Published:Updated:

சாதிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள்... பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைத்த கொடுமை!

- இதுதான் அரசின் சமூகநீதியா?

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா பேரிடரில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் 19 மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு மீண்டும் வந்த மாணவர்களை மேள தாளங்களுடன், மாலை அணிவித்து வரவேற்ற நிகழ்வுகளை பல்வேறு இடங்களிலும் பார்க்க முடிந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினே சென்னை கிண்டி மடுவங்கரை மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றார். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், யானையை வைத்து வரவேற்றார். இப்படியான மகிழ்ச்சி தருணங்களுக்கு இடையேதான் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சாதிவாரியாகப் பிரித்து பள்ளிக்கு வரவழைத்த சாதியக் கொடுமை அரங்கேறி, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

அந்தப் பள்ளியில் நவம்பர் 1-ம் தேதி பள்ளிக்கு வந்த நான்காம் வகுப்பு `பி’ பிரிவு மாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் முதல் பேட்ச்சில் எஸ்.சி பிரிவு மாணவர்கள் திங்கள், வியாழன் அன்றும், இரண்டாம் பேட்ச்சில் எம்.பி.சி., பி.சி பிரிவு மாணவர்கள் செவ்வாய், வெள்ளி அன்றும், மூன்றாவது பேட்ச்சில் பி.சி பிரிவு மாணவர்கள் புதன், சனிக்கிழமை அன்றும் பள்ளிக்கு வருகை புரியும் வகையில் பெயர்ப் பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டம் சேர்க்காமல், சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், இப்படிச் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது அறிந்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தரப்பினரும் கொதித்துப்போனார்கள்.

சாதிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள்... பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைத்த கொடுமை!

அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவர் நம்மிடம், ``பள்ளிகள் தொடங்கப்பட்டதும், பேட்ச் வாரியாக வகுப்புகள் நடத்தப்படும் என்றார்கள். அப்படிப் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட பட்டியலில், சாதிவாரியாக மாணவர்கள் பிரிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பள்ளியில் வசதியான, வசதி இல்லாத மற்றும் அனைத்துச் சாதி மாணவர்களும் படிக்கும் நிலையில் அவர்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தானே சீருடையே கொண்டுவரப்பட்டது! பிறகெப்படி சாதிப் பட்டியல் வந்தது? பிள்ளைகளுக்குச் சாதி என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களுக்கு `சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லித்தந்து, சமத்துவத்தையும் சமூகநீதியையும் கற்பிக்கவேண்டிய இடத்தில் இந்தப் பாகுபாட்டைக் காட்டியது ஏன்?” என்று ஆதங்கமும் வேதனையும் பொங்கக் கேட்கிறார்!

இது குறித்து விளக்கம் கேட்க சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி வெல்வெட் மேரியைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் தொடர்புகொள்ள முடியாத நிலையில், அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். ``எங்கள் பள்ளி வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் பெயர்கள் சாதிவாரியாக எழுதப்பட்டிருக்கும். மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற்றுத்தருவது போன்ற நிர்வாகத் தேவைகளுக்காகவே இப்படி பிரித்திருக்கிறோம். இது, பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. வருகைப் பதிவேட்டில் இருந்த வரிசைப்படி மாணவர்களைப் பிரிக்கும்போது சாதிரீதியாக வந்துவிட்டது. மற்றபடி மாணவர்களைச் சாதி அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படிச் செய்யவில்லை” என்றார்.

சாதிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள்... பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைத்த கொடுமை!

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) சினேகாவிடம் பேசினோம். ``இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்ததுமே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டோம். ஏற்கெனவே தொடர்ந்த நடைமுறையின் அடிப்படையில் அப்படிச் செய்ததாகக் கூறினார். ஆனாலும் அது தவறுதான். எழுத்துபூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அது வந்தவுடன் விசாரித்து, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வருகைப் பதிவேடுகளில் மாணவர்களின் பெயர்கள் அகரவரிசையில் மட்டுமே இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் பெயர்கள் எழுதுவது தவறு மட்டுமல்ல... அது நடைமுறையிலும் இல்லாத ஒன்று. சம்பந்தப்பட்ட பள்ளியில் இந்தத் தவறு உடனடியாகக் களையப்பட்டு, மாணவர்களின் பெயர்கள் அகர வரிசையில் எழுதப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், சென்னையில் மற்ற அரசுப் பள்ளிகளிலும் இப்படியான நடைமுறை இருக்கிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டதில், வேறு எங்கும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

சாதிவாரியாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள்... பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைத்த கொடுமை!

இது குறித்து விளக்கம் கேட்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தோம். அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், அவரது மின்னஞ்சல் முகவரிக்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினோம். இந்த இதழ் அச்சுக்குப் போகும்வரை பதில் வரவில்லை. ‘சமூகநீதியைக் காப்போம்... சமத்துவம் பேணுவோம்’ என்ற சூளுரையுடன் ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க அரசு தலைமையிலான ஆட்சியில்தான் இப்படியொரு சாதியப் பாகுபாடு அரங்கேறியுள்ளது. அதுவும், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயங்கும் ஓர் அரசுப் பள்ளியிலேயே இப்படி நடந்திருக்கிறதென்றால், தீண்டாமையும் சாதியக் கொடுமைகளும் நிலவும் கிராமப்புறங்களில் நிலை என்னவாக இருக்கும்... அங்கெல்லாம் எப்போது இது பற்றி ஆய்வு நடத்தப்போகிறது அரசு... குறிப்பாக, சென்னையில் அரங்கேறிய கொடுமைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்த அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு