Published:Updated:

ஹத்ராஸ்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்... சிசிடிவி பதிவுகள் இல்லை! - சி.பி.ஐ அதிர்ச்சி

ஹத்ராஸ்
ஹத்ராஸ்

மருத்துவர்களின் அறிக்கைகளையும் ஆதாரங்களையும் ஆய்வு செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகளுக்கு சம்பவம் நடைபெற்ற முதல் நாள் காட்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், 19 வயது பட்டியலினப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தற்போது சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது. இந்தநிலையில் முதல்நாளின் மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை என சி.பி.ஐ கூறியிருக்கிறது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தேதியான செப்டம்பர் 14 அன்று பதிவான சிசிடிவி காட்சிகளை மருத்துவமனையில் விசாரணை அதிகாரிகள் கேட்டபோது, ``மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ சம்பவம் நடந்தபோது எங்களிடம் கேட்டிருக்க வேண்டும். காட்சிகள் பதிவாகி ஒரு மாதம் ஆகிவிட்டதால், அதை வழங்குவது இயலாத காரியம். காட்சிகள் பதிவாகி ஏழு நாள்களில் தானாகவே அழிக்கப்பட்டு, மீண்டும் புதிய காட்சிகள் பதிவுசெய்யப்படும்" என மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் இந்திர வீர் சிங் கூறினார். மருத்துவமனை நிர்வாகத்திடம் யாராவது முன்னமே கேட்டிருந்தால் அதைக் கண்டிப்பாக வழங்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிசிடிவி
சிசிடிவி

காவல்துறையினரும் மாவட்ட அதிகாரிகளும் ஏன் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைப் பெற்று, பாதுகாக்கவில்லை என்ற கேள்விக்கு காவல்துறை அதிகாரி ஒருவர், ``மருத்துவமனைக்கும் குற்றச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குற்றம் மருத்துவமனையில் நடைபெறாததாலும், மருத்துவமனையில் புகாரளிக்கப்படாததாலும் மருத்துவமனைக் காட்சிகள் குற்றவியல் விசாரணைக்கு உதவாது என்பதால் ஆரம்பத்தில் அதை வாங்கவில்லை" என கூறினார்.

மருத்துவர்களின் அறிக்கைகளையும் ஆதாரங்களையும் ஆய்வு செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகளுக்கு சம்பவம் நடைபெற்ற முதல் நாள் காட்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில், முதல் நாள் காட்சிகளில் பாதிக்கப்பட்ட பெண் எப்போது அழைத்துவரப்பட்டார்... அவரைத் தொடர்புகொண்டவர்கள் யார், யார்... போன்ற பல கேள்விகளுக்கு விடையாக சிசிடிவி காட்சிகள் அமையும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரும் தந்தையும் நேற்று (புதன் கிழமை) காலை 11:30 மணியளவில் சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஏழு மணி நேர விசாரணைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஹத்ராஸ் சம்பவத்தை எதிர்த்து போராட்டம்
ஹத்ராஸ் சம்பவத்தை எதிர்த்து போராட்டம்
Mahesh Kumar A

மேலும் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் நான்கு பேரும் தற்போது இருக்கும் அலிகார் சிறையில், உள்ளூர்க்காரர்களின் ஆதரவு இருக்கும் என்பதால் வேறு சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த ஹத்ராஸ் துணைப் பிரிவு குற்றவியல் நடுவர் அஞ்சலி கேங்வார், `பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் கோரிக்கை உயரதிகாரிகளால் பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சிசிடிவி காட்சியைக்கூட சேமித்துவைக்காமல் அலட்சியம் காட்டியிருப்பதாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு