெரும் தொழிலதிபர் ஒருவர் கடன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

என்ன ஆச்சு சித்தார்த்தாவுக்கு..? இந்தியத் தொழில் உலகில் வெற்றிகரமான தொழிலதிபர் என்று புகழப்பட்டவர், தற்கொலை என்கிற முடிவைத் தேடிச்செல்ல என்ன காரணம்? இத்தனைக்கும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனாக இருந்தும் இப்படிப்பட்ட முடிவை அவர் எதிர்கொண்டது ஏன் என்கிற கேள்விகள் தொழில் உலகை மட்டுமல்ல, சாதாரண மனிதனையும் கேட்க வைத்துக் கொண்டிருக்கிறது.

காபி நாயகன் சித்தார்த்தா... தற்கொலைக்கு என்னதான் காரணம்?

யார் இந்த சித்தார்த்தா?

1983-ம் ஆண்டு எம்.பி.ஏ படித்து முடித்தவுடன் மும்பைக்குச் சென்று, அங்கு ஜே.எம் ஃபைனான்ஷியல் நிறுவனத்தில் ஓர் ஆண்டு வேலை செய்தார் சித்தார்த்தா. அங்கு ஓரளவுக்குச் சம்பாதித்த பணத்தைத் தொடர்ந்து பெங்களூருக்குத் திரும்பியவர் சிவன் செக்யூரெட்டீஸ் என்னும் நிதிச்சேவை நிறுவனத்தைத் தொடங்கினார். (பின்னாளில் ‘வே டு வெல்த்’ என்று இந்த நிறுவனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)

இவரின் குடும்பத்துக்கும் காபி டிரேடிங்கிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவரின் தாத்தா காலத்திலிருந்தே காபி டிரேடிங் செய்துவந்தனர். இவரின் குடும்பத்துக்குச் சொந்தமாக காபி எஸ்டேட் இருந்ததால், 1990-களில் காபி டிரேடிங் நிறுவனத்தைத் தொடங்கினார். 1993-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வந்தபோது அதில் கணிசமான அளவில் முதலீடு செய்தார். ஆனால், பங்கு வெளியீடு வந்த சில மாதங்களிலேயே பங்குகளை விற்றுவிட்டார். பிற்பாடு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை பல மடங்கு உயர்ந்ததைக் கண்டு, டெக்னாலஜி பங்குகளை இவர் தொடர்ந்து கவனித்துவந்தார். இன்ஃபோசிஸில் விட்ட வாய்ப்பை மைண்ட்ட்ரீ பங்கில் சம்பாதித்தார். மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் 20.3% பங்குகளை ரூ.3,269 கோடிக்கு சமீபத்தில் விற்றார் சித்தார்த்தா.

வெளிநாடுகளில் இருப்பதைப்போன்ற காபி டே ஸ்டோர்களை 96-ம் ஆண்டு தொடங்கினார். ஸ்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்த (1,750 கபேகள்) அதே சமயத்தில், குழுமத்தின் கடனும் அதிகரித்தது. கடந்த மார்ச் நிலவரப்படி, ரூ.6,500 கோடிக்கும் மேல் கடன் சென்றுவிட்டது. மைண்ட்ட்ரீ மூலம் ரூ.3,000 கோடி கிடைத்தாலும், அவர் கட்டவேண்டிய வருமான வரி பெருமளவில் இருந்ததால், கடனைக் கட்டமுடியாமல் தவித்தார் சித்தார்த்தா.

காபி நாயகன் சித்தார்த்தா... தற்கொலைக்கு என்னதான் காரணம்?

கடனைக் கட்டினால்தான் நிம்மதி கிடைக்கும் என்று தவித்த சித்தார்த்தா, தன்னுடைய சொத்துகளை விற்றாவது கடனை அடைக்க நினைத்தார். பெங்களூரில் முக்கியமான சொத்துகளை விற்பதற்கு கோகோ கோலா உள்பட சில நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், அவர் விற்க விரும்பிய விலைக்கு அந்தச் சொத்துகள் விலை போகவில்லை என்பதால், அவற்றை விற்க முடியாமல் திணறினார்.

இது தவிர, டாங்க்லின் டெவலப்மென்ட்ஸ் (Tanglin Developments) என்னும் குழும ரியல் எஸ்டேட் நிறுவனத்தை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பிளாக் ஸ்டோனுக்கு விற்கத் திட்டமிட்டார். இந்த இணைப்பும் முடியவில்லை. மேலும், காபி டே நிறுவனத்தில் இவருக்கு 53% பங்குகள் உள்ளன. இதில் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பங்குகள் அடமானத்தில் உள்ளது.

