Election bannerElection banner
Published:Updated:

மயிலாடுதுறை: `பொங்கலுக்குத் தயாரித்த மண்பானைகளை சுடக்கூட முடியலையே..!’ - வேதனையில் தொழிலாளர்கள்

மண்பாண்டத் தொழிலாளர்கள்
மண்பாண்டத் தொழிலாளர்கள்

`பொங்கலுக்கு பானைகள் நிறைய தயாரிச்சு வித்தால் ஓரளவு தலை நிமிரலாமுன்னு நெனச்சோம். கஷ்டப்பட்டுத் தயாரிச்சோம். தயாரிச்ச பானைகளை சூளையில்வைத்து சுடக்கூட முடியலையே...’

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், திருமயிலாடி, வேட்டங்குடி உள்ளிட்ட சில கிராமங்களில் பரம்பரைத் தொழிலாக மண்பாண்டப் பொருள்கள் செய்யப்படுகின்றன.  மிகக் குறைந்த அளவு தொழிலாளர்களே இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்கள். இந்த மண்பாண்டத் தொழிலாளர்களின வாழ்வாதாரம் சமீபத்தில் பெய்துவரும் தொடர்மழையால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மண்பாண்டத் தொழிலாளர்கள்
மண்பாண்டத் தொழிலாளர்கள்

மண்பாண்டங்கள் செய்து விற்று, பிழைப்பு நடத்திவரும் இவர்கள் இந்தத் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பி வாழ்ந்துவருகிறார்கள். கொள்ளிடம் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்பாண்டங்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே தயார் செய்துவைத்திருந்த மண்பாண்டங்களை விற்க முடியாத நிலைக்கு ஆளாகி பெருத்த நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டனர் இந்தத் தொழிலாளர்கள். கடந்த ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி விழா அனறு விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்வதற்குக் காத்திருந்த தொழிலாளர்கள் அவற்றையும் விற்பனை செய்ய முடியாமல்  ஏமாற்றமடைந்தனர்.

இதனால் பொங்கல் விழாவை முன்னிட்டு அதிக அளவில் மண்பண்டங்களைத் தயாரித்து  விற்பனை செய்து ஓரளவுக்கு லாபம் ஈட்டலாம் என்று கடந்த சில மாதங்களாக உழைத்து உற்பத்தி செய்துவந்த  மண்பாண்டத் தொழிலாளர்கள் மீண்டும்  ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தவண்ணம் இருந்துவருவதால், எதிர்பார்த்த அளவுக்கு மண் பாண்டங்களை தயாரிக்க முடியவில்லை. தற்போது பொங்கல் விழாவுக்காக அடுப்பு, பானை, சட்டி, கலயம், அகல் விளக்குகள் உள்ளிட்ட பலவகையான மண் பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யலாம், இனி மழை இருக்காது என்று நினைத்தனர். ஆனால், தற்போதும் மழை நீடித்த வண்ணம் இருப்பதால், செய்து தயார் நிலையில் வைத்திருக்கும் மண்பாண்டங்களைச் சுடவைக்க முடியவில்லை. குறைந்தது மூன்று நாள்களாவது வெயில் இருந்தால்தான் மண்பாண்டங்களைச் சூளையில் வைத்து சுட்டு எடுக்க முடியும். ஆனால், பொங்கல் விழாவுக்கு ஒரு தினமே இருக்கும் நிலையில் மண்பாண்டங்களைச் சுட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மண்பாண்டத் தொழிலாளர்கள்
மண்பாண்டத் தொழிலாளர்கள்

இது குறித்து வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் நல சங்கத் தலைவர்  மாரிமுத்து கூறுகையில், ``சுமார் 10 மாத காலம் எங்க வாழ்வாதாரத்தை கொரோனா முற்றிலும் முடக்கிடுச்சு. அதன் பிறகு விநாயகர் சதுர்த்தியிலும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமா விற்பனை இல்லை. கடைசிகட்டம் பொங்கலுக்கு பானைகள் நிறைய தயாரிச்சு வித்தா ஓரளவு தலை நிமிரலாமுன்னு நெனச்சோம். கஷ்டப்பட்டு தயாரிச்சோம். தயாரிச்ச பானைகளை சூளையில்வைத்து சுடக்கூட முடியலையே... கடந்த மூணு மாசகால உழைப்பு வீணாப் போச்சு. இதிலும் வருமானம் இல்லை. எனவே, அரசு எங்களுடைய வாழ்க்கை சூழ்நிலையை யோசனை பண்ணி நிவாரண உதவியா மண்பாண்டத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25,000 வீதம் வழங்கணும். இது பற்றி தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பியிக்கேன்"  என்றார் வேதனையோடு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு