Published:Updated:

`அவருக்காகக் கனவுகளை உதறினேன்; விவாகரத்து கேட்கிறார்!'‍-ஐபிஎஸ் கணவரின் செயலால் கலங்கும் இளம்பெண்

மகேஷின் கேரியருக்கு உதவவேண்டும் என நான் என்னுடைய கனவுகளை உதறிவிட்டு அவருக்காகக் கடினமான வேலையைச் செய்துவந்தேன்.

பாவனா,  வெங்கட மகேஸ்வரா ரெட்டி
பாவனா, வெங்கட மகேஸ்வரா ரெட்டி ( Twitter )

ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்தவர் வெங்கட மகேஸ்வரா ரெட்டி. சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மகேஸ்வரா ரெட்டி தற்போது முசோரியில் பயிற்சியில் உள்ளார். ஹைதராபாத்தில் பொறியியல் படிக்கும் போது மகேஸ்வரா ரெட்டியும் தெலங்கானாவைச் சேர்ந்த பிரிதுல்லா பாவனா ( Birudula Bhavana ) என்ற பெண்ணும் நண்பர்களாக பழகி வந்துள்ள்ளனர். நாளடையில் இந்த நட்பு காதலில் முடிந்தது. ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்த பின்னர் மும்பை ஐஐடியில் மகேஸ்வரா ரெட்டி படிப்பை தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் பாவனாவுக்கு ரயில்வேயில் பணி கிடைத்தது. ஐஐடியில் படிப்பை முடித்த மகேஸ்வரா ரெட்டி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

பாவனா,  வெங்கட மகேஸ்வரா ரெட்டி
பாவனா, வெங்கட மகேஸ்வரா ரெட்டி

எத்தனை நாள்களுக்குதான் நாம் காதலர்களாக இருப்பது, திருமணம் செய்துகொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்துள்ளனர். பாவனா தனது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்துக்குச் சம்மதம் பெற்றார். நாம் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நமது காதலை எனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் திருமணம் செய்துகொண்டு பின்னர் எனது குடும்பத்தினரிடம் கூறலாம் என மகேஸ்வரா தெரிவித்துள்ளார். 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களது திருமணம் குறித்து வெங்கட மகேஸ்வரா தனது வீட்டில் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் இதுகுறித்து பாவனா கேட்கும் போது எதாவது ஒரு காரணம் கூறி சமாளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் மகேஸ்வரா ரெட்டி தேர்வாகினார். மகேஸ்வரா வீட்டில் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். பெரிய பெரிய இடங்களிலிருந்து வரன் வந்துள்ளது. இதனால் மனம் மாறிய மகேஸ்வர ரெட்டி பாவனாவிடமிருந்து விவாகரத்து கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாவனா விவாகரத்து வழங்க முடியாது எனக் கூறியுள்ளார். நம்முடைய திருமணத்துக்கு வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். நான் உனக்கு பணம் தருகிறேன். இருவரும் ரகசியமாக விவாகரத்து பெற்றுவிடலாம் எனக் கூறியுள்ளார். அதன்பின் மிரட்டல்களும் விடுத்துள்ளார்.

பாவனா,  வெங்கட மகேஸ்வரா ரெட்டி
பாவனா, வெங்கட மகேஸ்வரா ரெட்டி

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தனது கணவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்கு காவல்நிலையம் வரை சென்றதையடுத்து மகேஸ்வரா ரெட்டி தனது திருமணம் குறித்து வீட்டில் தெரிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஆனால் அவர் சொன்னபடி நடத்துகொள்ளவில்லை. வீட்டில் இருந்த அவருடைய பொருள்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் தெரிவித்தும் பாவனாவுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். முன்னதாக தனது கணவர் பயிற்சி பெறும் முசோரி பயிற்சி மையத்திலும் இதுதொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. இதனால் விரக்தியடைந்த பாவனா சமூகவலைதளத்தில் தன்னுடைய நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

பாவனா,  வெங்கட மகேஸ்வரா ரெட்டி
பாவனா, வெங்கட மகேஸ்வரா ரெட்டி

அதில், “மகேஷ் எனக்கு ஒரு நண்பராக அறிமுகமானார். என்னைப் பிடித்திருப்பதாகக் கூறினார். அதன்பின்னர் காதலிக்கிறேன் என்றார். நீயில்லாமல் என்னால் வாழ முடியாது என்றார். திருமணம் செய்துகொள்வேன் என சத்தியம் செய்தார். எங்களின் காதல் 9 வருடங்களை கடந்தது. திருமணம் செய்துகொள்ளலாம் என்றார். என் பெற்றோரிடம் பேசி அவர்தான் சம்மதம் வாங்கினார். நாங்கள் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தோம். தன்னுடைய கேரியருக்கு உதவ வேண்டும். நான் ஐ.ஏ.எஸ் ஆனால் தான் நம்முடைய திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.

நான் என்னுடைய கனவுகளை உதறிவிட்டு அவருக்காக கடினமான வேலையைச் செய்துவந்தேன். நான் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வானார். தனக்கு திருமண வரன் வருவதாகவும் தனக்கு நிறைய வரதட்சணை தர தயாராக இருக்கிறார்கள் என்றார். அவருக்கு இரண்டாம் கல்யாணம் செய்வது தொடர்பாக எந்த உறுத்தலும் இல்லை. அவருடைய பேச்சுகளும் மாறியது. திருமணம் நான் எடுத்த தவறான முடிவு என்றார். நான் உன்னை அழைத்துச்சென்றால் என் பெற்றோர் தற்கொலை செய்துகொள்வார்கள். எனக்கு விவாகரத்து வேண்டும் என்றார்.

பாவனா
பாவனா

என்னுடைய சமூகத்தைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினார். இதற்கு முன்பாக என்னுடைய சமூகம் தொடர்பாக ஒரு வார்த்தைகூட அவர் பேசியது இல்லை. விவாகரத்து பெற பணம் தருகிறேன் எல்லாவற்றையும் சுமுகமாக முடித்துக்கொள்ளலாம் என்றார். அதன் பின் மிரட்டல் தொனியில் பேசத்தொடங்கினார். உனக்கு உதவி செய்ய இங்கு யாரும் இல்லை. உன்னை அசிங்கப் படுத்திவிடுவேன் என்றார். எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் விவாதப்பொருளானதையடுத்து ஜவஹர் நகர் காவல்நிலையத்தில் மகேஸ்வரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.