Published:Updated:

கட்டுமானத்துறையின் அஸ்திவாரத்தை அசைக்கும் சிமென்ட் விலை!

சிமென்ட் விலை!
பிரீமியம் ஸ்டோரி
News
சிமென்ட் விலை!

தமிழ்நாடு அரசு ரூ.375, ரூ.390 என இரண்டு தரங்களில் ‘வலிமை’ என்ற புதிய சிமென்ட் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டௌனால் நிலைகுலைந்த தொழில்கள் மெல்ல மீண்டு வருகின்றன. ஆனால் கட்டுமானத்துறையை நம்பியிருந்தவர்கள் மீளவில்லை. கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் இன்னொரு பேரிடராக அந்தத் தொழிலை முடக்கிப்போட்டிருக்கிறது. குறிப்பாக, சிமென்ட் விலை. 380 ரூபாய் விற்ற சிமென்ட் மூட்டை திடீரென 500 ரூபாயைத் தாண்டி, தற்போது 430 ரூபாயில் வந்து நிற்கிறது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளில் கட்டுமானப் பணிகள் பெரிய அளவில் நடக்கவில்லை. தற்போது நிலை சீராகி ஓரளவுக்குப் பணிகள் தொடங்கியுள்ள சூழலில், சிமென்ட் விலை உயர்ந்திருக்கிறது. உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விலையை உயர்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் அத்துறையில் உள்ள முன்னோடிகள்.

1955 முதல் 1982 வரை அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்டிருந்தது சிமென்ட். லைசென்ஸ் இருந்தால் மட்டுமே வாங்கவோ விற்கவோ முடியும். சிமென்ட் உற்பத்தி அதிகரிக்கப்பட்ட பிறகு, இந்த லைசன்ஸ் முறையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. 1989-ல் முழுமையாகக் கைவிடப்பட்டது. அதன்பிறகு சிமென்ட் வணிகத்தின் மீதான கட்டுப்பாடு அரசின் கைகளிலிருந்து போய்விட்டது. சிமென்ட் விலையை நிர்ணயிக்க அதிகாரமிக்க அமைப்புகள் ஏதும் இல்லாத நிலையில், சிமென்ட் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு விலையை உயர்த்திக்கொண்டன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஒரு மாதத்துக்கு 16 லட்சம் டன் சிமென்ட் தேவைப்படுகிறது. கோடைக்காலங்களில் இந்தத் தேவை மேலும் அதிகரிக்கும்.சிமென்ட் உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றாவது இடத்திலிருக்கிறது தமிழகம். ஆனாலும் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஒரு மூட்டை 350 முதல் 370 ரூபாய் வரை விற்கும்போது இங்கு 400 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கு சிமென்ட் மூலப்பொருள்களான சுண்ணாம்புக்கல், நிலக்கரி, டீசல் விலையேற்றமும் மின்கட்டண உயர்வுமே காரணம் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள். ஆனால் அகில இந்திய அளவில் சிமென்ட் விலை பெரிய அளவில் உயரவில்லை.

“அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது 10-20 ரூபாய் விலை வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது குறிப்பிட்ட பிராண்ட் சிமென்ட்கள் மூட்டைக்கு 110 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்கப்படுகின்றன. நிலக்கரித் தட்டுப்பாடு, மூலப்பொருள்கள் விலையேற்றம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்னை. ஆனால் விலையேற்றம் தமிழகத்தில் மட்டும்தான். இதுதான் சந்தேகத்தை உருவாக்குகிறது...” என்கிறார் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமபிரபு.

“தமிழ்நாடு அரசு ரூ.375, ரூ.390 என இரண்டு தரங்களில் ‘வலிமை’ என்ற புதிய சிமென்ட் ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ‘அம்மா’ சிமென்ட் ரூ.230-க்கு விற்கப்படும் நிலையில், ‘வலிமை’ சிமென்ட்டின் விலை தனியார் சிமென்ட்களின் சந்தை விலைக்கு நிகராக இருக்கிறது. அரசே இவ்வளவு விலை வைத்து விற்பது தனியார் சிமென்ட் கம்பெனிகள் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். எனவே, அரசு ‘வலிமை’ சிமென்ட்டின் விலையைக் குறைக்கவேண்டும்” என்கிறார் அவர்.

கட்டுமானத்துறையின் அஸ்திவாரத்தை அசைக்கும் சிமென்ட் விலை!

கடந்த மே மாதம் சிமென்ட் விலை உச்சத்தில் இருந்த தருணத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு சிமென்ட் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் விளைவாக மூட்டைக்கு ரூ.40 வரை விலையைக் குறைத்தன நிறுவனங்கள். ஆனால், சில மாதங்களிலேயே இரண்டு மடங்கு விலை ஏறிவிட்டது.

‘தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த டிராய் அமைப்பு இருப்பதுபோல, சிமென்ட் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த ஓர் ஆணையம் அமைக்கவேண்டும்’ என்று கட்டுமானத்துறையினர் நெடுங்காலமாகக் கேட்கிறார்கள். அரசு செவிமடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் சிமென்ட் உற்பத்தித் திறன் 40 மில்லியன் டன். ஆனால் 22.8 மில்லியன் டன் அளவே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியைக் குறைப்பதன்மூலம் தயாரிப்பு நிறுவனங்கள் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள் இத்துறையின் முன்னோடிகள்.

