புதிய நிதி ஆண்டுக்கான (2020-21) பட்ஜெட் தாக்கல் முடிவடைந்துவிட்டது. நம் நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறதா, ஜி.டி.பி-யின் வளர்ச்சி குறைந்துவருவதைத் தடுத்து மீண்டும் வளர்ச்சி ஏற்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்பன போன்ற கேள்விகள் ஒருபக்கம் இருக்கட்டும். தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலைக்கான காரணங்கள் என்னென்ன, அரசாங்கம் சொல்வதுபோல் இது பொருளாதார சுழற்சியா அல்லது நிபுணர்கள் சொல்வதுபோல் கொள்கைக் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னையா, இந்தச் சரிவிலிருந்து எவ்வளவு சீக்கிரமாக, எப்படி மீள்வது என்பன போன்ற சிக்கலான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறார் பொருளாதார நிபுணரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் எழுதி வெளியாகி இருக்கும் `Reset - Regaining India’s Economic Legacy’ என்ற புத்தகத்தில் இந்தியப் பொருளாதாரம் பற்றி அவர் முன்வைக்கும் கருத்துகள் ஆணித்தரமானவை.

மூன்று காலகட்டம்

1870-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரையிலான சுமார் 150 ஆண்டுக்கால பொருளாதார நிலையை அலசி ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. 1870 – 1947 வரையிலான முதல் காலகட்டம், சோவியத்தின் பொருளாதாரக் கோட்பாட்டை நாம் பின்பற்றிவந்த 1950 முதல் 1990 வரையிலான இரண்டாம் காலகட்டம், 1990 - 2019 வரையிலான பொருளாதார சீர்திருத்தக் காலகட்டம் என மூன்று கட்டங்களாகப் பிரித்து ஆராய்ந்திருக்கிறார் சுவாமி.

சுரண்டப்பட்ட இந்தியா

சுவாமியின் ஆய்வுப்படி, 1870-ல் மிகச் செழிப்பாக இருந்த இந்தியா, ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டுச் சென்ற 1947-ம் ஆண்டில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்ட இந்திய வளங்களின் இன்றைய மதிப்பு சுமார் 71 ட்ரில்லியன் டாலர் (ஒரு ட்ரில்லியன் டாலர் என்பது 1 லட்சம் கோடி டாலர்) இருக்கும் என மதிப்பிடுகிறார்.

தவறான சோவியத் சோஷலிசக் கொள்கை

இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு 1947. கம்யூனிஸ்ட்டுகள் சீனாவில் ஆட்சிக்கு வந்த ஆண்டு 1949. அந்தக் காலகட்டத்தில் இரண்டு நாடுகளின் பொருளாதார நிலையும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருந்தது. ஆனால், 1952-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா தொழில்மயமாக்கலை நன்கு முன்னெடுத்துச் சென்றது. நாம் முதலில் விவசாயத்துக்கு முன்னுரிமை தராமல், சோவியத்தின் சோஷலிசக் கொள்கைகளைப் பின்பற்றி தொழில்மயமாக்கலை முன்னெடுத்துச் சென்றது மிகப்பெரிய தவறு என்கிறார் சுவாமி.

`லைசன்ஸ் ராஜ்’, `ஒதுக்கீடு’, `கட்டுப்பாடு’ போன்ற கொள்கைச் செயல்பாடுகளால் கறுப்புச்சந்தை, ஊழல், வளங்களைப் பயன்படுத்துவதில் திறமையின்மை போன்றவை அதிகரித்தன. 1947-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை இந்தியாவின் வளர்ச்சி சராசரியாக 4% இருந்துவந்தது. ஆனால், அதே காலகட்டத்தில் சோஷலிசத்தை முன்மாதிரியாகக்கொள்ளாமல் வேறு உத்திகளை/கொள்கைகளைப் பயன்படுத்திய `நான்கு புலிகள்’ என அழைக்கப்பட்ட தென் கொரியா, தைவான், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் வளர்ச்சி சுமார் 10-12 சதவிகிதமாக இருந்தது. ஒரே தலைமுறையில் இந்த நாடுகள் `மூன்றாவது உலக நாடுகள்’ என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடுகள் என்னும் `முதல் உலக நாடுகள்’ என்ற நிலையை அடைந்தன.

ஆங்கிலேயர் களால் சுரண்டப்பட்ட இந்திய வளங்களின் இன்றைய மதிப்பு, சுமார் 71 ட்ரில்லியன் டாலர்!

கொள்கை சரி, நிறைவேற்றும் விதம் தவறு!

