Published:Updated:

“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”

சுரேந்திரா
பிரீமியம் ஸ்டோரி
News
சுரேந்திரா

அப்பா பணியாற்றிய பத்திரிகை அலுவலகத்துக்குச் சிறுவயதில் அநேகமாக தினமும் சென்றுவிடுவேன்

சென்னை ‘தி இந்து’ நாளிதழ் அலுவலக வாசலில், கையில் கேலிச்சித்திரக்காரர் பணிக்கான நேர்காணல் கடிதத்துடன் நின்றுகொண்டிருக்கிறார் அந்த இளைஞர். ஆந்திராவின் கடப்பாவுக்கு அருகே ஹனுமனகுட்டி என்ற குக்கிராமத்திலிருந்து வந்த அந்த இளைஞருக்கு, தெலுங்குப் பத்திரிகையுலகில் 12 ஆண்டுகள் அனுபவம் உண்டு என்றாலும், கேலிச்சித்திரக்காரராக அப்போதுதான் உருவெடுத்திருந்தார்.

புதிய நகரம், தெரியாத மொழி, ஆங்கில நாளிதழ் எனப் புதிய உலகம் மிரட்சியில் ஆழ்த்த, அருகிலிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயிலைப் பிடித்து ஊருக்குத் திரும்பிவிடலாமா என்றுகூட அவருக்குத் தோன்றியது. ஆனால், ஏதோ ஒன்று உந்த, தீர்மானத்துடன் உள்ளே நுழைந்துவிட்ட அந்த இளைஞர், ‘தி இந்து’வின் கேலிச்சித்திரக்காரராக வெளியே வந்தார். இந்தியாவின் அரசியல் கேலிச்சித்திரக் கலையின் முகமாக அடுத்த சில ஆண்டுகளில் உருவெடுத்த அந்த இளைஞர்... சுரேந்திரா!

1996 ஜூன் 6-ல் தன்னுடைய பிறந்த நாளன்று, ‘தி இந்து’வின் கேலிச்சித்திரக்காரராகப் பணியில் சேர்ந்த சுரேந்திரா, கூர்மையும் அங்கதமும் தெறிக்கும் பல பத்தாயிரம் கேலிச்சித்திரங்களை வரைந்து, அரசியல் கேலிச்சித்திரக் கலைக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார். 25 ஆண்டுகள் பணிக்குப் பிறகு சமீபத்தில் ஓய்வுபெற்றிருக்கும் சுரேந்திராவை, மழை ஓய்ந்த ஒரு மாலை வேளையில் சந்தித்தேன்.

“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”

“1982-ல் கல்லூரி முடித்திருந்த நிலையில், தெலுங்குப் பத்திரிகைகளில் வேலை பார்த்தேன். அந்த ஆண்டுகளில் கேலிச்சித்திரத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. 1984 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் ‘ஆந்திர பூமி’ என்ற பத்திரிகையில் இருந்தேன். அங்கு பக்க வடிவமைப்பு, அச்சுக் கோப்பு, கட்டுரை எழுதுவது, மொழிபெயர்ப்பு என மிகுந்த ஆர்வத்துடன் எல்லா வேலைகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அந்த ஆண்டுகளில்தான் கேலிச்சித்திரம் சார்ந்த என்னுடைய முயற்சிகள் தொடங்கின!” எனத் தன் ஆரம்பக் காலங்களைச் சுரேந்திரா நினைவுகூர்கிறார்.

சுரேந்திராவின் தந்தை ராமகிருஷ்ணா ஓர் எழுத்தாளர்; ஹைதராபாத்திலிருந்து வெளியான ‘ஆந்திர ஜோதி’ என்ற பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த அவர்தான், சிறுவயதில் தன் மீது தாக்கம் செலுத்தியவர்களில் முதன்மை யானவர் என்கிறார் சுரேந்திரா: “அப்பா பணியாற்றிய பத்திரிகை அலுவலகத்துக்குச் சிறுவயதில் அநேகமாக தினமும் சென்றுவிடுவேன். பிரசுரத்துக்கான கேலிச்சித்திரங்களை அப்பாதான் தேர்வு செய்வார். அந்தக் கேலிச்சித்திரங்களைப் பார்த்து நான் பிரமித்து நிற்க, ‘நீயும் வரைந்து பழகு’ என்று என்னை ஊக்குவிப்பார். நான் அந்தக் கேலிச்சித்திரங்களைப் பார்த்து வரையத் தொடங்கினேன்.

“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”
“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”

1990-களில் தெலுங்கின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கிய, ‘உதய’த்தில் கேலிச்சித்திரக்காரராகப் பணியில் சேர்ந்தேன். 1995-ல் திடீரென அப்பத்திரிகை மூடப்பட்டது என்னுடைய இயக்கத்தைச் சற்றே நிறுத்திவிட்டது போலிருந்தது. என்றாலும், அடுத்த சில மாதங்களிலேயே, காலை, மாலை, தினசரி என ‘ஹிந்தி மிலப்’, ‘ஆந்திர பிரபா’, ‘சிட்டிசன்ஸ் ஈவ்னிங்’ ஆகிய பத்திரிகைகளின் பகுதி நேரப் பங்களிப்பாளரானேன். அந்தக் காலகட்டத்தில் தான் ‘இந்தியா டுடே’வில் கேலிச்சித்திரக்காரர் பணி இருப்பதாக அறிந்து தில்லி சென்றேன்; அங்கு என்னை நேர்கண்ட அஜித் நினன், அரசியல் கேலிச்சித்திரம் போட எனக்கு வயது போதாது என்று சொல்லிவிட்டார்.

அப்போதுதான் ‘தி இந்து பிசினஸ்லை’னில் இருக்கும் ரவிகாந்த்திடம் இருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. ‘தி இந்து’வின் கேலிச்சித்திரக்காரர் கேசவ், நாளொன்றில் 12, 13 படங்கள் போட வேண்டியிருப்பதால், இன்னொரு கேலிச்சித்திரக்காரருக்கான தேவை இருப்பதாகக் கூறி என்னை விண்ணப்பிக்கச் சொன்னார். சிறுவயதிலிருந்தே ‘தி இந்து’ மீது எனக்கு பயம் கலந்த பிரமிப்பு இருந்தது; கேசவ் என்னுடைய மானசீக குருவாகவும் இருந்தார். அதே ஹிந்துவில் நானும் சேர்ந்தேன்” என்று நினைவுகூரும் சுரேந்திரா, ‘இந்து’வில் பணியாற்றிய 25 ஆண்டுகளில் வரைந்த கேலிச்சித்திரங்களின் எண்ணிக்கை திகைக்கச் செய்யும் அளவுக்குப் பல பத்தாயிரங்களைத் தாண்டுகிறது. ஒவ்வொன்றுமே தன்னளவில் தனித்துவம் வாய்ந்தவை.

“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”
“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”

“இந்தியாவின் ஆறு பிரதமர்கள், ‘இந்து’வின் ஆறு ஆசிரியர்களின் காலகட்டத்தில் நான் கேலிச்சித்திரங்கள் போட்டிருக்கிறேன். இந்தப் பணியில் மிகக் கடினமானதும், மிக எளிமையானதும் படங்களுக்கான ஐடியாவைப் பிடிப்பதுதான். போகிற போக்கில் சில நேரம் உதிக்கும் யோசனைகள், சமயங்களில் தலைகீழாக நின்றாலும் வராது. பிரசுரமான கேலிச்சித்திரம் ஒன்று பரவலான கவனம் பெற்று, பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்துகொண்டிருக்க, அடுத்த நாளுக்கான கேலிச்சித்திரத்துக்கு ஐடியா பிடிபடாமல் திணறிய தருணங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன” என்று சிரிக்கிறார்.

பேச்சின் நடுவே, ஆந்திர அரசாங்கத்தின் ‘ஒய்.எஸ்.ஆர். வாழ்நாள் சாதனையாளர் விருது’ சுரேந்திராவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக, அவர் மனைவி பெருமை பொங்கும் முகத்துடன் வந்து கைகுலுக்க, மிக அழகிய தருணம் ஒன்று அங்கே முகிழ்த்தது!

“அரசியல் கேலிச்சித்திரக் கலை என்பது கற்றுக்கொண்டு வருவதல்ல. கேலிச் சித்திரக்காரருக்குக் கோபம் இருக்க வேண்டும்... அந்தக் கோபம் கட்டுக்குள் இருக்க வேண்டும். கேலிச்சித்திரக்காரர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும். விமர்சனம் என்பது அவமதிப்பாக மாறிவிடக் கூடாது. எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகக் கேலிச்சித்திரங்களில் எழுதி விளக்கக்கூடாது என்று அதிகம் மெனக்கெடுவேன். ‘இந்து’வில் பிரசுரமான என்னுடைய முதல் கேலிச்சித்திரம் நரசிம்ம ராவைப் பற்றியது; பிரசுரமான என்னுடைய கடைசி கேலிச்சித்திரம் நரேந்திர மோடியைப் பற்றியது. பத்தாண்டுக் காலம் பிரதமராக இருந்ததால், மன்மோகன் சிங்கைப் பற்றி ஏராளமான கேலிச்சித்திரங்கள் போட்டி ருக்கிறேன்” என, தான் வரைந்தவற்றைக் காட்டி மகிழ்கிறார் சுரேந்திரா.

“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”
“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”
“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”
“கேலிச்சித்திரக்காரருக்கும் கோபம் இருக்க வேண்டும்!”

“கேலிச்சித்திரக்காரர்களின் எளிய இலக்குகள் பிரதமர்கள்தாம். ஆனால், இன்றைக்கு அப்படியில்லை... மிகக் கடினம் என்றுகூடச் சொல்லமுடியாது, விமர்சனம் சாத்தியமே இல்லாத சூழல் இன்று ஏற்பட்டிருக்கிறது. எங்களிடம் இருப்பது ராக்கெட் லான்சர்களோ, எந்திரத் துப்பாக்கிகளோ அல்ல... பென்சிலும் பேப்பரும்தான் இருக்கின்றன. இதைக் கண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்?” என்று கேட்கிறார். இது சுரேந்திராவின் கேள்வி மட்டும்தானா?

இறுதியாக, நீங்கள் கேலிச்சித்திரம் போடுவதைப் பார்க்க வேண்டும் என்ற நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், படம் ஒன்றை லாகவமாகப் போட்டுக் காட்டினார். அதில் பிரதமர் மோடி யாரிடமிருந்தோ தப்பித்து ஓடிக்கொண்டிருக்க, அர்த்தத்துடன் சிரிக்கிறார் சுரேந்திரா.