Published:