இப்போது இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு, சுமார் 2.7 ட்ரில்லியன் டாலர். 2024-25ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியடைய வேண்டுமெனில், இப்போதிருந்து ஒவ்வோர் ஆண்டும் நமது பொருளாதாரம் 14.4% வளர வேண்டும்.அது நடக்குமா, நடக்காதா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி.

தற்சமயம் இருக்கும் அரசின் கொள்கைகள் சரியாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் விதம் மிகவும் மோசமாக இருக்கிறது என்கிறார் சுவாமி. உதாரணமாக, பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவைவரி ஆகியவற்றை கூறுகிறார். இவற்றால் 2019-ம் ஆண்டு ஜனவரி வரை ஏற்பட்ட வேலையிழப்பு எண்ணிக்கை சுமார் 1.1 கோடி. ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு லட்சக்கணக்கான சிறுதொழில்கள் பாதிப்புக்குள்ளானதுடன், வேலையில்லாத் திண்டாட்டம் 7.66% (2017) என்ற நிலையிலிருந்து 9.35% (2019) என்ற நிலைக்கு அதிகரித்திருக்கிறது என அவர் சார்ந்திருக்கும் ஆளும்கட்சிக்கு எதிராக பல புள்ளிவிவரங்களைத் தருகிறார் சுவாமி.

மீளும் வழிகள்

கடந்த பல காலாண்டுகளாக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவிலிருந்து மீள்வதற்கு சுவாமி சொல்லும் யோசனைகள் என்னென்ன?

1. அரசாங்கம், மக்களைக் கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக ஊக்கப்படுத்த வேண்டும். உதாரணமாக, வருமான வரிச் சலுகை மூலம் மக்கள் மிச்சப்படுத்தும் பணத்தைச் சேமிக்குமாறு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.

2. ஜி.டி.பி வளர்ச்சி 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டுமெனில், நமது ஜி.டி.பி-யில் முதலீடானது (அந்நிய நேரடி முதலீடு உட்பட) தற்போது இருக்கும் 29 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். நாட்டின் மொத்த சேமிப்பில் 80% மக்களின் சேமிப்பாகும். 2016-ம் ஆண்டு நமது ஜி.டி.பி-யில் 34 சதவிகிதமாக இருந்த மக்களின் சேமிப்பு, 2018-ம் ஆண்டு 28% என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. இதற்குக் காரணம், மோசமாக நிறைவேற்றப்பட்ட பணமதிப்பு நீக்கத் திட்டமே.

எந்த ஒரு பொருளாதாரச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு. ஆனால், எந்தத் திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது கப்பலைச் செலுத்தும் கேப்டனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

தனிநபர் வருமான வரியை நீக்கும்பட்சத்தில் மக்களின் சேமிப்பு அதிகரித்து 34 சதவிகிதத்தைத் தொடக்கூடும். இன்றைக்கு மக்கள் சேமிப்பது தவிர்த்து, மற்ற சேமிப்பானது ஜி.டி.பி-யில் 5 சதவிகிதமாக இருக்கிறது. வங்கியில் நிலையான வைப்புக்கு குறைந்தபட்சம் 9% வட்டி தரும்பட்சத்தில் நிறுவனங்கள் மற்றும் மக்களின் சேமிப்பு அதிகமாகும்.

3. தொழில் துறையைப் பொறுத்தவரை பணப்புழக்கத்தை எளிதாக்க வேண்டும். கிராமப்புறக் கடனைக் குறைக்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க உள்கட்டமைப்பு முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். மிகவும் குறைவான வட்டிவிகிதத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குக் கடன் தந்து தொழில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

4. விவசாயம், தொழில், சேவைத் துறைகளில் கொள்கைரீதியில் (structural) மாற்றங்களை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். 2024-25ம் ஆண்டு 5 ட்ரில்லியன் பொருளாதாரம் அல்லது விவசாயிகளின் வருமானத்தை நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம் என்றெல்லாம் அரசு பேசிவருவதன் பின்னால் அடிப்படைக் கணக்கீடு எதுவுமில்லை என்று போட்டு உடைக்கிறார் சுவாமி.

இந்தப் புத்தகம் முழுவதும் புள்ளிவிவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வங்கிகள் சந்தித்துவரும் ‘வாராக்கடன் சொத்து’ (NPA)’ குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். எந்தவொரு பொருளாதாரச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு. ஆனால், எந்தத் திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பது கப்பலைச் செலுத்தும் கேப்டனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் சுவாமி. இனிவரும் நாள்களிலாவது கப்பல் இலக்கு நோக்கிப் பயணிக்குமா... நாம் கரையேறுவோமா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.