Published:Updated:

ரஜினி, ராஜேந்திர பாலாஜி, கிரண்பேடி... உளறிக்கொட்டும் பிரபலங்கள்..!

ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர்!
ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர்!

கொரோனா பாதிப்பு குறித்து ரஜினிகாந்த், ராஜேந்திர பாலாஜி, கிரண்பேடி என இம்மூவரும் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்துகள் கடும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த ஓர் அலசல் கட்டுரை இது...

கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்டவரின் குரல்வளையை நெறிக்கிறது என்றால், கொரோனா குறித்துப் பரவும் வதந்திகளோ ஒட்டுமொத்த சமூகத்தையுமே குலைநடுங்கவைக்கிறது.

சீனாவின் வுஹான் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்த செய்திகள் வெளியாக ஆரம்பித்த அடுத்த இரண்டொரு நாள்களிலேயே, `கொரோனாவை ஒழிக்க நம்மூர் பச்சிலை மருந்தே போதும்' என்பது போன்ற வாட்ஸப் செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் என்றால் என்ன, அந்தக் கிருமி எப்படிப் பரவுகிறது, அதன் உயிரியல் தன்மை என்ன, அது மனித உடலில் புகுந்து என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், அதன் ஆயுட்காலம் எவ்வளவு... உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை விவரமும் தெளிவாகக் கிடைத்திராத சூழலிலேயே, `மஞ்சள், வேப்பிலை, சாணி, மாட்டு மூத்திரம் என நம் முன்னோர் பயன்படுத்திய கிருமிநாசிகளைக் கொண்டு கொரோனாவை விரட்டியடிக்கலாம்', `கொரோனாவுக்கு நம் பாரம்பர்ய மருத்துவ முறையிலேயே தீர்வு இருக்கிறது' என்றெல்லாம் வகைவகையான தகவல்கள் வரிசைகட்டின.

`ஆலயத்தில் பிரார்த்தனை நடத்திய பாதிரியார் கைது... மதுக்கடை ஊழியர்களுக்கு கொரோனா!' - கேரளா அப்டேட்

எந்த ஆதாரத்தின் அடிப்படையில், இதுபோன்ற செய்திகள் எழுதப்படுகின்றன... என்றெல்லாம் சிந்தித்துப் பழக்கப்படாத நம் மக்களும், வந்த செய்தியை நாலுபேருக்கு ஃபார்வேர்டு செய்து புண்ணியம் தேடினர். இன்னொரு பக்கம், பொது இடங்களில் மாட்டு மூத்திரத்தைக் குடித்துக் காண்பித்து, `விழிப்புணர்வு' ஏற்படுத்திய பழைமைவாதிகளின் வீடியோக்களெல்லாம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட... `ஒரு லிட்டர் மாட்டு மூத்திரத்தின் விலை 500 ரூபாய்' வரையிலுமாக விலையேறி, இந்தியப் பொருளாதாரச் சரிவையே தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கியது.

ஹீலர் பாஸ்கர்
ஹீலர் பாஸ்கர்

இவர்களுக்கிடையே, `இயற்கை மருத்துவர்' என்று கூறிக்கொள்ளும் ஹீலர் பாஸ்கர், `கொரோனா என்பது இலுமினாட்டிகளின் சதி. மக்கள்தொகையைப் பாதியாகக் குறைப்பதற்காக எல்லோரையும் கூண்டோடு கொல்லப்போகிறார்கள்' என்று வேற லெவலில் திகில் கிளப்பினார். விளைவு... மக்களிடையே வதந்தியைப் பரப்பியதாக தமிழகக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். `இன்னும் சில நாள்களில், அடுத்த வீடியோவை வெளியிடுகிறேன்' என்ற ஹீலர் பாஸ்கரின் அறிவிப்பு ஏற்படுத்திய பயத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்திருக்கிறது.

