அலசல்
Published:Updated:

போராடியவர்கள் 71 பேர்மீது வழக்கு... போலீஸார்மீது வழக்கு இல்லை...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
பிரீமியம் ஸ்டோரி
News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா சி.பி.ஐ?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மக்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறையினர் ஒருவர்மீதுகூட வழக்கு பதிவு செய்யாமல், போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேர்மீது மட்டும் வழக்கு பதிவுசெய்து, சி.பி.ஐ ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் புகார் எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த சுற்றுவட்டார மக்கள், கடந்த 2018, மே 22-ம் தேதி பேரணி நடத்தினர். அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தின. ‘நியாயமான விசாரணை வேண்டும்’ என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாஞ்சிநாதன்
வாஞ்சிநாதன்

‘துப்பாக்கிச்சூடு நடந்ததே எங்களுக்குத் தெரியாது’ என்கிறரீதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு, பிறகு மக்களின் எதிர்ப்பைத் தணிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், விசாரணை ஆணையத்தை அமைத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையம் அளித்தது. அதில், ‘சி.பி.ஐ பதிவுசெய்த வழக்குகளைத் தவிர, காவல்துறை பதிவுசெய்த மற்ற வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நிறைவேற்றியதாகத் தமிழக அரசு தெரிவித்தது.

அனைத்துத் தரப்பிலும் விசாரணை நடத்திய சி.பி.ஐ., கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்திருந்தது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 71 பேரை குற்றவாளிகளாக வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ., துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் ஒருவரைக்கூட குற்றவாளியாகக் காட்டவில்லை என்று புகார் எழுந்துள்ளது. மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணையின் மீது புகார் தெரிவித்துள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் பேசினோம்.

“ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது வேதாந்தா நிறுவனத்தினர், அப்போதைய ஆட்சியாளர்கள், காவல்துறையினர் அனைவரும் கூட்டுச் சேர்ந்து நடத்தியதுதான் அந்தத் துப்பாக்கிச்சூடு. அதனால்தான், ‘இந்த வழக்கைக் குற்றம் இழைத்த தமிழக காவல்துறை விசாரிக்கக் கூடாது’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதனாலேயே உயர் நீதிமன்றமும், சி.பி.ஐ-யை விசாரிக்க உத்தரவிட்டது. தவிர, சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

ஆனால், ‘விசாரணைக்குப் பிறகுதான் காவல்துறையினர்மீது வழக்கு பதிவு செய்வோம்; கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நீக்க வேண்டும்’ என்று சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, விலக்கு பெற்றது. இருந்தாலும், அனைவரின் கண்ணுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச்சூடு என்பதால், காவல்துறைமீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பல மாதங்கள் விசாரணை நடத்திய சி.பி.ஐ., போராட்டத்தில் ஈடுபட்டதாக 71 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினரிடம் விசாரணை நடத்தினார்களா, துப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினார்களா, ஆதாரங்களைச் சேகரித்தார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளன. சிபி.ஐ விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அதனால்தான், சி.பி.ஐ விசாரணை காவல்துறைக்குச் சாதகமாக நடந்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறோம்.

போராடியவர்கள் 71 பேர்மீது வழக்கு... போலீஸார்மீது வழக்கு இல்லை...

முதல்வர் ஸ்டாலின் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ‘துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல மர்மங்கள் உள்ளன. இது திட்டமிட்டு நடத்தப்பட்டது’ என்று குற்றம்சாட்டினார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை ஆணையம் பரிந்துரை செய்ததையும் நிறைவேற்றினார். தற்போது தமிழக அரசு சி.பி.ஐ-க்கு அழுத்தம் கொடுத்தால்தான், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் காவல்துறையினர் கூறுவது பொய் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எங்களைப் போன்ற ஒருங்கிணைப்பாளர்களைக் கைதுசெய்து குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார்கள். போராட்டத்தில் உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்கள், வழக்கு போட்டதால் பாதிக்கப்பட்டவர்கள், அப்பாவிப் பொதுமக்கள் ஆகியோருக்கான நியாயம் என்ன என்பதுதான் எங்கள் கேள்வி. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்குவது மட்டும் நீதி அல்ல... குற்றம் இழைத்தவர்களுக்கும் தண்டனை வழங்குவதுதான் உண்மையான நீதி. அந்த வகையில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து மதுரை சி.பி.ஐ தரப்பு மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசியபோது, “இப்போதுதான் ஒவ்வொருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டு 25 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்கள். மீதியுள்ளவர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும். முழுமையாக அனைவருக்கும் சம்மன் வழங்கப்பட்ட பிறகுதான் யார் யார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும். சி.பி.ஐ ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளாது” என்றார்.

13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்... அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் என்றே நம்புகிறோம்.