“ஒரு பொருள் டிமாண்ட் ஏற்பட்டால்தான் விலை உயரும். ஒரு பக்கம், லட்சக்கணக்கில் வீடுகளும், அப்பார்ட்மென்டுகளும் கட்டிமுடிக்கப்பட்டு விற்காமல் நிற்கின்றன. இன்னொரு பக்கம் கொரோனா காரணமாகக் கட்டுமானப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. இந்தச் சூழலில் எங்கிருந்து டிமாண்ட் வந்தது” என்று கேள்வி எழுப்பும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் செயலாளர் வி.என். கண்ணன், இதனால் ஏற்பட்டுள்ள நடைமுறைப் பிரச்னை களையும் சுட்டிக் காட்டுகிறார்.

“வழக்கமாக கட்ட டங்களின் பணிகளைத் தொடங்கும்முன் மொத்தமாக சிமென்ட் மூட்டைகளை இறக்கிவிடுவோம். கொரோனா வால் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதால் பெரும் பாலான ஒப்பந்தக் காரர்கள் பிறகு இறக்கிக் கொள்ளலாம் என்று கொஞ்சமாகவே பொருள்களை வாங்கியிருக் கிறார்கள். இப்போது திடீரென விலை ஏறிவிட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கட்டடங்கள் கட்ட ஒரு தொகை பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்படும். இடைப்பட்ட காலங்களில் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்தால், அது ஒப்பந்தத் தொகையை மீறிவிடும். ஒரு கட்டடத்துக்கு 500-1000 மூட்டை சிமென்ட் தேவை என்றால், ஒரு மூட்டை ரூ.100 விலையேறினாலும் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். 10 லட்சத்தில் முடிய வேண்டிய கட்டடத்துக்கு இப்போது 20 லட்சம் ஆகிறது. இதனால் வாடிக்கையாளர் - பில்டர் இடையே பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்கிறது.

தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் அரசு சிமென்ட்தான் அதிகம் விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தனியாரையே நம்பியிருக்கவேண்டியுள்ளது. அரசு மாவட்டத்துக்கு ஒரு குடோனைக் கட்டி அரசு சிமென்ட் விநியோகத்தைத் தொடங்கவேண்டும். பதுக்கலையும் தடுக்கவேண்டும்” என்கிறார் வி.என்.கண்ணன்.

“ஒவ்வொரு ஆண்டும் கட்டுமானப் பொருள்களின் விலை 2 முதல் 3 சதவிகிதம் அதிகரிப்பது இயல்பானது. இப்போது மாதாமாதம் 20 முதல் 30 சதவிகிதம் வரை விலை உயர்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக உடல் உழைப்பை நம்பி இருப்பது கட்டுமானத் தொழில்தான். விலை உயர்வால் இந்தத்துறை ஸ்தம்பித்துவிட்டது. இதைச் சார்ந்து வாழும் கட்டுநர்கள், பொறியாளர்கள், தொழிலாளிகள் வாழ்வாதாரமும் ஸ்தம்பித்துவிட்டது. இப்படியே போனால் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்” என்கிறார், சென்னைக் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம்.

கட்டுமானத்துறையின் அஸ்திவாரத்தை அசைக்கும் சிமென்ட் விலை!

சிமென்ட் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அதனால் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை உயர்த்தினாலோ குறைத்தாலோ அரசு பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேச்சு நடத்திய பிறகே செய்யமுடியும். மீண்டும் அத்தியாவசியப் பொருளாக சிமென்டை அறிவித்தால் மட்டுமே விலையைக் கட்டுக்குள் வைக்கமுடியும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள்.

“சிமென்ட் மட்டுமல்ல... எம்.சாண்ட், ஜல்லி, கம்பி, செங்கல், கிராவல், மணல் எல்லாமே விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானத்துக்கான கூலியாக என்ன தந்தார்களோ அந்த விலையைத்தான் இப்போதும் தருகிறார்கள். எளிய, நடுத்தர மக்கள் வாழ்நாள் கனவாக பெரும்பாடுபட்டு வீடு கட்டுகிறார்கள். கட்டுமானப் பொருள்களின் விலையுயர்வைக் காரணம் காட்டிக் கூடுதலாகப் பணம் கேட்பதால் வேலை பாதியிலேயே நின்றுவிடுகிறது. அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்” என்கிறார் தமிழ்நாடு பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ரமேஷ்.

ஆனால், ‘இந்த விலை உயர்வு எதிர்பாராதது’ என்றே சொல்கிறார்கள் சிமென்ட் ஆலை உரிமையாளர்கள். “டன்னுக்கு 70-80 டாலராக இருந்த நிலக்கரி விலை, திடீரென 250 டாலராக உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாதது” என்கிறார்கள்.

இதுதொடர்பாகப் பேச தமிழகத்தின் முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களின் இயக்குநர்கள், தலைமைச் செயல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். “இதுகுறித்து நாங்கள் எதுவும் பேசமுடியாது” என்று மறுத்துவிட்டார்கள்.

கட்டுமானத்துறையின் அஸ்திவாரத்தை அசைக்கும் சிமென்ட் விலை!

2003 காலகட்டத்திலும் சிமென்ட் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விருப்பம்போல விலையுயர்த்திக்கொண்டே சென்றன. இதுகுறித்துப் புகார்கள் எழுந்த நிலையில் மத்திய அரசின் Competition commission of india இந்த விஷயத்தில் தலையிட்டு சில நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது. விலையும் கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அந்த அமைப்பின் தலையீட்டை எதிர்பார்க்கிறது கட்டுமானத்துறை.

கட்டுமானத்துறை தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பல லட்சம் மக்கள் அத்துறையை நம்பி வாழ்கிறார்கள். அரசு ஒழுங்கு முறை ஆணையத்தை உடனடியாக அமைத்து சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.