கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

செலிபிரிட்டீஸ் வித் செஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
செலிபிரிட்டீஸ் வித் செஃப்

சமையற்கலை

ம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தில் ஆரம்பித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் வரை தன் பல செலிபிரிட்டிகளின் நாவையும் தன் கைமணத்தால் கட்டிப்போட்டவர் பிரபல சமையற்கலைஞர் குமார் நடராஜன்.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

தென்னிந்திய திருமணங்களில் வழக்கமான கல்யாண சாப்பாடுடன் வடஇந்திய உணவுகளையும் அறிமுகப்படுத்துவது, ‘ஆரஞ்சுப்பழ தோலுக்குள் ஐஸ்க்ரீம்' மாதிரியான புதுப்புது முயற்சிகளை முன்னெடுப்பது எனக் கடந்த 40 வருடங்களாக சமையல் உலகில் சக்ரவர்த்தியாக இருந்து வருகிறார். செலிபிரிட்டிகளுக்குப் பிடித்த உணவுகளைப் பற்றியும் அதன் விசேஷத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள சென்னை தி.நகரில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்...

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

“முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களால் ‘அறுசுவை அரசு’ பட்டம் பெற்ற பிரபல சமையற்கலைஞர் நடராஜனின் மகன்தான் நான். ஆரம்பத்தில் தாசப்பிரகாஷ் ஹோட்டலில் ஐஸ்க்ரீம் செக்‌ஷனில் வேலை செஞ்சேன். பிறகு, அடையாறு கேட் ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன்.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

அங்கு வரும் என் அப்பாவின் நண்பர்கள் பலர், ‘உங்க அப்பா மிகப்பெரிய சமையற்கலைஞரா இருக்கும்போது நீங்க ஏன் இன்னொரு இடத்தில் வேலை பாக்குறீங்க?’ எனக் கேட்க... அவர்களின் கேள்வியில் உள்ள நியாயம் புரிந்தது. ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு அப்பாவுக்கு உதவியாக சமையல் களத்தில் இறங்கினேன்” என்ற முன்னுரைடன், செலிபிரிட்டிகளுடனான தன் சமையல் அனுபவங்களை விவரிக்க ஆரம்பித்தார்...

செலிபிரிட்டீஸ் வித் செஃப்
செலிபிரிட்டீஸ் வித் செஃப்

ரஜினியும் தீபாவளி பட்சண அரோமாவும்!

ரஜினி வீட்டுல வருஷா வருஷம் தீபாவளி பட்சணம் செய்யுறது நாங்கதான். பாஸ்மதி அரிசியும் பாலும் சேர்த்து செஞ்ச பால் பாயசம்னா, ரஜினி விரும்பி சாப் பிடுவார். ‘சுத்தமான நெய்ல பட்சணம் செய்யறப்போ வர்ற அரோமா நுரையீரலுக்கு நல்லது. அதனால வீட்டுக்கே வந்து செய்யுங்க’ன்னு லதா மேடம் சொல்லிடுவாங்க. ஸோ, நாங்க கார் ஷெட்ல அதிரசம் சுடுவோம்... வாசம் வர்ற தூரத்துல சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு தலைவர் புக்ஸ் படிச்சிட்டிருப்பார். நெய் கூடுதலா சூடாகி கொஞ்சம் புகை வந்துட்டாலும் நம் மரியாதைக் குறைஞ்சுப் போயிடும். ரொம்ப கவனமா இருக்கணும். அதேபோல அவர் வீட்டுல இந்த ஃபங்ஷன்னாலும் ‘குலோப் ஜாமூன், கிச்சடி, உருளைக்கிழங்கு போண்டா’ன்னு சவுத் இண்டியன் ரெசிப்பீஸ் நிச்சயமா இருக்கும்.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்
செலிபிரிட்டீஸ் வித் செஃப்

*அமிதாப்பும் புளியோதரையும்!

