Published:Updated:

தியாகம் பண்ணாதீங்க பெண்களே!

கிரண் டெம்ப்ளா.
பிரீமியம் ஸ்டோரி
கிரண் டெம்ப்ளா.

கல்லூரி நாள்களில் பேரழகியாக அறியப்பட்டவர், இல்லத்தரசியானதும் எக்கச்சக்கமாக எடை கூடி, ஆளே மாறியிருக்கிறார்.

தியாகம் பண்ணாதீங்க பெண்களே!

கல்லூரி நாள்களில் பேரழகியாக அறியப்பட்டவர், இல்லத்தரசியானதும் எக்கச்சக்கமாக எடை கூடி, ஆளே மாறியிருக்கிறார்.

Published:Updated:
கிரண் டெம்ப்ளா.
பிரீமியம் ஸ்டோரி
கிரண் டெம்ப்ளா.

உருண்டு திரண்ட ஆர்ம்ஸும், சிக்ஸ்பேக் உடலுமாக முதல் பார்வையிலேயே மிரட்டுகிறார் கிரண் டெம்ப்ளா. சூர்யா, தமன்னா, டாப்ஸி, பிரபாஸ், அனுஷ்கா, இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட செலிப்ரிட்டீஸின் ஃபிட்னெஸ் டிரெயினர். பத்து வருடங்கள் பின்னோக்கிய கிரணின் வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது. அதிலிருந்து அவர் மீண்டதும் ஜெயித்ததும் அசாதாரண சாதனை.

“1997-ம் வருஷம் அஜித் என்பவரோடு கல்யாணமானது. கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனையோ மேடைகளில் பாடிட்டிருந்த எனக்கு, கல்யாணத்துக்குப் பிறகு கிச்சனில் மட்டும்தான் பாடுவதற் கான வாய்ப்பு கிடைச்சது. முழுநேர இல்லத்தரசியா மாறினேன். காலையில் எழுந்ததிலிருந்து ராத்திரி படுக்கப் போகிறவரைக்கும் வேலை, வேலை, வேலை. குழந்தைங்களைப் பார்த்துக்கிற கூடுதல் வேலையோடு வாழ்க்கை எந்த மாற்றமும் இல்லாமப் போயிட்டிருந்தது. நான் என்னைக் கண்ணாடியில பார்க்கவே மறந்திருந்த நாள்கள் அவை. எதேச்சையா ஒருநாள் அப்படிப் பார்த்தபோது என்னை எனக்கே அடையாளம் தெரியலை’’ குடும்ப அமைப்பில் தொலைந்துபோகும் லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பிரதிநிதியாகப் பேசுகிறார் கிரண். கல்லூரி நாள்களில் பேரழகியாக அறியப்பட்டவர், இல்லத்தரசியானதும் எக்கச்சக்கமாக எடை கூடி, ஆளே மாறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒரு திடீர் அதிர்ச்சியும் காத்திருந்தது.

தியாகம் பண்ணாதீங்க பெண்களே!
தியாகம் பண்ணாதீங்க பெண்களே!

‘‘ஒருநாள் தூக்கத்திலிருந்து என்னால எழுந்திருக்கவே முடியலை. தாங்க முடியாத தலைவலி. என் வலது பக்க மூளையில ரத்தக்கட்டி இருக்குறதா சொன்னாங்க டாக்டர்கள். அதுக்காக அவங்க கொடுத்த மருந்து, மாத்திரைகள் எப்போதும் என்னை மயக்க நிலையிலேயே வெச்சிருந்தது. அதன் விளைவா இன்னும் வெயிட் அதிகரிச்சது. மன உளைச்சல் தாங்க முடியலை. அதைப் பார்த்துட்டு, என்னை வீட்ல இருந்தபடியே பாட்டு கிளாஸ் எடுக்கச் சொன்னார் கணவர். கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பிறகு மறுபடி இசை என் வாழ்க்கைக்குள்ள வந்தது. அக்கம்பக்கத்துக் குழந்தைங்களுக்குப் பாட்டு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். ஆனா நாளுக்கு நாள் அதிகரிச்ச எடை, மூட்டுவலி, அடிக்கடி மயக்கம்னு என் உடம்பு அதுக்கு ஒத்துழைக்கலை. வெயிட்டைக் குறைக்கிறதுதான் ஒரே வழின்னு சொன்னாங்க டாக்டர்கள். யோகா, நீச்சல்னு பலவற்றையும் முயற்சி பண்ணி கடைசியா ஜிம்ல சேர்ந்தேன்.

ஜிம்முல சேர்ந்த எனக்கு முதல் நாளே செம ஷாக். திரும்பின பக்கமெல்லாம் ஆண்கள். கூச்சப்பட்டுக்கிட்டு ஓரமா போய், எனக்குத் தெரிஞ்ச வொர்க் அவுட்டைப் பண்ணிட்டி ருந்தேன். யாரைப் பார்த்து பயந்தேனோ அந்த ஆண்கள்தான் எனக்கு வொர்க் அவுட் பத்தி ஆலோசனைகள் கொடுத்து கைடு பண்ணினாங்க. வொர்க் அவுட்ல என் ஆர்வம் அதிகமாச்சு. வெயிட் குறையக் குறைய என் தன்னம்பிக்கை கூட ஆரம்பிச்சது. உடல்நிலையும் தேறியது.

அமெரிக்கன் ஃபிட்னெஸ் அண்ட் பர்சனல் டிரெயினர் கோர்ஸ் முடிச்சேன். சொந்தமா ஜிம் தொடங்கினேன். ஒருமுறை எதேச்சையா நடிகர் ராம்சரண் தேஜாவை சந்திச்சேன். பாடி பில்டர் மாதிரியான என் தோற்றத்தைப் பார்த்துட்டு, தன் மனைவி உபாசனாவுக்கு டிரெயின் பண்ணச் சொல்லிக் கேட்டார். அதுதான் ஆரம்பம். அப்படியே சூர்யா, தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், இயக்குநர் ராஜமௌலின்னு நிறைய பிரபலங்களோடு வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. என் வாழ்க்கையின் செகண்டு இன்னிங்ஸ் வெற்றிகரமா ஆரம்பிச்சது.

வாழ்க்கையில வேற ஏதாவது சாதிக்கணும்னு தோணுச்சு. சிக்ஸ்பேக் வைக்கலாம்னு முடிவெடுத்தேன். சிக்ஸ்பேக் தோற்றத்தை அடைஞ்சதும் ஒரு போட்டோஷூட் பண்ணினேன். அந்தக் கண்காட்சியைத் திறந்துவைக்க ராஜமௌலியும் நடிகை அனுஷ்காவும் வந்திருந்தாங்க. அடுத்தநாள் அத்தனை மீடியாவிலும் நான்தான் நியூஸ். அதைப் பார்த்த இந்தியன் பாடி பில்டிங் ஃபெடரேஷன், வேர்ல்டு சாம்பியன்ஷிப்ல எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. அதுவரைக்கும் அந்தப் போட்டியில பெண் பாடி பில்டர்கள் இருந்ததில்லை. ‘அந்தப் போட்டியில பிகினி போடணும், அதெல்லாம் வேண்டாம்’னு சொன்னார் கணவர். புரிய வெச்சேன்.

தியாகம் பண்ணாதீங்க பெண்களே!
தியாகம் பண்ணாதீங்க பெண்களே!

போட்டியில கலந்துக்கிறதுக்கு பதினஞ்சு நாள் முன்னாடி மாமனார் தவறிட்டதால அவசரமா மும்பைக்குப் போக வேண்டியிருந்தது. சாவு வீட்டுல வொர்க் அவுட் பண்ணவோ, எனக்கான பிரத்யேக சாப்பாட்டை சாப்பிடவோ முடியாத நிலை. ‘இறந்தவர் உயிரோட திரும்பி வரப் போறதில்லை. ஆனா இந்த வாய்ப்பைத் தவற விட்டுட்டா என்னுடைய அத்தனை நாள் உழைப்பும் வீணாயிடும்’னு கணவர்கிட்ட பேசிப் புரியவெச்சேன். புகுந்த வீட்டாருக்குத் தெரியாம என் தேவைகளைப் பார்த்துக்கிட்டேன். போட்டியில கலந்துக்கிட்டு ஆறாவது இடத்துல ஜெயிச்சேன்...’’ இலக்கைத் தொட்டவர், 45 வயதில் ட்ரெக்கிங், போட்டோகிராபி, டிஜேயிங் என அத்தனைக்கும் ஆசைப்பட்டிருக்கிறார். அனைத்தும் அவருக்குக் கைகூடியுள்ளன.

தியாகம் பண்ணாதீங்க பெண்களே!

‘‘கண்ணாடியைப் பார்க்கவே அசிங்கப்பட்ட நான், இன்னிக்கு ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை என்னைக் கண்ணாடியில பார்த்து ரசிக்கிறேன். ‘உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு’ன்னு சொல்லிக்கிறேன். ‘உங்களுக்கு இந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்த உங்க கணவரைப் பாராட்டணும்’னு நிறைய பேர் சொல்வாங்க. ஓர் ஆண் வாழ்க்கையில எதையாவது சாதிக்கும்போது அதுக்கு காரணமா மனைவியை யாரும் பாராட்டறதில்லை. இது முழுக்க முழுக்க என் உழைப்பு, முயற்சி. ஒவ்வொருமுறை என் கணவர் ஆட்சேபிக்கிற விஷயங்களை அவருக்குப் புரியவெச்சு சம்மதம் வாங்கப் போராடியிருக்கேன். இல்லைன்னா சமையல், வீட்டு வேலைகளிலேயே என் வாழ்க்கை புதைஞ்சுபோயிருக்கும். உங்க வாழ்க்கை உங்க உரிமை. தயவுசெய்து யாருக்காகவும் அதைத் தியாகம் பண்ணாதீங்க...’’ பெண்களுக்கான கிரணின் கோரிக்கைக்குரல் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism