Published:Updated:

அதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்!

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

கதிகலங்கிய ‘சாத்தான்’ போலீஸார்

அதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்!

கதிகலங்கிய ‘சாத்தான்’ போலீஸார்

Published:Updated:
சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்
சாத்தான்குளம் போலீஸார் மீதான இரட்டைக்கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள் உள்ளிட்ட ஐந்து பேர் தொடங்கி கோவில்பட்டி கிளைச் சிறையினர் வரை சி.பி.ஐ வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணையின் போது சி.பி.ஐ குழுவினர் துளைத்தெடுக்கும் கேள்விகளால் அதிர்ந்துபோயிருக்கிறார்கள் அவர்கள்.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன், முத்துராஜ் ஆகிய ஐந்து பேரையும் இரண்டு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயராஜையும் பென்னிக்ஸையும் விடிய விடிய சித்ரவதை செய்த அதே சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு ஜூலை 15-ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஐந்து பேரையும் அழைத்துவந்தது சி.பி.ஐ குழு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேனுக்குள் நான்கு மணி நேரம்... ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம்!

முதல் குற்றவாளியான ரகு கணேஷிடமிருந்தே விசாரணையைத் தொடங்கினார்கள் சி.பி.ஐ குழுவினர். ஒவ்வொருவரிமும் தனித்தனியே நடத்தப்பட்ட விசாரணையின்போது ஒருவருக்கொருவர் தெரிவித்த முரண்பாடான தகவல்கள் குறித்து மீண்டும் மீண்டும் விசாரித்தார்கள் சி.பி.ஐ போலீஸார். அவர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஐந்து பேரும் மிகவும் தடுமாறியிருக்கிறார்கள்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

ஐந்து பேரையும் தனித்தனியாக, காவல் நிலையத்தில் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற சி.பி.ஐ குழுவினர், ‘இங்கு வைத்துதானே ஜெயராஜை அடித்தீர்கள்...’, `இங்கு வைத்துதானே பென்னிக்ஸை அடித்தீர்கள்...’, `இதுதானே அந்த ரத்தக்கறை...’ என்றெல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு விசாரித்துள்ளனர்.

இதில் டென்ஷன் ஆன இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ‘இதே கேம்பஸுல இப்படி நாங்க எத்தனையோ பேரை விசாரிச்சிருக்கோம். எங்களை வேன்ல வெச்சு நாலு மணி நேரம் விசாரிச்சீங்க. திரும்பவும் ஸ்டேஷனுக்குள்ளே கூட்டிட்டுப் போய் ரெண்டு மணி நேரம் விசாரிக்கிறீங்க. கேட்டதையே கேட்டுக் கேட்டு டார்ச்சர் பண்ணாதீங்க... நாங்களும் போலீஸ்தான்” என்று கடுமையாகப் பேசினாராம். அவரிடம், சி.பி.ஐ ஏ.டி.எஸ்.பி-யான விஜயகுமார் சுக்லா சற்று காட்டம் காட்டிய பிறகே அவர் அமைதியானாராம்.

தான் கோலோச்சிய அதே ஸ்டேஷனுக்குள் குற்றவாளிபோல தன்னை அமரவைத்ததை நினைத்து ரகு கணேஷ் குமுறிக் குமுறி அழுதாராம். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் எப்படியெல்லாம் அடித்தோம் என்பதை ஒவ்வொருவரும் நடித்துக் காட்டியுள்ளனர்.

`பகீர்’ தகவல்கள்... பின்னணியில் ரேவதி, பியூலா...

எழுத்தர் பியூலாவிடமும் தனியாக நான்கு மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. ‘எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று தெரிவித்த அவர், ‘இன்ஸ்பெக்டர் சொன்னதால்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர்மீதும் வழக்கு பதிவு செய்தேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன்னர் இது போன்று நடந்த சம்பவங்கள் பற்றியும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் சிபிஐ-யிடம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்!

இந்த வழக்கில் முக்கியமான சாட்சியான தலைமைக் காவலர் ரேவதி, சி.பி.ஐ அதிகாரிகளிடம் தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லியிருக்கிறார். இரவுப் பணியில் அவர் இருந்ததால், ‘அன்றிரவு நடந்தது என்ன, எங்கு வைத்துத் தாக்கப்பட்டனர், உடனிருந்தவர்கள் யார் யார்? எனத் தான் பார்த்தவற்றையும், கேட்ட சத்தங்களையும் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம். இவை ஒவ்வொன்றையும் சி.பி.ஐ வீடியோவாகப் பதிவு செய்துள்ளது.

“நல்லா இருப்பீங்களாடா!” - பொதுமக்கள் சாபம்

இந்த விசாரணைக்கு இடையே இரவு 8:30 மணியளவில் ஐந்து பேரையும் ஏற்றிக்கொண்டு ஜெயராஜ் கடை இருக்கும் பகுதிக்கு வந்தது சி.பி.ஐ குழு. அங்கு வைத்தும் அவர்களிடம் வேனுக்குள்ளேயே விசாரித்துள்ளனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள், “ரெண்டு பேரை அநியாயமா அடிச்சே கொன்னுட்டீங்களேடா... அந்தக் குடும்பமே இப்போ நிலைகுலைஞ்சு நிக்குது... நீங்கல்லாம் நல்லா இருப்பீங்களாடா...” என்று கோபத்துடன் கத்தியபடி வேனுக்கு முன்பாக திரண்டுள்ளார்கள். நிலைமை சூடானதை உணர்ந்த சி.பி.ஐ குழு உடனடியாக அந்த இடத்தைவிட்டு கிளம்பிச் சென்றது.

மூன்று நாள்கள் சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகு ஐந்து பேரும் ஜூலை 16-ம் தேதி மீண்டும் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வருகிற 30-ம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனித உரிமை ஆணையம் விசாரணை!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மீடியாக்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர், சிறைத்துறை, மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு ஆகியோர் அறிக்கை அளிக்க ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
ஜெயராஜ் - பென்னிக்ஸ்

இதையடுத்து, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி-யான குமார் விசாரணை நடத்தினார். ஜெயராஜின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களிடம் அவர் விசாரித்தார். ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி, குமாரிடம் கதறி அழுதபடி போலீஸாரின் சித்ரவதைகளை விவரித்தாராம். அதேபோல தலைமைக் காவலர் ரேவதியும் ஆணையத்திடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வினிலாவிடமும் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது.

``ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர்களின் உடல்நிலை எப்படியிருந்தது, உடலில் எந்தெந்தப் பகுதிகளில் காயங்கள் இருந்தன, காயங்களின் தன்மை எப்படியிருந்தது, தகுதிச் சான்று அளிக்கக் காலம் தாழ்த்தியது ஏன், யாருடைய வற்புறுத்தலால் சான்று அளித்தீர்கள்...’’ என்று வினிலாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் டி.எஸ்.பி குமார். பல கேள்விகளுக்கு விரிவாகவும், சில கேள்விகளுக்குப் பதற்றமாகவும் பதிலளித்தாராம் வினிலா.

விசாரணையை உலகமே உற்று கவனித்துக்கொண்டிருக்கிறது. விரைவில் நியாயம் கிடைக்கட்டும்!

மாஜிஸ்ட்ரேட் மீது நடவடிக்கை இல்லையா?

அதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்!

“சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் மன்ற நடுவரான சரவணன் சம்பவத்தன்றே நீதிமன்றத்தில் முறையாக ஆய்வு செய்திருந்தால் தந்தை, மகன் இருவரையும் காப்பாற்றியிருக்கலாம்” என்கிறார்கள் வழக்கறிஞர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், “ஓர் உதாரணம் சொல்கிறோம்... இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் தர் உள்ளிட்ட ஐந்து போலீஸாரையும் காவலில் எடுக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனுதாக்கல் செய்தது. விசாரணை செய்த நீதிபதி ஹேமானந்த் குமார், ‘ஐந்து பேருக்கும் உடலில் காயங்கள் இருக்கின்றனவா?’ என்று கேட்டார். சி.பி.ஐ தரப்பில், ‘இல்லை’ என்று கூறப்பட்ட போதும், ‘ஐந்து பேரையும் சட்டையைக் கழற்றிக் காட்டச் சொல்லுங்கள்’ என்று கேட்டு, காயங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் இதைச் செய்யத் தவறிவிட்டார் சரவணன்” என்றார்கள்.

தருமபுரியைச் சேர்ந்த சரவணன் சட்டப் படிப்புக்குப் பிறகு, சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வழக்கறிஞராக இருந்தபோது அவரிடம் ஜூனியராக இருந்துள்ளார். 2020-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதிதான் அவர் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டார்.

சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். “பொதுவாக, காவல் நிலையத்தில் ஒருவர்மீது புகார் அளிக்கப்பட்டு, அதை ஏற்க மறுத்தால், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். ஆனால், அத்தகைய மனுக்கள்மீது சரவணன் அக்கறை காட்டாமல் இழுத்தடிப்பார். சாத்தான்குளம் வழக்கில் தந்தை, மகன் இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதுகூட சுமார் 20 அடி தூரத்தில் நின்றுகொண்டுதான் கையெழுத்திட்டுள்ளார்’’ என்றார்கள்.

‘உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும், உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் ரிமாண்டுக்கு உத்தரவிட்ட நீதிபதிமீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடங்கிய நான்கு அமைப்பினர் ஜூலை 6-ம் தேதி உயர் நீதிமன்றம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சுட்டிக்காட்டிய ஜூ.வி பதிவு செய்யப்பட்ட வழக்குகள்!

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் குறித்து 1.7.2020 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்! சாத்தான்குளம் போலீஸாரின் அட்டூழியம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது பலரும் இது போன்ற கொடூரத் தாக்குதல்களால் பாதிக்கப் பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

கொலை வழக்கு விசாரணைக்கு துரை என்பவர் சிக்காததால், அவரின் தம்பி மகேந்திரன் என்பவரை அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்ததில் தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணமடைந்தார். அது குறித்து அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தோம். இதையடுத்தே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

மகேந்திரன் - ராஜா சிங்
மகேந்திரன் - ராஜா சிங்

தொடர்ந்து 5.7.2020 தேதியிட்ட ஜூ.வி-யில், ‘சாத்தான் போலீஸ் - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையிலும் கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் அடைக்கப்பட்டபோது அவர்களுடன் அதே சிறைச்சாலையில் இருந்த ராஜா சிங் என்பவர் தன் உறவினரிடம் தெரிவித்த கருத்துகளையும் எழுதியிருந்தோம்.

அதில், ‘இருவரும் சிறைக்குள் வரும்போதே பலத்த காயங்களுடன் இருந்தார்கள்’ என்று தெரிவித்திருந்தார். மேலும், தன்னையும் சாத்தான்குளம் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் ஒரு மாதமாகியும் காயம் ஆறாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். நம்மிடம் தெரிவித்த கருத்துகளையே மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனிடமும் ராஜா சிங் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ராஜா சிங்கைத் தாக்கிய எஸ்.ஐ-க்களான ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர்மீது 8 பிரிவுகளில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism