Published:Updated:

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

மழைக்காலம் என்றாலே வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்கும். அதில் கொசுக்கள் உற்பத்தியாகும்.

பருவ காலங்களில் மழைக்காலம் ரம்மியமானது, ரசனை யானது. யாருக்குதான் மழை பிடிக்காது... ஆனாலும் சுகாதாரமற்ற பொதுச்சூழல், பெருகிவரும் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும் நிலை, மக்கள் பெருக்கம், காற்று மாசுபாடு போன்ற காரணங்கள் தரும் சிக்கல்களால் மழைக்காலம் மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் உங்களில், நீங்கள் வசிக்கும் வீட்டில் சில பாதுகாப்பு முன்னேற்பாடுகளைப் பின்பற்றினால் மழைக்காலத்தை இனிமையாகக் கடக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். உங்களுக்காக அவை குறித்த ஏ டு இஸட் ஆலோசனைகளையும் இங்கே தந்திருக்கிறார்கள்.
உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாக்க வேண்டும்? - பொது மருத்துவர் ஹேமமாலினி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 • மழைக்காலம் என்றாலே வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்கும். அதில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், வீட்டின் பால்கனி, மொட்டை மாடி, மாடித் தோட்டம் போன்ற இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 • மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை போன்ற நோய்களால்தான் மழைக்காலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் பல நோய்கள், பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பதால் உண்டாகின்றன. அதில் உட்காரும் ஈ, கொசு போன்றவை நாம் உண்ணும் உணவில் அமரும்போது அதை உண்ணும் நமக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே, உணவைப் பச்சையாக உண்பதைத் தவிர்ப்பதோடு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.

 • சமைத்த உணவுகளைச் சூடாகச் சாப்பிட வேண்டும். உணவை எப்போதும் மூடியே வையுங்கள். மூடி வைக்காத உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

 • மழைக்காலத்தில் இயல்பாகவே நமது செரிமான சக்தி குறையும் என்பதால் செரிமானம் அடைய தாமதமாகும் உணவுகளைச் சாப்பிட வேண்டாம். அதேபோல அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தையும் குறைத்துக்கொள்ளுதல் நலம்.

 • அதிக குளிர்ச்சியான உணவுகள், ஃபிரிட்ஜில் பதப்படுத்திய உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.

 • பீட்சா, பர்கர், பானி பூரி, பேல் பூரி, சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்ற உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்தப் பருவத்தில் நிறைய காய்கறிகள், பழங்கள், தானியங்கள், சத்து பானங்கள் போன்றவற்றைக் கொடுத்துப் பழக்குங்கள்.

 • தண்ணீரைக் கொதிக்கவைத்து மிதமான சூட்டில் பருகுவது நல்லது. தொண்டைப் பகுதியைக் கிருமிகள் தாக்காமல் இருக்க அவ்வப்போது சீரகத் தண்ணீரை வெதுவெதுப்பாக அருந்தலாம்.

 • காபி, தேநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் என்றாலும் அவற்றை அதிக அளவில் குடிக்கக் கூடாது. காபியில் இருக்கின்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கஃபைன் என்ற பொருளுக்கு மழைக்காலம், வெயில்காலம் என்ற பேதமெல்லாம் தெரியாது. எனவே காபி, தேநீர் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்து அவற்றுக்குப் பதிலாக இஞ்சி, சுக்கு, ஏலக்காய் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படும் மசாலா தேநீர், மூலிகை தேநீர் போன்றவற்றைப் பருகலாம்.

 ஹேமமாலினி
ஹேமமாலினி

தாயும் சேயும்!

 • மழைக்காலத்தில் பொதுவாகவே தாகம் அதிகமாக எடுக்காது. ஆனால், தாகத்துக்காகக் காத்திருக்காமல் அவ்வப்போது வெந்நீர் பருகுவதோடு சீரிய இடைவெளிகளில் குழந்தைகளுக்கும் வெந்நீர் பருகக் கொடுக்க வேண்டும்.

 • ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் கிருமிகளும் அதிகமாக இருக்கும். சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை உண்டாக்கும் கிருமித்தொற்று, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் உடல் சுத்தம் மிகவும் அவசியம். குறிப்பாக கைகால் நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 • மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குளிர்ந்த காற்று, சுகாதாரமில்லாத நீர், ஈரப்பதம், உணவில் இருக்கும் பாக்டீரியா போன்றவற்றால் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

 • கொட்டும் மழைக்குக் காரசாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது சகஜம்தான் என்றாலும் நாம் உண்ணும் எந்த உணவும் தாய்ப்பால் வழியாக, குழந்தைக்குச் செல்லும் என்பதை உணர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் அதற்கேற்ப கவனமாகச் சாப்பிட வேண்டும்.

 • அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் மருத்துவரின் அறிவுரையைக் கவனத்துடன் பின்பற்ற வேண்டும். மருத்துவர் குளிக்க அனுமதித்திருந்தால் தாராளமாகக் குளிக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களும் மருத்துவரின் அறிவுரைப்படி குளிக்கலாம். ஆனால், தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!
உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

சுய மருத்துவம் வேண்டாம்!

 • அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் புண் ஆறுவதற்காக, அல்லது நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவர் ஆயின்மென்ட் ஏதேனும் கொடுத்திருந்தால் அதைப் பயன்படுத்தலாம். மற்றபடி தாமாகவே ஆயின்மென்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி சுய மருத்துவம் செய்யக் கூடாது.

 • கர்ப்பிணிகள் புதிதாகத் தயாரித்த உணவுகளையே உண்ண வேண்டும். சில கர்ப்பிணிகள் ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களைக் கொஞ்சம் கடித்துச் சாப்பிட்டுவிட்டு மீதத்தை அப்படியே ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் அதை எடுத்துச் சாப்பிடுவார்கள். ஒரு பழத்தை எடுத்தால் அதை முழுவதுமாக சாப்பிட்டு விட வேண்டும்.

 • மழைக்காலத்தில் செரிமானம் மெதுவாக நடக்கும் என்பதால் கர்ப்பிணிகள் உணவை மொத்தமாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துப் பிரித்துச் சாப்பிடலாம். மிக முக்கியமாக வெளியிடங்களில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 • மழைக்காலத்தில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்திருக்க வேண்டும்.

 • குழந்தையின் தாய் மற்றும் குழந்தையைப் பார்த்துக்கொள்பவர் ஆகிய இருவர் மட்டுமே குழந்தையைக் கையாள வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்கள் குழந்தையைக் கட்டாயம் தொடக் கூடாது. குறிப்பாக, மருத்துவரின் அனுமதி இல்லாமல் தாமாகவே எந்தவொரு மருந்தையும் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.

 • பச்சிளங்குழந்தைகள் பெருமழைக்காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான குளிரை உணர்வார்கள். குளிரின் தன்மையைப் பொறுத்து குழந்தைக்குக் கையுறை, காலுறை போன்றவற்றைப் போட்டுவிடலாம். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி குழந்தையை தாய்மார்கள் தங்களது மார்புச் சூட்டில் அணைத்த படி வைத்துக்கொண்டால் குழந்தை மிகவும் இதமாக உணரும்.

 • பச்சிளங்குழந்தைகளுக்குப் பயன்படுத்திய துணிகளை எல்லாத் துணிகளுடனும் ஒன்றாகப் போட்டுத் துவைக்காமல் தனியாக வெந்நீரில் ஊறவைத்துத் துவைக்க வேண்டும். பின்னர், இந்தத் துணிகளை சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பிருக்கும் சுத்தமான இடத்தில் காயவைத்து எடுக்க வேண்டும்.

 • வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுக்கு நாப்கின் அணிவித்துவிட வேண்டாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் நாப்கின் அணிவிக்கலாம். ஆனால், நாப்கின் ஈரமானதும் உடனே அதை மாற்றிவிடுவது முக்கியம்.

 • மழைக்காலத்தில் குளித்தால் சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளை வெந்நீரில் குளிக்க வைக்கலாம். ஆனால், எண்ணெய்க் குளியலைத் தவிர்ப்பது நல்லது.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

கொசுக்கள் ஜாக்கிரதை!

 • ஆடையில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை, முழுக்கால் பேன்ட் என்று உடலை மூடும் வண்ணம் ஆடையை அணிவிக்க வேண்டும். இதனால் கொசுக் கடி மற்றும் பூச்சிக்கடியிலிருந்து அவர்களைக் காக்க முடியும்.

 • அதிக குளிர் இருப்பின் தூங்கும்போது கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதேபோல இரவில் கொசுவலையைப் பயன்படுத்தித் தூங்குவது மிகவும் பாதுகாப்பானது. அடர் நீல ஆடை அணிந்தால் கொசு அந்த வண்ணத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறது என்றும், லைட் கலர் ஆடைகள் கொசுக்களை ஈர்ப்பதில்லை என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே, தூங்கும்போது லைட் கலர் ஆடைகளை அணிந்து தூங்கலாம்.

 • மழைக்காலத்தில் வீட்டிலிருந்து யார் வெளியில் சென்றாலும் கையோடு ரெயின் கோட் மற்றும் குடை, சானிடைசர் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வப்போது கைகளை சோப் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள மறக்கக் கூடாது.

 • கட்டாயம் காலணிகள் அணிய வேண்டும். செருப்பு போட்டு நடந்தால் அது பின்பக்கம் அடித்து மழைத்தண்ணீர் உடையை நனைக்கிறது என்று சிலர் செருப்பில்லாமல் நடப்பதுண்டு. அப்படிச் செய்யவே கூடாது. வெறும் காலில் மழைச்சேற்றில் நடந்தால் கால் வழியாக நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!
உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

உள்ளாடைகளில் கவனம்!

 • மழையில் நனைந்து வீடு வந்து சேர்ந்தால் வெறுமனே துண்டால் தலையைத் துவட்டிவிட்டு வெது வெதுப்பான நீரில் நன்கு குளித்து உடை மாற்றுவது பாதுகாப்பானது.

 • உலர்ந்த ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். சரியாகக் காயாத அல்லது ஈர உடைகளை அணிந்தால் சரும நோய்கள் உங்களது உடல் தேடி வந்துவிடும். குறிப்பாக, சரியாகக் காயாத உள்ளாடைகள் சருமத்தில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

 • பெண்கள் தங்களது மாதவிடாய் நேரங்களில் சரியாகக் காயாத ஈரமான உள்ளாடையை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. மழைக்காலத்தின் மாதவிலக்கு நேரங்களில் பயன்படுத்துவதற்கென்றே ஐந்தாறு உள்ளாடைகளை வாங்கித் தனியாக வைத்துக் கொண்டு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

 • காய்ச்சல், சளி போன்றவை வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, குடும்பத்தில் யாருக்கேனும் காய்ச்சல், தும்மல், உடல்வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். அதை விட்டு விட்டு மருந்தகத்தில் நீங்களாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.

 • தேவையற்ற பயணங்கள் வேண்டாம். எந்த இடத்தில் எந்த மாதிரியான சிக்கல்கள் வரும் என்பது யாருக்கும் தெரியாது.

 • மழைக்காலத்தில் சுவரில் ஈரம் இருக்கும். எனவே, மின்சார சாதனங்களைக் கவனமாகப் பயன்படுத்துங்கள். குறிப்பாகக் குழந்தைகளை அவற்றைத் தொட அனுமதிக்கவே கூடாது. வீட்டுக்குள்ளேயே குழந்தைகள் விளையாடினாலும் அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டியது அவசியம்.

 • கூடுமானவரை வெளியில் செல்ல வேண்டாம். அப்படியே வெளியே சென்றாலும் தெருவிளக்கு அருகில் செல்வது, தெருவில் தேங்கியிருக்கும் மழை நீரில் விளையாடுவது போன்றவற்றைச் செய்ய குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

 • மாலை நேரத்தில் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடி வையுங்கள். அடிக்கடி மின்சாரம் தடைப்படும் என்பதால் டார்ச், செல்போன் போன்றவற்றை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

 • குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்து, மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!
உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

மூத்தோர் பாதுகாப்பு!

 • வயதானவர்கள் வீட்டுக்குள் மெதுவாக, கவனமாக நடக்க வேண்டும். முடிந்தால் வாக்கர் உபயோகிப்பது மிக நல்லது. குறிப்பாக, பாத்ரூமில் வழுக்கி விழும் வாய்ப்பும் மிக அதிகம் என்பதால் முதியவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு மிக நிதானமாகச் செல்ல வேண்டியது முக்கியம்.

