Published:Updated:

கம்யூனிச தலைவராக நினைத்தவர் கஃபே காபி டே ஓனர்... சித்தார்த்தா பயோ! #VGSiddhartha #CafeCoffeeDay

"சிறந்த உழைப்பைக் கொடுத்தபோதிலும், லாபகரமான வணிக மாதிரியை உருவாக்கத் தவறிவிட்டேன்"

CCD
CCD

இந்தியாவின் மிகப்பெரிய காபி செயின் நிறுவனமான Cafe Coffee Day-ன் நிறுவனரும், ஆசியாவின் மிகப்பெரிய காபி தோட்டத்திற்குச் சொந்தக்காரருமான வி.ஜி சித்தார்த்தா கடந்த திங்கள் மாலை முதல் காணவில்லை. அவர் காணாமல் போவதற்கு முன், தன் குடும்பம் மற்றும் நண்பர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்.

#VGSiddhartha
#VGSiddhartha
Mint

“சிறந்த உழைப்பைக் கொடுத்த போதிலும், லாபகரமான வணிக மாதிரியை உருவாக்கத் தவறிவிட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்தக் கடிதம் அவரின் குடுமபத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர், முன்னாள் கர்நாடக முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன். கிருஷ்ணாவின் முதல் மகளை மணந்த சித்தார்த்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

'A lot can happen over coffee' எனும் டேக்லைன் மூலம் ஏராளமான இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்தது CCD. இந்த நிறுவனத்தை நிறுவிய சித்தார்த்திற்கு, அடிப்படையில் தொழில்முனைவோராக மாறுவது கனவல்ல. காபி தோட்ட உரிமையாளரின் மகனான இவர், கர்நாடகாவின் சிக்மகளூரில் பிறந்தார். 1979-ம் ஆண்டில், கல்லூரி மாணவராக இருந்தபோது, ​​கம்யூனிச தலைவராக மாறுவதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆனால், 1983-ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு முடித்தவுடன், Mahindra & Mahindra நிறுவனத்தின் உரிமையாளரின் அறிவுறுத்தலால் JM ஃபைனான்சில் இந்தியப் பங்குச் சந்தையில் மேலாண்மை பயிற்சி வர்த்தகராக, தன் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிறகு, 1984-ல் சிவன் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை வாங்கி அதனை மிகவும் வெற்றிகரமான முதலீட்டு வங்கி மற்றும் பங்கு தரகு நிறுவனமாக (stock broking company) மாற்றினார். இது 2000-ம் ஆண்டில் Way2Wealth செக்யூரிட்டீஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. 1992-ம் ஆண்டில் சித்தார்த்தா, தனது காபி வியாபாரத்தை `அமல்கமடேட் பீன் கம்பெனி டிரேடிங்’ எனும் பெயரில் தொடங்கினார். இது, காபி கொட்டைகளைக் கொள்முதல் செய்வது, பதப்படுத்துவது மற்றும் வறுத்தெடுப்பது முதலிய பணிகளை ஏற்று நடத்தும் ஓர் ஒருங்கிணைந்த காபி வணிகம்.

கொட்டும் மழை; 600 மீ தூரத்தில் கடல்! - சித்தார்த்தாவை கண்டுபிடிக்க போராடும் மீட்புப் படையினர்

தற்போது `காபி டே குளோபல்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் வெற்றிக்கு பிறகே 1996-ம் ஆண்டு, பெங்களூர் பிரிகேட் ரோட்டில் தன் முதல் காபி டே கடையைத் திறந்தார் சித்தார்த்தா. நாளடைவில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஃபேவரிட் காபி ஸ்பாட்டாக இது மாறியது.

ஒருமுறை சித்தார்த்தா சிங்கப்பூர் சென்றிருந்தபோது, ஒரு பீர் (Beer) கடையில் பீருடன் இணைந்து இன்டர்நெட் வசதி இருப்பதைக் கவனித்தார். அந்தப் பகுதியில் சுமார் 30 உணவகங்கள் இருந்தாலும், பீர் கடை மிகவும் நெரிசலாக இருந்தது. இதற்கு முதன்மை காரணம், இன்டர்நெட். இதுவே, இந்தியாவிலும் இணைய கஃபேக்கள் வரவேண்டும் என்ற எண்ணத்தை அவரிடம் விதைத்தது. அன்றுதான் CCD-யும் பிறந்தது.

#VGSiddhartha
#VGSiddhartha
news18

பொறியாளர், MBA பட்டதாரிகள் அல்லாத இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் ஆர்வமுள்ளவர் சித்தார்த்தா. இந்தியாவைத் தொடர்ந்து, வியன்னா, Czech Republic, மலேசியா, நேபாளம், எகிப்து ஆகிய நாடுகளிலும் CCD -யைத் திறந்தார். மேலும், 1999-ம் ஆண்டு, IT நிறுவனங்களில் அதிக அனுபவமுள்ள அசோக் சூட்டா உள்ளிட்ட பத்து இளம் தொழில்முனைவோர்களோடு இணைந்து Mindtree நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் தான் வைத்திருந்த 20 சதவிகித பங்குகளை சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ரூ 3,000 கோடி ரூபாய்க்கு விற்றார்.

காபி வணிகத்தைத் தவிர, SICAL லாஜிஸ்டிக்ஸ், உலகளாவிய கிராம தொழில்நுட்ப பூங்காவைக் கொண்டுள்ள டாங்ளின் டெவலப்மென்ட்ஸ் மற்றும் காபி டே ஹோட்டல் & ரிசார்ட்ஸை போன்றவற்றை Coffee Day குழு கைப்பற்றியது. 2015-ம் ஆண்டு வெளிவந்த Forbes இதழில், இந்தியாவின் 75-வது பணக்காரராக சித்தார்த்தா பட்டியலிடப்பட்டார். மார்ச் 2019-ன் நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,752 கஃபே கடைகள் கொண்ட இந்நிறுவனம், ரூ .1,777 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. 2018 நிதியாண்டில் 1,814 கோடி ரூபாய் ஈட்டியிருந்தது. 2020 மார்ச் மாதத்திற்குள் ரூ.2,250 கோடியை அடைவதே அதன் நோக்கமாக இருந்தது.

ஊழியர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம்!- 'கஃபே காஃபி டே' உரிமையாளர் மாயமான பின்னணி

2017-ம் ஆண்டில் வருமான வரித்துறை அவருடன் இணைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை நடத்தியபோது, முதன்முறையாக சிக்கலைச் சந்தித்தார் சித்தார்த்தா. தற்போது, காஃபி டே நிறுவனத்துக்கு 7,000 கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த திங்களன்று, 58 வயதான சித்தார்த்தா தனது இனோவா காரில் தொழில் சம்பந்தப்பட்ட பயணமாக சிக்மகளூருக்கு புறப்பட்டார். அங்கிருந்து அவர் கேரளா செல்லவிருந்தார். ஆனால், மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜெப்பினா மொகாரு தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுக்கொண்டு வாகனத்திலிருந்து இறங்கிய சித்தார்த்தா, வெகு நேரமாகியும் திரும்ப வரவில்லை.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில், ஓட்டுநர் சித்தார்த்தின் குடும்பத்தினருக்கு உடனடியாகத் தகவலைத் தெரிவித்தார். சம்பவ இடத்திலுள்ள உல்லால் பாலத்திலிருந்து யாரோ ஒருவர் குதித்ததாக மங்களூரு நகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அது சித்தார்த்தாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.