சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஜனநாயகத்தை மதிக்காத சாதி ஆதிக்கம்!

பழனிச்சாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பழனிச்சாமி

ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தத்தை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்த கொடுமையும், ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி ஆதிக்க சாதியினருக்கு முன் தரையில் உட்கார வைக்கப்பட்ட சம்பவமும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

ஒரு தலித் இந்தியாவின் குடியரசுத்தலைவராகக்கூட ஆக முடியும். ஆனால் ஊராட்சித்தலைவராக ஆவதோ அப்படியே ஆனாலும் சுயமரியாதையுடன் சுதந்திரமாக இயங்குவதோ கடினம். கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்த காலத்தில்தான் மேலவளவில் முருகேசன் என்ற தலித் ஊராட்சித் தலைவர் ஆதிக்கச்சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு தலித். ஆனால் இந்தியாவில் தலித் ஊராட்சித்தலைவர்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என்பதற்குத் தமிழகத்திலேயே இரண்டு சமீபத்திய உதாரணங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவி அமிர்தத்தை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்த கொடுமையும், கடலூர் மாவட்டம் தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி ஆதிக்க சாதியினருக்கு முன் தரையில் உட்கார வைக்கப்பட்ட சம்பவமும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதுபோன்ற கொடுமைகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னமும் பரவலாகத் தொடரத்தான் செய்கின்றன என்ற பகீர் தகவல்கள் நம்முன் கொட்டிக்கிடந்தன. அவற்றுள் சில...

``கீழே உட்காரச் சொல்லி மிரட்டுறாங்க!”

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது ஆத்தரங்கரைப்பட்டி கிராமம். இதன் ஊராட்சிமன்றத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனுவுடன் வந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது, “நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். இதனால், என்னுடைய ஊராட்சியின் துணைத்தலைவர் சேகர் என்பவர், என்னை அடிக்கடி மிரட்டுவதும், என்னைப் பணிசெய்ய விடாமல் தடுப்பதுமாக இருந்தார். பலமுறை நான் அமைதியாக இருந்தும் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்துவந்தார். ஒரு கட்டத்தில், என்னை அலுவலகத்திற்குள் இருக்கையில் அமர விடாமல், தரையில் அமரும்படி மிரட்டினார். மக்கள் வாக்களித்து என்னை ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னால் பணிசெய்ய முடியவில்லை என்பது ஒரு புறம் என்றால், தினமும் அவமானத்தை மட்டுமே சந்தித்துவருகிறேன். இதற்கு மேல் என்னால் பொறுமையா இருக்க முடியாது என்பதால்தான் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கலாம் என இங்கே வந்தேன். என்னை நிம்மதியாகப் பணிசெய்யவிட்டால் போதும். வேற எதுவும் வேண்டாம்..!” என்றார் கனத்த குரலில்.

இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, “புகார் மனு தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றனர்.

பழனிச்சாமி
பழனிச்சாமி

``அவ்வளவு திமிரால உனக்கு?”

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவிற்கு உட்பட்ட ஓலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஆடு மேய்த்துவரும் அதே ஊரைச் சேர்ந்த சிவசங்குவுக்கும் ஆட்டுக்கிடை போடுவது சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. கடந்த 8-ம் தேதி மேய்ச்சலின்போது பால்ராஜின் ஆடுகளில் ஒரு ஆட்டுக்குட்டி, சிவசங்குவின் ஆட்டுமந்தைக்குள் துள்ளியோடிச் சென்றுவிட்டது. குட்டியைப் பிடிப்பதற்காக மந்தைக்குள் சென்ற பால்ராஜை ‘எப்படில நீ என் மந்தைக்குள்ள நுழையலாம், அவ்வளவு திமிரால உனக்கு?’ன்னு சொல்லி கம்பால் அடித்து விரட்டியுள்ளார் சிவசங்கு. அடுத்த சில மணி நேரத்தில் சிவசங்குவின் மகன் சங்கிலிப்பாண்டி, மகள் உடையம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் ஏழு பேர் பால்ராஜை மீண்டும் அழைத்துவந்து சிவசங்குவின் காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கச் சொல்லியுள்ளனர்.

அத்துடன், சிவசங்குவின் காலில் பால்ராஜ், மூன்று முறை விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப, அது வைரலானது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அந்த வீடியோவை இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தார். இதுகுறித்து பால்ராஜ் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமாரிடம் புகார்மனு அளிக்க, சிவசங்குவின் மகன், மகள் உட்பட 7 பேர்மீது 8 பிரிவுகளில் கயத்தாறு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, பால்ராஜின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். அப்போது, பால்ராஜும் அவர் மனைவியும் மரியாதை நிமித்தமாக ஆட்சியரின் காலில் விழுந்தபோது பதறிப்போன ஆட்சியர், ‘காலில் விழுவது தவறு. இன்னொருவர் காலில் நீங்க விழுந்ததால்தான் நான் இப்போ ஆறுதல் சொல்ல வந்திருக்கேன். யார் காலிலும் விழக்கூடாது’ என அறிவுரை கூறிவிட்டுக் கிளம்பினார்.

பால்ராஜ்
பால்ராஜ்

சாதிக்கு மரியாதை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னூர் ஊராட்சி முதுவளர்குடிக் கிராமத்தில், அறந்தாங்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் செலவில் புதிதாகப் பயணிகள் நிழற்குடை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. நிழற்குடையில், எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி நரேந்திரஜோதி, ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து, துணைத் தலைவர் சுப்பு ஆகியோர் பெயர் எழுதப்பட்டுள்ள நிலையில், ஒன்றியச் சேர்மனாக இருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த உமாதேவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் பெயரைத் திட்டமிட்டே எழுதாமல் விட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சி ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதுபற்றி நம்மிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஜீவா, “ஒன்றியக்குழு உறுப்பினர் பெயர் எழுதப்பட்டுள்ள நிலையில், ஒன்றியச் சேர்மன் பெயர் எழுதப்படவில்லை. ஏனெனில், சேர்மன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். எம்.எல்.ஏ, ஒன்றியக்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் பெரிய பண்ணைகள். குறிப்பாக, ஒன்றியக் குழு உறுப்பினர் தன் பெயருக்கு முன்பு பட்டியலினத்தவரின் பெயர் வரக்கூடாது என்று திட்டமிட்டுத்தான் பெயரை வரவிடாமல் செய்திருக்கின்றனர். இதுதான் நவீனத் தீண்டாமையின் வடிவம். இதுபற்றி நான் ஒன்றியச் சேர்மனிடம் கேட்டேன். அப்படி ஒரு விழா நடந்ததே அவருக்குத் தெரியாது என்று சொன்னார். குன்னூர் ஊராட்சிமன்றத் தலைவரிடம் இதுபற்றி நான் கேட்டதற்கு எம்.எல்.ஏ நிதி, ஸ்கீம் பி.டி.ஓ தான் அவர் பெயரை விட்டுட்டு எழுதச் சொன்னார் எனச் சாக்குப்போக்கு சொல்கிறார். பெயரைப் புறக்கணித்த அனைவரின் மீதும் தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பயணியர் நிழற்குடை திறப்பு விழா, அரசு விழாவா அல்லது அ.தி.மு.க கட்சி விழாவா, சட்டமன்ற உறுப்பினரின் சொந்தப்பணமா, அல்லது மக்களின் வரிப்பணமா என்பது குறித்து எல்லாம் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுத்தான் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளோம். தொடர்ந்து, ஒன்றியச் சேர்மன் பெயரை நிழற்குடையில் எழுத வலியுறுத்திவருகிறோம். அப்படி எழுதாதபட்சத்தில் அடுத்த கட்டப் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்!” என்றார்

இதுபற்றி ஒன்றியச் சேர்மன் உமாதேவியிடம் கேட்டபோது, “எம்.எல்.ஏ நிதி என்பதால்தான் பெயரை விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்” என்கிறார்.

பதவி இருந்தும் நாற்காலி இல்லை!

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கத்தரிநத்தம் ஊராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். வயது 78. அதே ஊராட்சியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருக்கிறார். கத்தரிநத்தம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான கலைச்செல்வன் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தன்னுடைய ஊராட்சி இருக்க வேண்டும் என நினைத்து தன் வயலில் விவசாய வேலை செய்து வந்த அய்யாப்பிள்ளையைப் போட்டியிட வைத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஆக்கினார்.

ஜனநாயகத்தை மதிக்காத சாதி ஆதிக்கம்!

