என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: மதுரை டு மாலத்தீவு - கேரம் சாம்பியன் அம்ஷவர்த்தினி

அம்ஷவர்த்தினி
பிரீமியம் ஸ்டோரி
News
அம்ஷவர்த்தினி

இரா.அர்ச்சனா

கேரம் விளையாட்டில் சர்வதேச அளவில் கலக்கிக்கொண்டிருக்கிறார், மதுரை பொண்ணு அம்ஷவர்த்தினி. மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் கடந்த ஆண்டு இளநிலை கணிதம் முடித்திருக்கும் இவர் 30-க்கும் மேல் மாநில அளவிலான போட்டிகள், 13 தேசிய அளவிலான போட்டிகள், 2 சர்வதேச போட்டிகள் என அனைத்துப் போட்டிகளிலும் தங்கம் வென்று வந்திருக்கும் சூறாவளி.

“நான் 10 வயசிலிருந்தே கேரம் விளையா டிட்டு இருக்கேன். 12 வருஷமா விளையாடிட்டு வர்றேன். சின்ன வயசுலேயே ஸ்போர்ட்ஸ்ல எனக்கு ஆர்வம். ரெண்டாவது படிக்கும்போது ஸ்கேட்டிங்ல மாவட்ட அளவில் சாம்பியன்ஷிப் வின் பண்ணினேன். இன்னொரு பக்கம் கேரம் போட்டிகள். ஒருமுறை ஸ்கேட்டிங் போட்டியால, கேரம் மாவட்ட அளவுப் போட்டியில விளையாட முடியாம போயிடுச்சு. ‘உனக்கு கேரம் முக்கியமா, ஸ்கேட்டிங் முக்கியமா?’னு என் கேரம் கோச் ராஜா சார் கேட்டார். ‘எனக்கு ரெண்டுமே ரெண்டு கண்ணு மாதிரி’னு சொன்னேன். ‘ஒரு ரூட்டை எடுத்து அதுல சாதிப்போம்’னு சொன்ன அவர், கேரம்ல எனக்கு ரொம்ப தீவிர பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சார். கேரம் போட்டிகள்ல என் சாதனைப் பயணம் தொடங்குச்சு” - குழந்தைகளுக்குக் கதை சொல்வதுபோல சுவாரஸ்யமாகத் தன் கதையைச் சொல்கிறார் அம்ஷவர்த்தினி.

2K kids: மதுரை டு மாலத்தீவு - கேரம் சாம்பியன் அம்ஷவர்த்தினி

“ஒன்பதாவது வகுப்பு வரைக்கும் மெட்ரிக் குலேஷன் பள்ளியில படிச்சேன். ஆனா, பத்தாம் வகுப்புக்குப் போனப்போ, ‘நாங்க படிப்புக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்போம், விளையாட்டு விளையாட்டுனு சொல்லிட்டு வகுப்புக்கு, தேர்வுக்கு எல்லாம் வராம இருந்தா அனுமதிக்க மாட்டோம்’னு சொன்னாங்க. அதனால, அந்த ஸ்கூலை விட்டுட்டு, கஸ்தூரிபாய் காந்தி கார்ப்பரேஷன் பள்ளியில சேர்ந்தேன். படிப்பு, விளையாட்டுனு ரெண்டிலும் கவனம் செலுத்தினேன். பத்தாவது படிச்சப்போ, கேரம்ல தேசிய அளவுப் போட்டியில் விளையாட நான் தேர்வானேன். ஆனா, போட்டி பொதுத்தேர்வு தேதிகள்ல வந்தது. கணக்குப் பரீட்சைக்கு நாலு நாள் லீவு. அப்போதான் போட்டி. அப்போ பள்ளியில இருந்துதான் ஃபிளைட் டிக்கெட் எல்லாம் ஏற்பாடு பண்ணிக்கொடுத்து என்னை அனுப்பி வெச்சாங்க. அந்தப் போட்டியில ஜெயிச்சுட்டேன். திரும்பி மதுரை வந்து இறங்கின அன்னிக்குத்தான், கணக்குப் பரீட்சை. டிரெயின் லேட் ஆகிடுச்சு. ஸ்டேஷன்ல இறங்கி நேரா எக்சாம் சென்டருக்குப் போனேன். பேனாகூட ஃபிரெண்ட்ஸ்தான் கொடுத்து உதவினாங்க. கணக்குப் பாடத்துல 98/100 மார்க் எடுத்தேன். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுல 488/500 மார்க். நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்” - தான் படிப்பிலும் சாம்பியன் என்பதை சர்ப்ரைஸ் க்ளைமாக்ஸ் வைத்துச் சொன்னார் அம்ஷ வர்த்தினி.

“இதுவரை ரெண்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாடி ஜெயிச்சிருக்கேன். ஒண்ணு சென்னை, மற்றொன்று மாலத்தீவு. மாலத்தீவுல நடந்த மேட்ச் மறக்க முடியாத அனுபவம். இங்கிருந்து கிளம்பும்போதே நாங்க புக் பண்ணுன பஸ் கேன்சல் ஆயிருச்சு. அப்புறம் டாக்ஸியில திருவனந்தபுரம் போய், அங்கிருந்து மாலத்தீவுக்கு ஃப்ளைட்டுல போனோம். மதுரை பொண்ணு நா மாலத்தீவுக்குப் போனப்போ, எல்லாமே மிரட்சியா, புதுசா இருந்தது. கேரம் போர்டுல அங்க பயன்படுத்தின பவுடர்கூட வித்தியாசமா இருந்துச்சு. `கப்பு முக்கியம் பிகிலு'னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன், மேட்ச்சும் வின் பண்ணிட்டேன்!

எல்லா ஸ்போர்ட்ஸ் மாதிரி கேரமுக்கும் ப்ராக்டிஸ் ரொம்ப அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்தது ரெண்டு மணி நேரம், அதே மேட்ச் டைம்னா அதிகபட்சம் எட்டு மணி நேரம் ப்ராக்டிஸ் பண்ணுவேன். ஆனா, மத்த விளையாட்டுகளுக்குக் கொடுக்குற முக்கியத்துவம் கேரமுக்கு கொடுக்கப்படுறது இல்ல. இதுவும் உடலும் மனசும் சேர்ந்து விளையாடுற விளையாட்டுதான். ஆனா, யுனிவர்சிட்டி லெவல்லகூட இப்போ கேரம் இல்ல. ஸ்போர்ட்ஸ் கோட்டாவிலும் கேரமை மதிக்கிறது இல்ல. மத்த கேம்ஸுக்கு கொடுக்குற அங்கீகாரம் கேரமுக்கு இல்ல எனும்போது, எப்படி பசங்க இதுல ஆர்வம் காட்டுவாங்க, இதை விளையாட வருவாங்க?” - ஆதங்கக் கேள்வி கேட்டவர்,

“நான் கேரம்ல இந்த அளவுக்கு சாதிச்சிருக் கேன்னா, அதுக்கு முழு காரணம் என் அம்மா, அப்பா, பயிற்சியாளர் ராஜா சார், நான் படிச்ச ஸ்கூல் டீச்சர்ஸ், காலேஜ் பேராசிரி யர்கள், நண்பர்கள் எல்லாரும் எனக்கு விடாம கொடுத்துட்டே இருந்த ஊக்கமும் ஆதரவும்தான். நம்மள நாலு பேரு நம்புறாங்க, கொண்டாடுறாங்கனு தெரிஞ்சா அதுலயே ஒரு தனி தைரியம் வந்துரும். எனக்கு ரோல் மாடல்னு யாரும் இல்ல. ஆனா, என்னை ரோல் மாடலா சிலராச்சும் எடுத்துக்கிற வரைக் கும் சாதிச்சுக்கிட்டே இருப்பேன்’’ என்று ரெட் காயினை பாக்கெட் செய்கிறார் அம்ஷவர்த்தினி.

வெற்றிகள் வசப்படட்டும்!