`பொய்யை விடவும் அரைகுறை உண்மை ஆபத்தானது' என்ற வரிக்கு தொடர்ச்சியாக மிகச்சரியான அர்த்தம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த `பண்பாட்டு மீட்டெடுப்பாளர்கள்'. உலகின் எந்த மூலையில் எந்தவொரு பிரச்னை ஏற்பட்டாலும், அது என்ன ஏது என்ற அறிவியல் பார்வையோடு ஆராயாமல், தான் சார்ந்த நம்பிக்கைகளின்பால் மட்டுமே பிரச்னைகளை அணுகுவதும் அதையே ஒட்டுமொத்த சமூகத்துக்கான தீர்வாக முன்வைப்பதும்தான் இதுபோன்ற வதந்திகளின் அடிப்படையாக இருக்கிறது.

மோடி
மோடி

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைத் தற்காத்துக்கொள்ளச் செய்யும் விழிப்புணர்வுப் பரப்புரைகளில், அரசும் மருத்துவத் துறையும் முழுமூச்சாக இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில், பிரச்னையின் தீவிரத்தை உணராத இதுபோன்ற வதந்திகள் சமூகத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. எனவேதான், கொரோனா குறித்து ஊடகம் வழியே வதந்தி பரப்புவோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது அரசு.

இது ஒருபுறம் இருக்க... மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களேகூட இவ்விஷயத்தில் தங்களது சொந்தக் கருத்துகளை பொதுவெளியில் பகிரும்போது ஏற்படுகிற தாக்கங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன.

சமீபத்தில், இந்திய சுகாதாரத்துறை இணை அமைச்சரான அஸ்வினிகுமார், `வெயிலில் 15 நிமிடம் நின்றாலே போதும்; கொரோனா வைரஸை விரட்டியடித்துவிடலாம்' என்று அரியதொரு கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி மருத்துவத் துறையினரையே மயக்கத்தில் ஆழ்த்தினார்.

இவர் இப்படியென்றால், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, விலங்குகள் சுதந்திரமாகவும், மனிதர்கள் சிறையில் இருப்பது போன்றும் படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டு, `இது கொரோனா அல்ல, கர்மா' என்று பஞ்ச் வைத்தார். அசைவ உணவுப் பழக்கத்தை விமர்சிக்கின்ற வகையில் வெளியான இந்தப் பதிவு, அரசியல் ரீதியான எதிர்ப்புகளை சந்திப்பதற்கு முன்பாகவே, எதிர்வினை என்ற பெயரில் கழுவி ஊற்றிக் காயவைத்தனர் நெட்டிசன்கள்.

கிரண்பேடி
கிரண்பேடி

சூப்பர் ஸ்டார் மட்டும் சும்மாவா... `14 மணி நேரம் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தால், கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது நிலைக்குப் போவதைத் தடுத்துவிட முடியும்' என்று விழிப்புணர்வு (?) வீடியோ ஒன்றை ட்விட்டரில் தட்டிவிட, கொரோனாவே தலைசுத்தி கிறுகிறுத்து நின்றது. ஆனால் அது, ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதாக இருக்கிறது என்று சொல்லி, ரஜினிகாந்த்தின் வீடியோ பதிவை உடனடியாக நீக்கியது.

`தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

அடுத்ததாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், `கொரோனாவிலிருந்து காப்பாற்று கிருஷ்ண பரமாத்மா' என்று வழக்கம்போல் சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, கட்சியில் அவர் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட, `ஐயோ பாவம்... ஒற்றை ட்விட், அமைச்சரின் மாவட்டச் செயலாளர் பதவியையே காவு வாங்கிவிட்டதே' என்று கவலையோடு முணுமுணுத்து வருகிறார்கள் கட்சிக்காரர்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஆக, உலகையே உருட்டி எடுத்துவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த, அக்கறையும் ஆர்வமுமாக விஞ்ஞானிகள் ஒருபக்கம் ஆராய்ச்சிகளில் மூழ்கியிருக்க, இன்னொரு பக்கம் மக்களின் பதற்றத்தைத் தணிக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்டவர்களே, பொறுப்பின்றி செயல்பட்டுவருவது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்நிலையில், கொரோனா விஷயத்தில் குழப்பியடித்துவரும் இதுபோன்ற வதந்திகளை இனம்கண்டு பிரித்தறிவது எப்படி, ஏன் பிரபலங்கள் தேவையில்லாத வதந்திகளைப் பரப்புகிறார்கள் என தமிழக பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினரும் மருத்துவருமான எச்.வி.ஹண்டேவிடம் கேட்டோம்...

``நாம் விஞ்ஞான உலகத்தில் இருக்கிறோம். ஒரு ஏரோப்ளேன் பறக்கிறது என்றால், அது விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் பறக்கிறது. மத ரீதியாகவோ நம்பிக்கைகளின் அடிப்படையிலோ ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்து உண்டு. அதை மற்றவரிடத்தில் திணிக்கக்கூடாது.

மத ரீதியாகவோ அல்லது நம்பிக்கை சார்ந்தோ பேசக்கூடியவர்கள் எல்லா நாடுகளிலுமே இருக்கிறார்கள். இன்றைய தேதியில், கொரோனா பாதிப்பு இத்தாலியில்தான் மிக அதிகம். ஆனால், வாடிகனிலுள்ள போப் ஃப்ரான்சிஸ், `கொரோனாவை ஒழிக்க கடவுளிடம் கேட்டிருப்பதாக' செய்திகள் வந்திருக்கின்றன. அதை நாம் குறை சொல்லமுடியாது. அதேநேரம், இத்தாலி அரசு என்ன சொல்கிறது... அங்கேயுள்ள மருத்துவர்கள் என்ன அறிவுரை கூறுகிறார்கள் என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல், நம் நாட்டிலும்கூட கொரோனா குறித்த விரும்பத்தகாத பல்வேறு செய்திகளைத் தலைவர்களும் வேறு சிலரும் பேசிவருகிறார்கள் என்றால், அதுகுறித்து நாம் ஒன்றும் சொல்லமுடியாது. நம்மை ஆளுகின்ற அரசு என்ன சொல்கிறது, மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில், நம் பிரதமரும் மாநில அரசிலுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கொரோனாவை ஒழிக்கும் பணியில் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டுவருகின்றனர். எனவே, கொரோனா அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய - மாநில அரசுகள் சொல்கிற விஷயங்களையும் மருத்துவர்கள் சொல்கிற அறிவுரைகளையும்தான் மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, அறிவுக்குப் பொருந்தாத விஷயங்களை பின்பற்றத் தேவையில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

நான் அரசியலில் பங்கு வகித்துவந்தாலும்கூட, ஒரு மருத்துவராக அறிவியலை அடிப்படையாகக் கொண்டுதான் என்னால் பேசமுடியும். கொரோனாவைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதும், பொதுஇடங்களில் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்ப்பதுமே கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான எளிய வழிமுறை! நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களும்கூட மன தைரியத்துடன் உரிய மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டால், நிச்சயம் நலம் பெற முடியும்!'' என்றார் நம்பிக்கையான குரலில்.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பினால், தமிழகத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாதிருக்கும் சூழலில், 'கொரோனா வைரஸால், தமிழகத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்' என்று 'பொறுப்பான' புள்ளிவிவரத் தகவல் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்து அதிரவைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அடுத்த நொடியே, 'சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வகித்துவருபவரே இதுபோல், பொய்யான செய்திகளைப் பதிவிட்டு, பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பலாமா...' என்று பொதுமக்களும் அ.தி.மு.க தலைவர்களும் பொங்கியெழுந்து, விமர்சன கும்மாங்குத்து குத்த... அவசர அவசரமாக பதிவு நீக்கப்பட்டது, நேற்றைய செய்தி இன்றைய வரலாறு!

அடுத்த கட்டுரைக்கு