Published:Updated:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை? - பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுகள்!

சென்னைப் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னைப் பல்கலைக்கழகம்

அனைத்துத் தகவல்களும் உண்மைதான். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் பேச இயலாது” என்று முடித்துக்கொண்டார்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை? - பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுகள்!

அனைத்துத் தகவல்களும் உண்மைதான். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் பேச இயலாது” என்று முடித்துக்கொண்டார்

Published:Updated:
சென்னைப் பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னைப் பல்கலைக்கழகம்

பாரம்பர்யமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தில், சாதியப் பாகுபாடு நிலவுவதாக அதிர்ச்சிகரத் தகவல் கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்த விஷயத்தை வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. ‘165 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் என்னதான் நடக்கிறது?’ விசாரணையில் இறங்கினோம்...

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜிடம் பேசினோம். “தொலைதூரக் கல்வி நிறுவனத்தில், 23 உதவிப் பேராசிரியர் பணியிடங்களைத் தற்காலிகமாக நிரப்ப, சமீபத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பற்றி எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவராக இருக்கும் பட்டியலினப் பெண் பேராசிரியருக்கு, ஓராண்டுக் காலமாகியும் துறைத் தலைவருக்கான அறை ஒதுக்கப்படவில்லை. தரமணி கேம்பஸிலுள்ள மருத்துவ உயிர் வேதியல்துறையில் பணியாற்றும் பட்டியலின இணைப் பேராசிரியருக்கு, அனைத்துத் தகுதிகளிருந்தும் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை? - பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுகள்!

கிண்டி கேம்பஸில் கோட்பாட்டு இயற்பியல்துறையில் உதவிப் பேராசிரியராக பட்டியலினத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பணியாற்றினார். அந்தத் துறைக்குத் தலைவரான ரீடா ஜான் என்பவர், ராதாகிருஷ்ணன் மீது சாதியப் பாகுபாட்டோடு நடந்துகொண்டதால், இது குறித்து தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் புகாரளித்தார் ராதாகிருஷ்ணன். புகாரின்மீது சென்னை மாநகர காவல்துறையும் விசாரணை நடத்தியது. ஆனால் துணைவேந்தரின் தலையீட்டால், துறைத் தலைவர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ‘ராதாகிருஷ்ணன் மனநலம் பாதிக்கப்பட்டவர். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பதால் தமிழ் மாணவர்கள்மீது பாகுபாடு காட்டுகிறார். மாணவிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துகிறார்’ என்கிற புகார்களை அடுக்கி, தரமணி கேம்பஸில் சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு அவரை டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்கள். டிரான்ஸ்ஃபரை எதிர்த்து ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இப்படி, சென்னைப் பல்கலைக்கழத்தின் பல துறைகளிலும் பட்டியலினப் பேராசிரியர்கள் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தகுதியும் ஆற்றலும் இருந்தும், எந்தப் பொறுப்பும் முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தராக கௌரி பதவியேற்ற பிறகுதான் இத்தகைய சாதியப் பாகுபாடுகள் அதிகமாகியிருக்கின்றன. தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து, பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பேராசிரியர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “அனைத்துத் தகவல்களும் உண்மைதான். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் பேச இயலாது” என்று முடித்துக்கொண்டார். மற்ற பேராசிரியர்களைத் தொடர்புகொண்டபோது, “எங்களால் வெளிப்படையாக எதுவும் பேச முடியாது. பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்படுவது உண்மை” என்பதை மட்டும் அழுத்தமாகக் கூறினார்கள்.

சாமுவேல்ராஜ், ராதாகிருஷ்ணன், கௌரி
சாமுவேல்ராஜ், ராதாகிருஷ்ணன், கௌரி

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரியிடம் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டோம். “தற்காலிகப் பேராசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரை, நான்கு மாதங்கள் மட்டுமே வேலை, 30,000 ரூபாய் சம்பளம். இதற்கு இட ஒதுக்கீடு கிடையாது. அதனால், விண்ணப்பங்களும் குறைவாகவே வருகின்றன. விண்ணப்பித்த சில பட்டியலினப் பேராசிரியர்களையும் பணிக்கு எடுத்துவிட்டோம். ராதாகிருஷ்ணன் மீது அவரின் துறைத் தலைவர் பல்வேறு புகார்களை அடுக்கினார். போலீஸ்கூட வந்து விசாரித்துவிட்டுச் சென்றது. அவரது பிரச்னை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதித்து, வேறு கேம்பஸுக்கு மாற்றிவிட்டோம். மற்றபடி அவரது பணப்பலன்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை. பல்கலைக்கழகத்தில், அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவராக இருப்பவருக்கு ஏற்கெனவே அறை ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அவர் வேறோர் அறையைக் கேட்பதால், அதை எங்களால் ஏற்பாடு செய்து தர முடியவில்லை.

பதவி உயர்வைப் பொறுத்தவரை, யு.ஜி.சி-யின் ‘கேரியர் அட்வான்ஸ்மென்ட் ஸ்கீம்’ நேர்முகத் தேர்வில் பங்கேற்று, வல்லுநர்குழு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். இதில் சாதியப் பாகுபாடெல்லாம் காட்டப்படுவதில்லை. நானும் அப்படி நடந்துகொள்வதில்லை. தேசிய அளவிலான ரேங்க்கிங்கில் சென்னைப் பல்கலைக்கழகம் பின்தங்கியதற்கு முக்கியக் காரணமே துறைத் தலைவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுவதுதான். மற்ற பல்கலைக்கழகங்களில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை துறைத் தலைவர்கள் மாற்றப்படுவார்கள். இங்கு அந்த நிலை இல்லை. அப்படியொரு நிலை உருவானால், கண்டிப்பாக பட்டியலினச் சமூகப் பேராசிரியர்கள் பலர் முன்னுக்குவர வாய்ப்பிருக்கிறது” என்றார்.

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்பது பள்ளியிலேயே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. தீண்டாமையின் வேர் ஆரம்பக் கல்வியிலேயே அறுத்து எறியப்பட வேண்டும். ஆனால், இப்போது பல்கலைக்கழகம் வரையிலும் ‘தீண்டாமை’ குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்துவிட்டன. காலத்துக்கேற்ப முன்னேறத் துடிக்கும் பட்டியலினச் சமூகத்தவர் இன்னும் எத்தனை காலம்தான் சிக்கல்களைச் சந்திக்க வேண்டும்?