Published:Updated:

சிசிடிவி இல்லாத ரயில் நிலையங்கள்... எங்கே போனது ரூ.62 கோடி?

சென்னை கடற்கரை ரயில்நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை கடற்கரை ரயில்நிலையம்

பறக்கும் ரயில் நிலையங்களின் நிலைமையோ இன்னும் மோசம். நடைபாதைகளில் விளக்குகள் எரியும் ரயில் நிலையங் களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சிசிடிவி இல்லாத ரயில் நிலையங்கள்... எங்கே போனது ரூ.62 கோடி?

பறக்கும் ரயில் நிலையங்களின் நிலைமையோ இன்னும் மோசம். நடைபாதைகளில் விளக்குகள் எரியும் ரயில் நிலையங் களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

Published:Updated:
சென்னை கடற்கரை ரயில்நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை கடற்கரை ரயில்நிலையம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பயணிகள் முன்னிலையில் நடைபெற்ற சுவாதி படுகொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. ஆனால், ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், மூன்று தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டின் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்துத்தான், குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தது போலீஸ்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முக்கியமான ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இருந்தபோதிலும், இன்றுவரை பல ரயில் நிலையங்களில் கேமராக் கள் இல்லை. அதற்குச் சமீபத்திய சில சம்பவங் களே சாட்சிகளாகக் கூண்டு ஏறியிருக்கின்றன...

சிசிடிவி இல்லாத ரயில் நிலையங்கள்... எங்கே போனது ரூ.62 கோடி?

தொடரும் குற்றங்கள்...

ஆகஸ்ட் 23-ம் தேதி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்த ரயிலில் ஏறியிருக்கிறான் போதை ஆசாமி ஒருவன். இதைப் பார்த்த ரயில்வே பெண் போலீஸ் ஆசிர்வா, “பெண்கள் பெட்டியில, அதுவும் குடிச்சுட்டு ஏறுறீங்களா... கீழ இறங்குங்க முதல்ல” எனத் தட்டிக் கேட்டார். உடனே, மறைத்துவைத்திருந்த கத்தியால் ஆசிர்வாவைக் குத்திவிட்டுத் தப்பியோடிவிட்டான் அந்த ஆசாமி. சம்பவம் நடந்த நடைமேடையில் சிசிடிவி கேமரா இல்லாததால், குத்தியவர் யாரென்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திக்கித் திணறியது போலீஸ். நான்கு தனிப்படைகள் மூன்று நாள்கள் தேடுதல் வேட்டை நடத்திய பிறகே, அந்த ஆசாமி திண்டிவனத்தைச் சேர்ந்த தனசேகர் என்பதைக் கண்டறிந்து கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

கடந்த ஜனவரி மாதம், சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்துக்கு வந்த மூன்று பேர், டிக்கெட் கவுன்ட்டர் ஊழியரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவரைக் கட்டிப்போட்டு 1.35 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கிலும் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், காவல்துறையினர் ரயில் நிலையம் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தனர். அப்போதுதான், ரயில்வே ஊழியரும், அவருடைய மனைவியும் திட்டமிட்டு இந்தக் கொள்ளை நாடகத்தை நடத்தியது தெரியவந்தது. இவையெல்லாம் சின்ன உதாரணங்கள்தான்.

சிசிடிவி இல்லாத ரயில் நிலையங்கள்... எங்கே போனது ரூ.62 கோடி?

விளக்குகள்கூட இல்லை!

சென்னையிலுள்ள ‘லோக்கல்’ ரயில் நிலையங்களுக்கு ‘விசிட்’ அடித்தோம். சுவாதி கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் 15-க்கும் அதிகமான கேமராக்கள் இருந்தன. ஆனால், சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில், புறநகர் ரயில் வரும் நடைமேடைகளில் ஓரிரு கேமராக்கள் மட்டுமே இருந்தன. கேமரா கண் இருக்கும் திசையைத் தவிர்த்து, மற்றொரு திசையில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல்தான். சைதாப்பேட்டை, பூங்கா நிலையம், கடற்கரை ரயில் நிலையங்களில் பெயருக்கு சில கேமராக்கள் இருக்கின்றன. ஆனால், பொதுமக்கள் மிகுதியாக வந்துபோகும் நடைமேடைகளில் அவை இல்லை. நடைமேம்பாலங்களில் யார் யாரோ படுத்திருக்கிறார்கள். அங்கும் ஒரு கேமராகூட இல்லை.

பறக்கும் ரயில் நிலையங்களின் நிலைமையோ இன்னும் மோசம். நடைபாதைகளில் விளக்குகள் எரியும் ரயில் நிலையங் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நிர்பயா திட்டத்தின் கீழ், தென்னக ரயில்வேக்கு மட்டும் 62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம், முக்கியமான 136 ரயில் நிலையங்கள் கண்டறியப் பட்டு, அங்கெல்லாம் சிசிடிவி கேமரா, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ‘அந்த அறிவிப்பு முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பது டன், அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களும் முழுப் பயன்பாட்டில் இல்லை’ என்பதே கள நிலவரம்.

என்ன சொல்கிறது போலீஸ்?

நம்மிடம் பேசிய ரயில்வே காவல்துறை அதிகாரிகள் சிலர், “ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில் பாதுகாப்பு அளிக்க வேண்டியது ரயில்வே காவல்துறையின் பொறுப்பு. பல ரயில் நிலையங்களில் வாசலைத் தாண்டினால், லோக்கல் காவல்துறையின் கட்டுப்பாடு ஏரியா வந்துவிடும். ‘குற்றவாளியை நாம் விட்டுவிட்டால், அவர்கள் பிடித்துவிடுவார்கள்’ என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கும்விதமாக, பெயருக்குச் சில கேமராக்களைப் போடுவதோடு நிறுத்திவிடுகிறது ரயில்வே நிர்வாகம். ஒரு குற்றச் சம்பவம் நடந்த பிறகுதான், சிசிடிவி இல்லாததே பிரச்னையாகிறது. இந்த நிலையை நிர்வாகம்தான் சீர்ப்படுத்த வேண்டும்” என்றனர்.

ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்

சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து எழும்பூர் ரயில்வே டி.எஸ்.பி ஸ்ரீகாந்த்திடம் பேசினோம். “பல ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராவே இல்லை என்பதை மறுக்கவில்லை. கேமரா வசதி ஏற்படுத்தித் தர பலமுறை வலியுறுத்தியும் இதுவரை செய்துதரப்படவில்லை. அப்படியே கேமராக்கள் இருந்தாலும், அவை நடைமேடையின் ஏதாவது ஒரு முனையில்தான் இருக்கின்றன. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை பல கல்லூரிகள் இருக்கின்றன. இந்த வழித்தடத்திலுள்ள பல ரயில் நிலையங்களில் ஒரு சிசிடிவி கேமராகூட கிடையாது. லட்சக்கணக்கானோர் வந்து செல்வதால், இங்கெல்லாம் ஏதாவது தவறு நடந்தால், அதைக் கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்” என்றார்.

சுவாதி கொலை செய்யப்பட்ட சமயத்தில், ‘சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட 43 ரயில் நிலையங்களிலும் டிசம்பர் 2016-க்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் உறுதியளித்தது. உண்மையிலேயே அந்த நிதி ஒதுக்கப்பட்டதா... கேமராக்கள் பொருத்தப்பட்டதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சுவாதி உயிரைப் பறிகொடுத்து ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், பெண்கள் பாதுகாப்பில் எந்த உருப்படியான முன்னேற்றமும் இல்லை என்பது தென்னக ரயில்வேக்கு அவமானம்!