 • உங்கள் வீட்டின் தரை மார்பிளாக இருந்தால் மற்ற வகை தரையைவிட இதில் குளிர் அதிகமாக இருக்கும். எனவே, இவ்வகை தரை உள்ள வீட்டில் செருப்பு அணிந்துகொண்டு நடமாடுங்கள். ஆனால் சிலருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு வீட்டுக்குள் செருப்பு அணியும் பழக்கம் இருக்காது. இவர்கள் திடீரென்று செருப்பு போட்டுக்கொண்டால் வீட்டின் படி, மிதியடி போன்றவற்றில் தடுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் செருப்பைத் தவிர்ப்பது நல்லது. இதற்குப் பதிலாக வீட்டில் ஆங்காங்கே வழுக்காத மிதியடிகளைப் போட்டு வைக்கலாம்.

 • மழைக்காலத்தில் தயிர், மோர் சாப்பிடக் கூடாது என்ற கருத்து ஒன்று நிலவுகிறது. அப்படி எதுவும் கிடையாது. உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது என்றால் தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த சில்லென்ற தயிரைச் சாப்பிடக் கூடாது. அதற்குப் பதிலாக அவ்வப்போது உரை ஊற்றிய ஃபிரெஷ் தயிரை சாப்பிடலாம்.

 • தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் மற்றும் இயல்பாகவே உலர்வான சருமம் கொண்டவர்களுக்கு மழை மற்றும் குளிர் காலங்களில் சருமம் மிகவும் உலர்வாகிவிடும். தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்ச்சரைஸிங் க்ரீம் பயன்படுத்தி இந்தப் பிரச்னையைச் சரி செய்யலாம்.

 • வீசிங் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மழைக்காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில உணவுப் பொருள்கள் தனக்கு அலர்ஜியைத் தந்து வீசிங்கை உருவாக்கிவிடும் என்பவர்கள் அந்த உணவுப் பொருள்களைத் தவிர்த்தாலே வீசிங் வராமல் தடுத்துவிடலாம். காலையில் சமைத்த உணவை இரவில் சாப்பிடுவது, குளுமை இயல்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது, ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்த சில்லென்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றை வீசிங் பிரச்னை உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

 • எந்தவொரு புதிய உணவையும் முயற்சி செய்யாதீர்கள். அது உடலுக்கு எவ்விதமான விளைவை உண்டாக்கும் என்று தெரியாது என்பதால் இதில் அசட்டுத் துணிச்சல் வேண்டாம்.

 • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பெரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்பவர்கள் மழைக் காலத்தில் மேற்கொண்டு தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 • மழைக்காலத்தில் கீரை சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கு இருக்கும். இந்தப் பருவத்தில் உங்களது உடலுக்குக் கீரை ஏற்றுக் கொள்கிறது என்றால் தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், பொதுவாகக் கீரை என்பது தரையுடன் தரையாக வளரும் தாவரம் என்பதால் மழைக்காலத்தில் அதில் மண், சகதி, சேறு, சுத்தமில்லாத தண்ணீர் போன்றவை சேர்ந்திருக்கும். இதனால் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மழைக்காலத்தில் கீரையுடன் கல் உப்பு, மஞ்சள் சேர்த்து மூன்று, நான்கு முறை நன்கு கழுவி சுத்தம்செய்து அதன் பிறகு, பயன்படுத்த வேண்டியது அவசியம். மற்றபடி, கீரை செரிமானம் ஆக சற்று தாமதமாகும் என்பதால் இரவு நேரத்தில் கீரை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!
உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

உடற்பயிற்சி பிரியர்களுக்கு...

 • வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு, ஜிம்முக்குச் செல்பவர்களுக்கு மழைக்காலம் மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிடும். இந்த உடற்பயிற்சிகளை திடீரென்று நிறுத்தியது உடலைப் பாதிக் கிறது, உடலின் நெகிழ்வுத்தன்மை குறைந்துவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு. இவர்கள் வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். யோகா பயிற்சிகளைச் செய்யலாம். வாங்க முடிகிற உடற்பயிற்சி உபகரணங்களை வைத்துக்கொண்டு வீட்டையே ஜிம்மாக மாற்றிக்கொள்ளலாம்.

 • மழைக்காலத்தில் சூரிய ஒளி போதுமான அளவுக்குக் கிடைக்காது. இதனால் பலர் வைட்டமின்-டி குறைபாட்டால் பாதிக்கப்படுவர். ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் மழைக்கால அளவு குறைவுதான். எனவே, பயப்படத் தேவையில்லை. இதையும் தாண்டி மழைக்காலத்தில் சூரிய ஒளி கிடைக்கும்போதெல்லாம் வீட்டின் பால்கனி, மொட்டை மாடி போன்றவற்றில் நின்று அவற்றை கிரகித்துக்கொள்வதும் நல்லது.

 • மழைக்காலத்தில் பலருக்கும் காதுவலி பிரச்னை உண்டாகும். குளிர் காரணமாகத் தொண்டை மற்றும் காதுப் பகுதியில் நமைச்சல் உண்டாகும். உடனே நாம் பட்ஸ் மூலம் காதைக் குடைய ஆரம்பிப்போம். இதனால் காது சவ்வில் ரணமாகி காதில் தண்ணீர் வடிய ஆரம்பிக்கும். எனவே, காதைக் குடையாதீர்கள். மழைக்காலத்தில் காதில் குளிர் தாக்காமல் இருக்க, காதை உல்லன் துணியால் மூடிக்கொண்டு தூங்கலாம்.

 • இரவு நேரத்தில் யாருக்கேனும் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டால் உங்களின் மருத்துவர் பரிந்துரைத்து நீங்கள் வைத்திருக்கும் பாரா சிட்டமால் மருந்தைக் கொடுத்துப் பார்க்கலாம். ஆனால், மறுநாளும் காய்ச்சல் தொடர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆனால், அதுவரை பாராசிட்டமால் மருந்தையே சாப்பிட்டிராதவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் நீங்களாகவே பாராசிட்டமால் மருந்தைக் கொடுக்கக் கூடாது. சில நேரம் பாராசிட்டமால் மருந்துகளும் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால் இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 • குடித்தால் அல்லது புகைத்தால் இந்தக் குளிருக்கு இதமாக இருக்கும் என்கிற சாக்குப் போக்கு ஏற்கவே முடியாதது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மழையைக் காரணமாக வைத்து அந்தப் பழக்கங்களை அதிகமாக்கிக் கொள்வதோ கூடவே கூடாது.

 • மழைக்காலத்தில் வீட்டில் முதலுதவிப் பெட்டி ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். பேண்டு-எய்டு, பேண்டேஜ் துணி, பஞ்சு, மருத்துவர் பரிந்துரைத்த பாராசிட்டமால் மருந்து, தீப்புண்களுக்கான மருந்து, சின்னச் சின்ன அடிகள் ஏற்பட்டால் போடுவதற்கான ஆன்டிசெப்டிக் மருந்துகள் போன்றவற்றை அந்தப் பெட்டியில் வைத்துக்கொண்டால் அவசரத்துக்குக் கைகொடுக்கும்.

 • வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் இருப்பின் அவசர நேரத்துக்குக் கைகொடுக்கும் ஆம்புலன்ஸ் உதவி எண்கள், மருத்துவமனை உதவி எண்கள் போன்றவற்றை எல்லோருக்கும் தெரியும்வண்ணம் வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான் திடீரென்று யாருக்கேனும் சுகவீனம் ஏற்பட்டால் உடன் இருப்பவர்கள் பதறாமல் அந்த எண்ணுக்கு போன் செய்து மருத்துவ உதவியைக் கேட்க முடியும்.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

பின்பற்ற வேண்டியஉணவுப் பழக்கங்கள் என்னென்ன? - ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

 • வெயில்காலத்தில் வெளியில் உள்ள வெப்பத்தைத் தாங்குவதற்கு ஓரளவுக்குக் குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டும். ஆனால், மழைக்காலத்தில் நம்முடைய உடல் வெப்பநிலையே குறைவாக இருக்கும்போது, குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜியால் உண்டாகும் ஜலதோஷம், சளி போன்ற பிரச்னைகள் வரும். அதேபோல மழைக்காலத்தில் வைரஸ் தொற்று, பாக்டீரியல் தொற்று போன்றவையும் சீக்கிரமாகப் பரவும் என்பதால் அதை அழிக்க சூடான உணவுகளையே சாப்பிட வேண்டும்.

 அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்
 • காபி அதிகம் பருகாதீர்கள். அதற்குப் பதிலாக ரசம், கஞ்சி, சூப் போன்றவற்றை சூடாகப் பருக வேண்டும்.

 • மழைக்காலத்தில் செரிமானம் மெதுவாகவே நடக்கும். அதுமட்டுமல்லாமல் உடல் இயக்கங்களும் சிறப்பாக இருக்காது. எனவே, இக்காலகட்டத்தில் கலோரி சற்று குறைவான உணவுகளை, எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை உண்ண வேண்டும்.

 • கொழுப்புச் சத்தை சற்று கூடுதலாகவே எடுத்துக்கொள்ளலாம். குளிரை நம்முடைய உடலானது தாங்க நமது சருமத்துக்கு கொழுப்பு உணவுகள் மிகவும் தேவை. அதனால் கொழுப்புச்சத்து பிரச்னை இல்லாதவர்கள் மழை நேரத்தில் கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, நல்ல கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளைச் சாப்பிடலாம். பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை உண்ணலாம். உடல்பருமன் பிரச்னையோ, உடலில் வேறு பிரச்னையோ இல்லாதவர்கள் வறுத்த உருளைக்கிழங்கு, வறுத்த மீன், வறுத்த சிக்கன் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம். பனீர் பக்கோடா, பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றையும் கொஞ்சம் சாப்பிடலாம். தவறில்லை.

 • காய்கறிகள், பருப்பு சேர்ந்த சமச்சீரான உணவுகளை வீட்டிலேயே சமைத்து சூடாகச் சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் ஹெவியாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

 • குழந்தைகள் ஜங்க் உணவுகளைச் சாப்பிடக் கூடாது. சில குழந்தைகளுக்கு பழங்களால் அலர்ஜி உண்டாகலாம். குறிப்பாக ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால் சில குழந்தைகள் தும்முவார்கள். எனவே, அலர்ஜி பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு மழைக்காலங்களில் மேற்சொன்ன பழங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!
உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

உணவும் ஒவ்வாமையும்...

 • அலர்ஜி பிரச்னை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பெரியவர்களும் மேற்சொன்ன பழங்களை மழைக்காலத்தில் தவிர்க்கலாம். பொதுவாகவே மழை, குளிர் காரணமாக உடலின் செரிமான இயக்கம் மெதுவாக நடக்கும் என்பதால் மழைக்காலத்தில் காலையில் பதினோரு, பன்னிரண்டு மணிக்குள் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. இரவு நேரத்தில் பிரியாணி போன்ற உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

 • மழைக்காலத்தில் கீரையைக் கல் உப்பு சேர்த்து மூன்று முறை முறையாகச் சுத்தம் செய்து நன்கு வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது. ஆனால், இரவு நேரத்தில் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக இரவில் முட்டைகோஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், சிலருக்கு சிலவகைக் கீரைகள் ஏற்றுக்கொள்ளாது. உங்களுக்கு முருங்கைக்கீரை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அதைச் சாப்பிடாதீர்கள். சிலருக்கு கீரையுடன் பருப்பு சேர்த்து மசித்தால் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்கள் கீரையைப் பொரியலாகச் சாப்பிடலாம். உங்கள் உடலுக்கு எப்படி ஏற்றுக்கொள்கிறதோ அப்படி மட்டும் சாப்பிடுங்கள்.

 • மழைக்காலத்தில் பழைய கஞ்சி சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆனால் பாலில் மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துச் சூடாகப் பருகலாம். இதனைப் பருகுவதால் தொண்டைக்கு இதம் கிடைப்பதோடு உடலுக்கான கால்சியம் தேவையும் பூர்த்தியாகும். பால் குழந்தைகளுக்கான உணவு என்பதால் குழந்தைகளுக்கும் வெதுவெதுப்பான பாலை அருந்தக் கொடுக்கலாம்.

 • மழைக்காலத்தில் ஐஸ்க்ரீமைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகளில் வைரஸின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே, மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது வைரஸ் கிருமிகள் தொண்டையில் நின்றுகொள்ளும் என்பதால் இதில் அலட்சியம் காட்டக் கூடாது. இதற்குப் பதிலாக கஸ்டர்டு தயாரித்து அதை அறை வெப்பநிலையில் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மேலும், சாலையோரங்களில் விற்கப்படும் பேல் பூரி, பானி பூரி போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். அவற்றில் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற தண்ணீர் குழந்தைகளுக்கு நோயைக் கொடுத்துவிடும்.

 • மழைக்காலத்தில் புரதம் நிறைந்த சுண்டல் உணவுகளைத் தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், சிலருக்கு சுண்டல் வாய்வுப் பிரச்னையை உண்டாக்கும். எனவே, பயறு வகைகளை முளைகட்டி பின்னர், சுண்டலாகச் செய்து சாப்பிட்டால் ஊட்டச்சத்தும் அதிகமாகக் கிடைக்கும்.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!
உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

மருந்தாகும் ரசம்!

 • மழைக்காலத்தில் சூரிய வெளிச்சம் அதிகம் கிடைக்காத காரணத்தால் கடலில் சில மாசுபாடு ஏற்பட்டு அதன் காரணமாகக் கடல் உணவுகளில் சிலவகை பாக்டீரியாவின் வளர்ச்சி உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அசைவ உணவுப் பழக்கமுள்ளவர்கள் மழைக்காலத்தில் கடல் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். மற்றபடி சிக்கன், மட்டன் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், அவற்றை டீப் ஃப்ரை செய்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

 • அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அதிக காரம் இல்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.

 • சிலர் மழைக்காலத்தில் ஒரு நாளைக்கு பல வகையான கஷாயங்களை அருந்துவார்கள். அப்படித்தான் சாப்பிட வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. தினமும் ரசம் சாப்பிட்டாலே போதும். மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துத் தயாரிக்கப்படும் ரசத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிஃபங்கல் தன்மைகள் இருக்கின்றன. அதனால் தினமும் ஃபிரெஷ்ஷாக ரசம் தயாரித்து சூடாகப் பருகினாலே மழைக்கால நோய்களிலிருந்து உடலைக் காக்கலாம்.

மழைக்காலத்தில் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? - மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில்

 சுல்தான்
சுல்தான்
 • மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாவதால் குளியலறை மற்றும் சமையலறையில் பாத்திரம் கழுவும் இடங்கள் போன்றவற்றில் பூஞ்சை வளரும். பாசி மட்டுமே கண்ணுக்குத் தெரியும் என்பதால் இந்தப் பூஞ்சையை யாரும் கவனிப்பது கிடையாது. இந்தப் பூஞ்சை பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் குளிக்கும்போது அவர்களை அறியாமலேயே குளியலறையின் சுவரைத் தொடுவார்கள். அப்போது சுவரில் இருக்கும் பூஞ்சை குழந்தையின் கைகளில் ஒட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. மிகக் குறிப்பாக, சரும அலர்ஜி, சுவாச அலர்ஜி உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்தப் பகுதிகளை அவ்வப்போது நன்கு சுத்தம் செய்து கழுவிவிட்டு பாசி மற்றும் பூஞ்சை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 • வீட்டுக்குள் கார்ப்பெட் விரிப்பது சமீபகாலமாக ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது. இந்த கார்ப்பெட்டில் ஈரப்பதம் அதிகமாகும்போது அதில் `மைட்ஸ்' எனப்படும் கண்ணுக்கே தெரியாத குட்டிக் குட்டிப் பூச்சிகள் உருவாகும். அதேபோல மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக இருக்கும் என்பதால் சிலர் பிளாங்க்கெட்களைப் பயன்படுத்துவதுண்டு. சரியாகச் சுத்தம் செய்யப்படாத பழைய பிளாங்க்கெட்களில் இந்த மைட்ஸ் பூச்சிகள் இருக்கும். இதை அப்படியே போர்த்திக்கொள்ளும்போது அலர்ஜி ஏற்பட்டு அதனால் தும்மல், சளி போன்றவையும் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, கார்ப்பெட் மற்றும் பிளாங்க்கெட்களை வெயிலில் காயவைத்து, தயாராக எடுத்து வைத்துக்கொண்டு மழை மற்றும் குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும்.

 • மழைக்காலத்தில் வீட்டின் ஜன்னல் கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் போன்றவற்றைப் போடலாம். ஆனால், இப்போதெல்லாம் கனமான திரைச்சீலைகள் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கின்றன. எனவே மழைக்காலத்தில் இந்தத் திரைச்சீலைகளுக்குப் பின்னால் கொசு, கரப்பான்பூச்சி போன்றவை ஒளிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதற்காகச் சிலர், திரைச்சீலைகளை ஆங்காங்கே சுருட்டிச் சுருட்டிக் கட்டி வைத்திருப்பார்கள். இதற்குள்ளும் கொசு போன்றவை ஒளிந்துகொள்ளும். எனவே, கட்டி வைத்திருக்கும் திரைச்சீலைகளை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அவிழ்த்துவிட்டு நன்கு தட்டிவிட்டு சுத்தம் செய்வது நல்லது.

 • கொரோனா காரணமாகப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. அலுவலக வேலைகளையும் பலர் வீட்டிலிருந்தே செய்கிறார்கள் என்பதால் ஷூக்களின் பயன்பாடு கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது. எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் ஷூக்களை சாக்ஸுடன் சேர்த்து அப்படியே போட்டு வைத்தால் அவற்றில் கிருமிகள் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல அதிகமான ஈரப்பதம் காரணமாக ஷூக்களிலும் பூஞ்சை உருவாகக்கூடும் என்பதால் ஷூக்களைப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ... வாரம் ஒருமுறை ஷூ ரேக்கை சுத்தம் செய்து ஷூக்களைத் தட்டித் துடைத்து வைக்க வேண்டியது அவசியம்.

உடல்... உணவு... உறைவிடம்... மழைக்கால பராமரிப்பும் பாதுகாப்பும்!

பூச்சிகளுக்கு குட்பை!

 • வீட்டின் பால்கனி போன்ற இடங்களில் நிறைய செடிகளை வளர்ப்பவர்கள் அப்பகுதிக்கு நெட் போட்டுக்கொண்டால் பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம்.

 • கரப்பான் பூச்சிக்கு இருட்டு என்றால் மிகவும் பிடிக்கும். குப்பைகளைக் குவித்து வைப்பது, பழைய அட்டைகள், பழைய பேப்பர்கள் போன்றவற்றை குவிப்பது, கடைகளில் கொடுக்கும் கவர்களை வீட்டில் சேர்த்துச் சேர்த்துக் குவித்து வைப்பது என்று வீட்டில் குப்பைகள் அதிகமாக இருந்தால் நிச்சயம் அந்த இடத்துக்கு கரப்பான் பூச்சிகள் வரும். கரப்பான்பூச்சி நோயை உருவாக்கும் தன்மை கொண்டது என்பதால் மழைக்காலத்தில் வீட்டில் மேற்சொன்ன குப்பைகளைச் சேர்க்காதீர்கள். வீட்டைச் சுற்றிலும் குப்பையைக் குவித்து வைக்காதீர்கள். வீடு சுத்தமாக இருந்தால் கரப்பான்பூச்சி வீட்டுக்குள் வராது.

 • மழைக்காலத்தில் கொசுக்களின் வரவு அதிகமாக இருக்கும். முடிந்தவரை ரசாயனப் பொருள்களைத் தவிர்த்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட முயற்சி செய்யலாம். நொச்சி இலை மற்றும் வேப்ப இலையைப் பயன்படுத்துவது, சிட்ரோநெல்லா என்ற ஒருவகை இலையிலிருந்து தயாரிக்கப்படும் அகர்பத்தியை ஏற்றி வைப்பது போன்ற இயற்கை வழிகள் கொசுவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த உதவும். அதேபோல மாலையில் விளக்கு ஏற்றி வைக்கும் நேரத்தில் வீட்டின் ஜன்னல், கதவுகளைச் சிறிது நேரம் மூடிவைத்திருந்தால் வீட்டுக்குள் கொசு அதிகம் வருவது ஓரளவுக்குக் கட்டுப்படும்.