எனக்கு அமிதாப் பச்சனின் அன்பை சம்பாதிச்சுக் கொடுத்தது புளியோதரைதான். ஒருமுறை சென்னைக்கு வந்திருந்த அமிதாப், ராகவேந்திரா கல்யாண மண்டபத்துல தங்கியிருந்தார். அங்கிருந்து திருப்பதி போற பிளான்ல இருந்தார். அவருக்கு புளியோதரையும் சாம்பாரும் நான் தான் கொண்டு போய்க் கொடுத்தேன். பொதுவா, நார்த் இண்டியன்ஸ் சாப்பாட்டுல புளி அதிகமா சேர்த்துக்க மாட்டாங்க. அதனால, ‘திருப்பதியில பிரசாதமா புளியோதரைதான் கொடுப்பாங்க. இதைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கான்னு சொல்லுங்க'னு அபிதாப் சாரிடம் சொன்னேன். தலையசைத்தபடி சிரிச்சுக்கிட்டே சாப்பிட்டாரு. அடுத்த நாள் திருப்பதிக்கு கிளம்பிப்போனவர் மறுபடியும் சென்னை வந்தப்போவும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்துல தங்கினார். ஆனா, அவருக்கான சாப்பாடு ஸ்டார் ஹோட்டல்ல இருந்து அரேஞ் பண்ணியிருக்காங்க. ஆனா, அமிதாப்போ, ‘புளியோதரை சமைச்சுக் கொடுத்த ஸேம் பர்சன்கிட்டேயே இந்த முறையும் சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டாராம். அவரை மறுபடியும் சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சது. உங்களோட புளியோதரைக்கும் திருப்பதி பிரசாதத்துக்கும் வித்தியாசமே தெரியலை’ன்னு சொன்னார். அவரின் வார்த்தைகளை என்னுடைய லைஃப் டைம் அச்சீவ்மென்ட்டா நினைச் சிட்டிருக்கேன்.

*முகேஷ் அம்பானியும் மசால் தோசையும்!

வெளிநாட்டவரோ வட இந்தியரோ... சென்னைக்கு வந்தால் அவங்க விரும்பிச் சாப்பிடுறது மசால் தோசைதான். ரிலையன்ஸ் பிரசிடென்ட் பாலசுப்ரமணியத்தோட பேரன் பூணூல் விழாவுல கலந்துக்கிறதுக்காக சென்னை வந்திருந்த முகேஷ் அம்பானி மசால் தோசை வேணும்னு விரும்பிக் கேட்டார். ஆனா, அவர் கேட்ட நேரத்துல காலை டிபன் டைம் முடிஞ்சுப் போயிருந்தது. அதுக்காக அம்பானி ஆசைப்பட்டுக் கேட்டதை இல்லைன்னு சொல்லிர முடியுமா? மதிய சாப்பாட் டுக்காக உருளைக் கிழங்குக் கறி வதங்கிட்டு இருந்துச்சு. ஒரு வெங்காயத்தை நறுக்கி, வதக்கி, உருளைக் கிழங்குக் கறியோட கலந்து, தோசைக்கு நடுவுல வெச்சுக் கொடுத்தேன். மனுஷர் ருசிச்சு சாப்பிட்டார்.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

அதற்கடுத்து ஒருமுறை அவர் வீட்டு ஃபங்ஷனுக்கு சமைக்கிறதுக்காக எங்களை மும்பைக்கு அழைச்சிருந்தார் முகேஷ் அம்பானி. தென்னிந்திய உணவுகள் சமைச்சுக் கொடுத்தோம். அப்போதும் மசால் தோசை விரும்பிச் சாப்பிட்டார். முகேஷ் சாருக்கும் நீதா மேடமுக்கும் ரொம்ப திருப்தி. நாங்க வொர்க் முடிஞ்சு ஏர்போர்ட்டுக்கு வந்துட்டோம். செக்யூரிட்டி செக் முடிஞ்சு உள்ளப்போகிற நேரத்துல, கொஞ்சம் நேரம் வெளியிலேயே வெயிட் பண்ணச் சொன்னாங்க. காரணம் தெரியாம நாங்க உட்கார்ந்திருந்தோம். கொஞ்ச நேரத்துல முகேஷ் சார், எங்களுக்கு மரியாதை பண்ற விதமா, வெள்ளி விநாயகர் விக்கிரகமும் தங்கக் காசும் கொடுத்தனுப்பி யிருந்தார். மறக்க முடியாத நிகழ்வு அது.

*ஜெயலலிதாவும் குலோப் ஜாமூனும்!

ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ, ஒரே நேரத்துல 1008 ஜோடிகளுக்கு திருமணம் பண்ணி வெச்சாங்க. அதுக்கு நாங்க தான் சமையல். ஜெயலலிதா மேடம் என்னைக் கூப்பிட்டு, ‘விருந்துல என்ன ஸ்வீட் போடப் போறீங்க’ன்னு கேட்டாங்க. லட்டு போடலாம்னு இருக்கோம் மேடம்னு சொன்னேன். ‘லட்டு வேணாம். குலோப் ஜாமூன் போடுங்க... குலோப் ஜாமூன்ல இருக்கிற பால், நெய், ஜீரா மூணுமே நம்ம உடம்போட சூட்டைத் தணிக்கக் கூடியவை. உடம்போட சூடு தணிஞ்சா வம்ச விருத்திக்கு நல்லது. புதுசா கல்யாணமானவங்களுக்கு லட்டைவிட குலோப் ஜாமூன்தான் நல்லதுன்னு அதற்கான காரணத்தையும் சொன்னாங்க.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

*பதிர்பேனியும் ஐஸ்வர்யா ராயும்!

