Published:Updated:

“அம்மாவுக்கு கொள்ளிவைக்கக் கூடாது!” - ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்...

ஈச்சம்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஈச்சம்பட்டி

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்தக் கிராமத்துலதான். இங்கே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் அதிகமா இருக்காங்க.

“அம்மாவுக்கு கொள்ளிவைக்கக் கூடாது!” - ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்...

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்தக் கிராமத்துலதான். இங்கே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் அதிகமா இருக்காங்க.

Published:Updated:
ஈச்சம்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஈச்சம்பட்டி

செப்டம்பர் 17-ம் தேதி தமிழகமே பெருமையுடன் சமூகநீதி நாள் கொண்டாடியிருக்கிறது. சாதி, மதப் பாகுபாடுகளைக் களைந்து நீண்டதூரம் வந்துவிட்டோம் என்பதற்கான அடையாளமே இது. ஆனால், “அதெல்லாம் வெளிப்பூச்சுதான்... கலப்புத் திருமணம் செஞ்சுக்கிட்டோம்கிற ஒரே காரணத்துக்காக எங்கள்ல ஒருத்தரோட அம்மா இறந்தப்ப கொள்ளிவைக்கக்கூட தடைவிதிச்சாங்க. ஊருல நல்லது கெட்டது எதுலயுமே கலந்துக்க முடியலை...” என்று வேதனை பொங்கக் கதறுகிறார்கள் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டியில்தான் இப்படியோர் அவலம். இந்தக் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இங்கே ஊர் பட்டயத்தார் சொல்வதே எழுதப்படாத சட்டமாக இருக்கிறது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர். இது மட்டுமல்ல... பட்டயத்தாருக்குக் கீழே ஊரையே நான்காகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ‘கரைகாரர்’ என்கிற பெயரில் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அங்கு அவர்கள் வைப்பதுதான் சட்டம் என்றும் சொல்கிறார்கள்.

சிவராசு
சிவராசு

இந்தச் சாதிய ஒடுக்குதலால் ஊரைவிட்டு வெளியேறி, வெகுதூரம் இருக்கும் சிவகாசியில் வசித்துவருகிறார் பாஸ்கர். அவர் நம்மிடம், ‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்தக் கிராமத்துலதான். இங்கே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் அதிகமா இருக்காங்க. நானும் அதே சமூகத்தைச் சேர்ந்தவன்தான். 2011-ம் வருஷம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்கு கிராம பட்டையத்தாரும் கரைகாரர்களும் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. பஞ்சாயத்தைக் கூட்டி, ‘உன் மகனையும் மருமகளையும் குடும்பத்துல சேர்த்துக்கிட்டா, உங்க குடும்பத்தை ஒதுக்கிவெச்சுடுவோம்’னு எங்க அப்பா, அம்மாவை மிரட்டினாங்க. ஒவ்வொரு ஆடி அல்லது ஆவணி மாசத்துல எங்க ஊர்ல மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அதுக்கு எங்ககிட்ட வரிப்பணம் வாங்குறது இல்லை. திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள்ல எங்களை அனுமதிக்கிறதில்லை. கோயில்ல நிம்மதியா சாமி கும்பிடக்கூட முடியாது... கண்டபடி ஏசுவாங்க. எங்களை மட்டுமில்லை... எங்க ஊருல இப்படி முப்பது குடும்பங்களை ஒதுக்கிவெச்சுருக்காங்க. பட்டையத்தார் ரெங்கநாதன், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் தியாகராஜன் இவங்க ரெண்டு பேருதான் இதுக்கெல்லாம் காரணம். இவங்களைப் பத்தி போலீஸ்ல புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்குறதில்லை. அதனால, பிறந்த மண்ணுலருந்து வேரோடு பிடுங்கிப் போட்டதுபோல எங்கேயோ இருக்குற சிவகாசியில வாழ்ந்துட்டுவர்றோம்’’ என்றார் வேதனையுடன்!

“அம்மாவுக்கு கொள்ளிவைக்கக் கூடாது!” - ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்...

மாற்றுத்திறனாளியான செளந்தரராஜனுக்கு நடந்தது இன்னும் கொடுமை. “1977-ம் வருஷம் நான் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பொண்ணைக் காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காக 40 வருஷத்துக்கும் மேல என்னையும் என் மகனையும் ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சதால, பக்கத்து கிராமத்துல வசிக்குறேன். அம்மா சொந்த ஊர்லதான் இருந்தாங்க. அவங்க செத்தப்ப நான் அங்கே போனதால இறுதிச் சடங்கை செய்யறதுக்குக்கூட அந்தக் கிராமத்துல இருந்து யாருமே வரலை. யாராவது வந்தா அவங்களையும் ஒதுக்கி வெச்சுடுவோம்னு கட்டுப்பாடு போட்டுட்டாங்க. அதுக்கு பயந்துக்கிட்டு சொந்தப் பங்காளிங்ககூட இறப்புக்கு வரலை. ‘உங்க அம்மாவுக்கு நீ கொள்ளிவெக்கக் கூடாது. வேணும்னா உன் மகனைக் கொள்ளிவெக்கச் சொல்லு’னு கரைகாரங்க மிரட்டுனாங்க. இறுதிக் காரியத்துல சடங்குகளை செய்யுறத்துக்குக்கூட ஊர்ல இருந்து யாரையும் அனுமதிக்கலை. பிரேதத்தை வெச்சுக்கிட்டு எப்படிங்க ரொம்ப நேரம் இருக்க முடியும்? வேற வழியில்லாம வெளியில இருந்து ஆட்களை வரவெச்சு நானே கொள்ளிவெச்சேன்.

சௌந்தரராஜன், பாஸ்கர், ரெங்கநாதன், தியாகராஜன்
சௌந்தரராஜன், பாஸ்கர், ரெங்கநாதன், தியாகராஜன்

இதுமட்டுமில்லை... அக்கம் பக்கத்துல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் எங்களுக்குச் சொல்ல மாட்டாங்க. கூட்டமா கூடியிருக்குற இடத்துல ஜாடையில பேசுறது, மனைவியோட சாதிப் பேரைச் சொல்லி திட்டுறதுனு தொடர்ந்து நடக்குறதால மனம் நொந்துபோய்க் கிடக்குறோம். நான் காதலிச்சு, கல்யாணம் பண்ணினதுனால என்னோட மகன் கனகராஜும் ஊரோட சேர்ந்து வாழ முடியாம தவிக்கிறான். என் தலைமுறை, எங்க பிள்ளைங்க தலைமுறைதான் இப்படி நாதியில்லாமப் போயிட்டோம். இப்ப இருக்குற தலைமுறையாச்சும் இப்படி பாதிக்கப்படாம அதிகாரிங்க நடவடிக்கை எடுக்கணும். அதுக்காக கலெக்டர் வரைக்கும் மனு கொடுத்திருக்கோம்...” என்றபடி கண்கலங்கினார்.

பட்டயத்தார் ரெங்கநாதனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘அவங்க சொல்றதெல்லாம் பொய். யாரும் யாரையும் ஒதுக்கிவெக்கலை’’ என்றார். ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜனோ, ‘‘அப்படியெல்லாம் இல்லைங்க. அரசியல் காழ்ப்புணர்ச்சியால வேணும்னே பழி சுமத்துறாங்க. என் பெயரைக் களங்கப்படுத்தினவங்க மேல வழக்கு தொடர இருக்கேன்’’ என்றார்.

“அம்மாவுக்கு கொள்ளிவைக்கக் கூடாது!” - ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 30 குடும்பங்கள்...

இந்த விஷயத்தை திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் எடுத்துச் சென்றோம். “ஆமாம். ஏற்கெனவே இது குறித்துப் புகார் வந்திருக்கிறது. ஆர்.டி.ஓ தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். தவிர, போலீஸாரும் இது பற்றித் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் உறுதியாக.

சட்டத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைகளை சரிசெய்ய முடியாது... மாற வேண்டியது சாதியில் ஊறி, பாழாய்ப்்போன மனங்களும்தான்!