அன் அகாடமி, ஜெரோதா, நய்கா, ரேசர்பே, பாலிசிபஜார், போஸ்ட்மேன், ஃபின்லேப்ஸ் உள்ளிட்ட யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருக்கிறது கார்ஸ் 24.
சீரிஸ் 5 முதலீட்டை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. டி.எஸ்.டி குளோபல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் 20 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளதை அடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு 105 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான்கு ஆண்டுகளில் சாதனை...
விக்ரம் சோப்ரா, மெகுல் அகர்வால், ருசித் அகர்வால் மற்றும் கஜேந்திரா ஜாங்கிட் ஆகிய நான்கு நண்பர்கள் இணைந்து 2015-ம் ஆண்டு உருவாக்கிய நிறுவனம்தான் இந்த கார்ஸ் 24. விக்ரம் சோப்ரா குறுகிய கால பயணமாக அமெரிக்கா செல்லத் திட்டமிட்டார். அப்போது அவரிடம் இருந்த காரை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது அந்த காரை அவரால் விற்க முடியவில்லை. அதனால் நண்பரிடம் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபுதிய கார் வாங்குவது எளிதாக இருக்கிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதோ, விற்பதோ எளிதாக இல்லை; தவிர, வெளிப்படைத்தன்மை நிறைந்தவை யாகவும் இல்லை. இவை, பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத சந்தையிலே நிகழ்ந்து வருகிறது. அதனால் இந்தச் சந்தையைக் கைப்பற்றும் நோக்கத்தில் 2015-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த நிறுவனத்தை விக்ரம் சோப்ரா நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார்.

சாதகம் தந்த கோவிட்...
இந்த நிறுவனத்துக்கு கோவிட் ஊரடங்கு பெரும் பாதகமாக இருந்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து கடும் நிதி நெருக்கடியை இந்த நிறுவனம் சந்தித்தது. ஆனால், ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படும் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்குத் தேவை உயர்ந்துகொண்டே இருந்தது.
கோவிட் அச்சம் காரணமாக கார் வாங்கத் திட்டமிடுபவர்களும், இரு சக்கர வாகனத்தில் இருந்து கார் வாங்க வேண்டும் என நினைப்பவர் களும் அதிகரித்ததால், இந்த நிறுவனத்தின் விற்பனை கோவிட்டுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு லட்சம் கார்கள் வரை இந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் கைமாறுகின்றன. தற்போது 100 நகரங்களில் 230 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1,000 பேருக்கு 20 கார் மட்டுமே...
இந்தியாவில் கார்களின் பயன்பாடு சர்வதேச அளவில் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் 1,000 நபர்களுக்கு 20 கார்கள் மட்டுமே உள்ளன. ஆனால், சீனாவில் 200 கார்களும், அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் கார் பயன்பாடும் இருக்கிறது. அதனால் கார் வாங்கத் திட்டமிடு பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கும். அதே நேரத்தில், புதிய கார் சந்தையை விட பயன்படுத்தப்பட்ட கார் சந்தை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வரும். உதாரணமாக, 2019-ல் 36 லட்சம் புதிய கார்கள் விற்பனையானது. ஆனால், பயன்படுத்தப்பட்ட கார்கள் 40 லட்சம் விற்பனையானது. இந்தச் சந்தையைக் கைப்பற்ற அதிக நகரங்களுக்குச் செல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார் இதன் நிறுவனர்களில் ஒருவரான ருசித் அகர்வால்.
ஆர்.பி.ஐ அனுமதி...
மேலும், இந்த நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது. விரைவில் அதைத் தொடங்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறது. இந்தியாவில் வாங்கப்படும் 100 கார்களில் 80 கார்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கடன் மூலம் வாங்கப்படுகிறது. ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் 100 கார்களில் 15 கார்களுக்கு மட்டுமே நிதி கிடைக்கிறது. அதனால் வங்கி அல்லாத நிதி நிறுவனம் மூலமாகப் பயன்படுத்தப்பட்ட கார்களுக்குக் கடன் வழங்குவது குறித்த திட்டத்தையும் இந்த நிறுவனம் வைத்திருக்கிறது.
கார்களைப் போல, இரு சக்கர வாகனத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன் இறங்கி, விற்பனையை அதிகரித்து வருகிறது.
கொரோனாவை சாதகமாகப் பயன்படுத்திய நிறுவனங்களில் கார்ஸ் 24-ம் ஒன்று.