பேருக்குத்தான் அய்யாப்பிள்ளை பிரசிடெண்ட். ஆனால், நிர்வாகத்தைப் பார்ப்பது எல்லாமே கலைச்செல்வன்தான். ஊராட்சி மன்ற அலுவலகத்தில்தான் கலைச்செல்வன் அதிக நேரம் இருப்பார். அவர் இருக்கும் நேரத்தில் அய்யாப்பிள்ளை நாற்காலியில் உட்காராமல் தரையில்தான் உட்கார்வார். ‘ஏன் கீழே உட்கார்ந்திருக்கீங்க சேர்ல உட்காருங்க!’ எனக் கலைச்செல்வனும் சொல்ல மாட்டார். தன்னை ஜெயிக்க வைத்த நன்றிக் கடனுக்காக அய்யாப்பிள்ளையும் இதனை சகித்துக்கொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அய்யாப்பிள்ளையிடம் பேசினோம், “கலைச்செல்வன் தோட்டத்துல நான் வேலை பார்த்தேன். அவரே செலவு செய்து என்னை ஊராட்சி மன்றத் தலைவராக்கினார். அவர் இருந்தா நான் சேர்ல உட்கார மாட்டேன், தரையிலதான் உட்காருவேன். எனக்கு வயசாகிட்டதால தலைவருதான் எல்லாத்தையும் பார்த்துக்குறார். கையெழுத்து எதுவும் போட வேண்டியிருந்தா என்ன அழைச்சிக்கிட்டுப் போவாங்க. போட்டுக் கொடுத்துட்டு வருவேன். மற்ற நேரத்துல வீட்டுலதான் இருப்பேன். எனக்குரிய மரியாதையைக் கொடுக்க தலைவர் தம்பி எப்போதும் தவறியதில்லை!” என்றார் வெள்ளந்தியாய்.

``செருப்பைக் கழட்டி அடிக்க வந்தாங்க!”

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் 70 வயதான தட்சிணாமூர்த்தி. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவரான கனிமொழி, அவரின் கணவர் சேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலாளர் எனப் பலரும் தட்சிணாமூர்த்திக்கு உரிய மரியாதை தருவதில்லை.

தலைவர் என்கிற முறையில் ஊராட்சியில் என்ன பணிகள் நடக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், ‘நான் இல்லாமலேயே ஊராட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்துக் கேட்டதற்குத் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துகின்றனர்’ என தனக்கான நியாயத்தைக் கேட்டு தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு தட்சிணாமூர்த்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்புக்குள்ளாகியது.

ஊராட்சி மன்றத் தலைவர் தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம்.

“ஓட்டுக்கு ஒத்தப் பைசாகூட வாக்காளர்களுக்கு நான் கொடுக்கலை. என்மீது நம்பிக்கை வைத்து மக்கள் என்னை ஜெயிக்க வெச்சாங்க. அதுக்கு நன்றிக்கடனா ஊராட்சியில் மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வந்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லணும்னு நினைச்சுச் செயல்பட்டேன்.

இதனை விரும்பாத ஆதிக்கசாதியைச் சேர்ந்த துணைத் தலைவரான கனிமொழி சேகர், வார்டு உறுப்பினர்கள், ‘எங்களுக்குக் கீழதான் நீ... நாங்க சொல்றதைத்தான் நீ செய்யணும்!’ என்றனர். ஊராட்சியில் நடைபெறக்கூடிய எந்தப் பணிகளுக்கும் என்னைக் கலந்தாலோசிப்பது இல்லை. என் அனுமதி இல்லாமலேயே தன்னிச்சையாகப் பணிகளை ஒதுக்கி செஞ்சுட்டு வர்றாங்க.

இதைக் கேட்டதற்கு எல்லோர் முன்னிலையிலும் தரக்குறைவாகப் பேசுனாங்க. பி.டி.ஓ ஸ்ரீதேவிகிட்ட முறையிட்டதற்கு, ‘உங்களுக்கு ஒரு விவரமும் தெரியாதாமே, படிக்கத் தெரியாத நீங்க ஏன் தேர்தல்ல நின்னீங்க?’ என, துணைத் தலைவருக்கு ஆதரவாக அவரும் பேசினார். இதே போல் பிரதமரின் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுறதுக்கு 2வது வார்டுல பணிகள் தொடங்கியது. அந்த வார்டு உறுப்பினரான பாலமுருகன், ‘என்னோட வார்டுல கழிப்பறை கட்டித் தர்றதுக்கு நீ யார்? உன்னை யார் என் வார்டுக்குள்ள வரச் சொன்னா?’ன்னு பலர் முன்னிலையில் என்னோட வயதுக்குக்கூட மரியாதை கொடுக்காமல் கண்டபடி கெட்ட வார்த்தைகளால் திட்டி செருப்பைக் கழட்டி அடிக்க வந்தார். பலர் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் எனக்கு அவமானத்தையும், மன உளைச்சலையும் தந்ததோட உடல்நிலையும் பாதிச்சுது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு நடைபெறும் தீண்டாமைக்கு நீதி கேட்டு, வக்கீல் மூலமாக பி.டி.ஓ ஸ்ரீதேவிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கேன்!” என்னும் அவர் குரலில் போராட்ட குணம்.

தட்சிணாமூர்த்தி - சரிதா - செல்வி
தட்சிணாமூர்த்தி - சரிதா - செல்வி

``நீ சேர்ல உட்காரக்கூடாது!”

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே உள்ள ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்று தலைவராகியிருக்கிறார் சரிதா. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அது பிடிக்காத சிலர் சரிதாவுக்கு தீண்டாமைக் கொடுமையைச் செய்துள்ளனர். தலைவர் நாற்காலியில் அமரக்கூடாது என்பதில் தொடங்கி, ஊராட்சி அலுவலகத்தில் சரிதாவின் பெயரைக்கூட எந்த இடத்திலும் எழுதவிடவில்லை. கண்ணீருடன் சரிதா கோவை போலீஸ் எஸ்.பி-யிடம் புகார் அளித்தார்.

சரிதாவிடம் பேசினோம். “நான் ஜெயிச்சது அ.தி.மு.க-ல சிலருக்குப் பிடிக்கல. ‘அருந்தியர் நீயெல்லாம் இந்த சேர்ல உக்காரக் கூடாது’ன்னு பிரச்னை பண்ணுனாங்க. பாலசுப்பிரமணியம்னு ஒரு அ.தி.மு.க பிரமுகர், ‘என் முன்னாடி நீ நின்னுட்டுதான் பேசணும்’னு மிரட்டினார். என்னால எந்த வேலையும் செய்ய முடியல. என்ன பண்ணுறதுன்னு தெரியாமத்தான் கடைசியா போலீஸ்ல புகார் கொடுத்தேன். போலீஸ்காரங்க வந்து விசாரிச்சாங்க. பாலசுப்பிரமணியம் மேல வழக்கு பதிவு செஞ்சாங்க. இப்ப எந்தப் பிரச்னையும் இல்ல. பெயர்ப் பலகையெல்லாம் வெச்சாச்சு. இப்பவும் அந்த பாலசுப்பிரமணியம் நேரடியா பேசாட்டியும், ஜாடை மாடையா ஏதாவது பேசிட்டுதான் இருக்கார். இப்படிப்பட்டவரை, எதுக்காகக் கைது பண்ணாம இருக்காங்க?’ன்னு தெரியல. மக்கள்கூட என்னை ஏத்துக்கிட்டாங்க. அதிகாரத்துல இருக்கறவங்கனாலதான் முடியல. இங்க யாரும், யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல. என்ன மாதிரியே, நிறைய பேருக்கு அநீதி நடக்கறத பார்க்கறப்ப கஷ்டமா இருக்கு. இதுக்கு ஏதாவது விடிவுகாலம் பிறக்கணும். எங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கணும். மக்கள் கிட்டயும் விழிப்புணர்வு வேணும். பாலசுப்பிரமணியம் மாதிரியான ஆட்களைக் கைது செஞ்சு, இந்த மாதிரி ஒரு எண்ணம் யாருக்கும் வராத மாதிரி கடுமையா நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

``பயமா இருக்குங்க!”

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் செல்வி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். பஞ்சாயத்துத் தலைவர் ஆவதற்கு முன்பு கணவருடன் மின் மயானத்தில் பிணம் எரிக்கும் வேலை பார்த்துவந்துள்ளார். செல்வி பஞ்சாயத்துத் தலைவரானதை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் குப்புசாமி விரும்பவில்லை. தொடர்ந்து குடைச்சல் கொடுத்து மிரட்டியும், சாதியைச் சொல்லி அசிங்கப்படுத்தியும் வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செல்வியை குப்புசாமி அடிக்க முயல, பி.சி.ஆர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.

பஞ்சாயத்துத் தலைவர் செல்வியிடம் பேசினோம். “குப்புசாமி சொல்றதுல நான் கையெழுத்து போடணும். சட்ட விரோதமா அவர் என்ன செய்யச் சொன்னாலும் செஞ்சு, அதுக்கு நான் ஒத்துழைப்பு கொடுக்கணும்னு நினைப்பாரு. அதை நான் செய்ய மாட்டேன்னு சொன்னா பிரச்னை பண்ணுவாரு. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவ நம்மை ஆட்சி செய்யறாளே அப்படிங்கிறதை அவரால ஏத்துக்க முடியலை.

ஆறு மாசத்துக்கு முன்னாடி என்னை சாதியைச் சொல்லி, அடிக்க வந்துட்டாரு. அவர் மேல பி.சி.ஆர் கேஸ் கொடுத்தேன். போலீஸ் கைது பண்ணி 40 நாள் ஜெயில்ல போட்டாங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ரிலீஸ் ஆகியிருக்காரு. நேரடியா அவர் என்கிட்ட பேசலைன்னாலும், ‘பி.சி.ஆர் கேஸை வாபஸ் வாங்கு. எதுவா இருந்தாலும் பேசி முடிச்சிக்கலாம்’னு ஆள் வெச்சி மிரட்டிக்கிட்டு இருக்காரு. எந்நேரமும் பயமா இருக்குங்க!” என்றார்.