அம்பானியின் சகோதரி நீனா கோத்தாரியின் மகளுக்கு, சென்னை ஐடிசி சோழாவில்தான் கல்யாணம் நடந்துச்சு. அந்தக் கல்யாணத்தில் டின்னர் நாங்கதான் சமைச்சோம். ஸ்டார் ஹோட்டல்னாலே பஃபே சிஸ்டம் தானே. ஆனா, நாங்க அன்னைக்கு இலை போட்டுப் பரிமாறினோம். அந்தக் கல்யாணத் துக்கு அம்பானி ஃபேமிலி, அமிதாப் பச்சன் ஃபேமிலின்னு பெரிய பெரிய செலிபிரிட்டி கள்லாம் வந்திருந்தாங்க. அப்போ, ஐஸ்வர்யா ராய்க்கு பதிர்பேனியைப் பரிமாறும்போது ‘இது என்னது?’ன்னு கேட்டாங்க. இது உங்க ஊர் மங்களூர் டிஷ்னு சொன்னதும், ரொம்ப ஆசையா எடுத்து சாப்பிட்டாங்க.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

நீனா கோத்தாரியோட பையன் கல்யாணம் மும்பையில நடந்துச்சு. அங்க தென்னிந்திய உணவுகளை நாங்கதான் செஞ்சோம். அந்தக் கல்யாணத்துக்கும் ஐஸ்வர்யா ராய் வந்திருந்தாங்க. அப்போ மறுபடியும் ஐஸ்வர்யா ராய்கிட்ட பேச முடிஞ்சது. ரவா தோசை பரிமாறினேன். ‘பியூட்டிஃபுல் தோசை’ன்னு சொல்லிட்டு மூணு ரவா தோசை சாப்பிட்டவங்ககிட்ட, நான் சென்னை பதிர்பேனி சம்பவத்தை ஞாபகப்படுத்தினேன். ‘யெஸ் ஐ ரிமம்பர்’னு சிரிச்சாங்க.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

*தனுஷும் வத்தக்குழம்பும்!

தனுஷ் ரசனையான சாப்பாட்டுப் பிரியர். மூணு தோசை சாப்பிட்டார்னா ஒவ்வொண் ணுத்துக்கும் ஒவ்வொரு சட்னித் தொட்டுச் சாப்பிடுவார். பதிர்பேனி, பாதாம் மில்க், வத்தக்குழம்பு மூணும் இவரோட ஆல்டைம் ஃபேவரைட் உணவுகள். லதா ரஜினிகாந்த் வீட்டு நவராத்திரி ஃபங்ஷன்லகூட தனுஷ் பதிர்பேனி யைத்தான் ஆசையா சாப்பிடுவார். இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு ஊத்துங்கன்னு கேட்கிற அளவுக்கு வத்தக்குழம்பு ரசிகர்.

செலிபிரிட்டீஸ் வித் செஃப்

*அப்துல் கலாமும் உசிலியும்!

மியூசிக் அகாடமியில் ஒரு தடவை என் கைப்பக்குவத்தைச் சாப்பிட்ட பிறகு, சென்னை வர்றப்போ எல்லாம் என் சமையலை சாப்பிடாம போக மாட்டார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். மதியத்துக்கு என்ன சாப்பிடப் போறீங்கன்னு யாராவது கேட்டா, ‘எல்லாம் அவனுக்குத் தெரியும்’னு என் பேரை சொல்லிடுவார். அவரோட ஆல் டைம் ஃபேவரைட் மிளகுக்குழம்பும் வாழைப்பூ உசிலியும்.

சமைக்கிறது ஒரு தவம் மாதிரி. லாக்டெளன் நாள்கள்ல பல செலிபிரிட்டிகளின் வீடுகளுக்கு அறுசுவை கேட்டரர்ஸ்ல இருந்துதான் சாப்பாடு போச்சு. கொரோனா காலத்துலேயும் நாங்க சமைச்சதை நம்பி சாப்பிடுறாங்கங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்’’ என்கிற குமார் நடராஜனின் வார்த்தைகளில் ஆத்ம திருப்தி நிரம்பி வழிகிறது.