இப்படிப் பல பிரச்னைகளில் மாட்டித் தவித்த வி.ஜி.சித்தார்த்தா கடந்த 29-ம் தேதி அன்று மங்களூருக்கு அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் உடல் கரை ஒதுங்கியது.

காபி நாயகன் சித்தார்த்தா... தற்கொலைக்கு என்னதான் காரணம்?

பிரைவேட் ஈக்விட்டியா, கந்துவட்டியா?

வி.ஜி.சித்தார்த்தாவின் காபி டே நிறுவனத்தில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தன. அப்படி முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்று, தன்னுடைய முதலீட்டினைத் திரும்பத் தருமாறு சித்தார்த்தாவிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு விற்ற பங்கினைத் திரும்ப வாங்க (buyback) சித்தார்த்தாவிடம் போதிய பணம் இல்லை. என்றாலும், வேறு ஒருவரிடம் பெரும் பணத்தைக் கடனாக வாங்கி, அதை அந்த நிறுவனத்துக்குத் தந்திருக்கிறார். இது அவர் மனதில் மிகப் பெரிய வருத்தத்தை உருவாக்கியது.

குறிப்பிட்ட தொகைக்குப் பங்குகளைத் திரும்ப வாங்கவேண்டும் என அந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஏன் வற்புறுத்தியது, அந்த வற்புறுத்தலுக்கு சித்தார்த்தா எப்படி ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் தொழில் துறையினர்.

பிரைவேட் ஈக்விட்டி என்பது பங்கு சார்ந்த முதலீடு. ரிஸ்க்கான முதலீடும்கூட. இதை நன்கு தெரிந்துகொண்டுதான் தொழில் முனைவர்கள் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெறுகின்றனர். நிறுவனங்களும் பணம் தந்து பங்குகளை வாங்குகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட தொகைக்கு பங்குகளைத் திரும்ப வாங்கவேண்டும் என அந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஏன் வற்புறுத்தியது, அந்த வற்புறுத்தலுக்கு சித்தார்த்தா எப்படி ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் தொழில் துறையினர்.

‘‘வாங்கிய தொகையை நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றால், நிறுவனர்கள் கடன் பத்திரங்கள்மூலமே நிதியைத் திரட்டி கொள்வார்களே, எதற்கு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள்மூலம் நிதி திரட்ட வேண்டும்’’ என்கிற கேள்வியை ஹீலியஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் சமீர் அரோரா எழுப்பியிருக்கிறார். தவிர, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பிரைவேட் ஈக்விட்டிமூலம் திரட்டிய நிதி எவ்வளவு என்று பொது வெளியில் அறிவிக்க வேண்டும். இல்லை எனில், இதுபோன்ற நிகழ்வுகளால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா, ‘‘பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் வட்டிக் கடைக்காரர்கள் போல நடந்துகொண்டிருக்கிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.

சித்தார்த்தாவின் மரணம் காரணமாக பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் மீதும் விசாரணை தொடங்கப்படும் எனத் தெரிகிறது. கே.கே.ஆர், என்.எல்.எஸ் மொரிஷியஸ், மரினாவெஸ்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் காபி டேவில் கணிசமான பங்குகளை வைத்திருக்கின்றன.

வருமான வரித்துறை சிக்கல்

கடந்த 2017-ம் ஆண்டு காபி டே மற்றும் வி.ஜி.சித்தார்த்தாவுக்குச் சொந்தமான இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் ரூ.480 கோடிக்கும் மேற்பட்ட, கணக்கில் வராத தொகை இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சித்தார்த்தாவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் ரூ.362 கோடி மற்றும் கஃபே காபி டே நிறுவனம் மூலமாக ரூ.118 கோடி முறைகேடாகச் சம்பாதித்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு வரி மற்றும் அபராதமாக ரூ.636 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை கூறியது. இதன் காரணமாகவே, 74.90 லட்சம் மைண்ட்ட்ரீ பங்குகள் பறிமுதல் செய்யப் பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்திருக்கிறது. ஹவாலா பரிவர்த்தனை மூலம் அவர் லாபம் அடைந்திருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரி சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், வரித் தீவிரவாதம்தான் அவரைக் கொன்றுவிட்டது என்கிற வாதத்தை காங்கிரஸ் கட்சியானது கையில் எடுத்திருக்கிறது. உலக அளவில் இந்தியாவில்தான் தொழில் வரி அதிகமாக இருக்கிறது. இந்த வரியைக் கட்டத் தவறும்பட்சத்தில், சம்பந்தப் பட்டவரின் சொத்தை முடக்குகிற அளவுக்கு வரித் துறைக்கு அதிகாரம் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டி.கே.சிவக்குமாருடன் தொடர்பா?

2017-ம் ஆண்டு கர்நாடகாவில் மாநிலங் களவைத் தேர்தல் நடந்தது. அப்போது பா.ஜ.க-வுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே. சிவக்குமார். அதனால் இவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதில் வி.ஜி.சித்தார்த்தா சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இருந்ததால்தான் கஃபே காபி டே அலுவலகங்களில் சோதனை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதை அடுத்து கணக்கில் காட்டப்படாத பணத்தை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக கஃபே காபி டே நிறுவனம் லாபம் ஈட்டி வந்தாலும், இதர வருமானம் மூலமாகவும் அந்த நிறுவனம் லாபம் அடைந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

காபி நாயகன் சித்தார்த்தா... தற்கொலைக்கு என்னதான் காரணம்?

50% விலை இறங்கிய காபி டே

வி.ஜி.சித்தார்த்தா தற்கொலைச் செய்தி வெளி யானவுடனே (ஜூலை 30) காபி டே என்டர்பிரைசஸ் பங்கு நிறுவனத்தின் விலை 20% இறங்கியது. அடுத்த நாள் 20%, அதற்கடுத்த அடுத்த நாள்களில் 10% என 50 சதவிகிதத்துக்கும்மேல் அந்தப் பங்கின் விலை இறங்கியுள்ளது. கடந்த 28-ம் தேதியன்று ரூ.194.55 என்கிற அளவில் வர்த்தகமாகத் தொடங்கிய அந்தப் பங்கு, கடந்த வெள்ளியன்று மதியம் ரூ.99.90-ஆக வர்த்தகமா கிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகத்துக்குப் புதியவர்கள் நியமிக்கப் பட்டிருந்தாலும், இந்த நிறுவனப் பங்கின் எதிர் காலம் கேள்விக்குறிதான்!

ரூ.11,000 கோடிக்கு மேல் கடன்

சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்ட மறுநாளே அவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரல் ஆனது. ‘‘நான் வாங்கிய கடனைவிட என்னிடம் இருக்கும் சொத்துகளின் மதிப்பு அதிகம்’’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந் தார் சித்தார்த்தா.

ஆனால், இப்போது வெளியாகும் தகவல்கள் சித்தார்த்தா சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்கிற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது.

காபி டே குழுமத்துக்காக சித்தார்த்தா வாங்கிய கடன், ரூ.11,000 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இதில் காபி டே கடன் ரூ.6,547 கோடி, இந்தக் குழுமத்தின் இதர நிறுவனங்களின் கடன் ரூ.3,522 கோடி. இது தவிர தனிப்பட்ட முறையில் ரூ.1,028 கோடியைக் கடனாகப் பெற்றிருக்கிறார் சித்தார்த்தா. அவரிடம் கடன் வாங்கி இவருக்குத் தருவது, இவரிடம் கடன் வாங்கி இன்னொருவருக்குத் தருவது எனச் சாதாரண மனிதர்கள் செய்வதுபோல பலரிடம் கடன் வாங்கி, அதைச் சுமுகமாக தந்துவிட்டு, நிம்மதியாக இருக்க நினைத்திருக்கிறார் சித்தார்த்தா. ஆனால், அதுவே மிகப் பெரிய பிரச்னையாக மாறியபோது, அதற்குத் தர வேண்டிய விலை தன் உயிர்தான் என்று முடிவெடுத்து, தன் உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.

தொழிலதிபராக இருக்கும் ஒரு பணக்காரருக்கு இருக்கும் கஷ்டம் அவருக்கு மட்டுமே தெரியும். சர்வதேச அளவில் மிகப் பெரிய காபி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவரின் மரணம் இப்படி நடந்திருக்க வேண்டாம்!

வாசு கார்த்தி - ஓவியம் : பாரதிராஜா

காபி டே-யின் அடுத்தகட்ட நடவடிக்கை!

சித்தார்த்தாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜூலை 31-ம் தேதி காபி டே இயக்குநர் குழு கூடி, எஸ்.வி ரங்கநாத்தை அந்த நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக நியமனம் செய்துள்ளது. மேலும், சித்தார்த்தா மற்றும் காபி டேவின் பரிவர்த்தனைகளை ஆராயவும் இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது. நிதின் பக்மேன் இடைக்காலத் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். காபி டே நிறுவனத்தைச் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 8-ம் தேதி நடக்கும் இயக்குநர் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் சட்ட ஆலோசனை வழங்க சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு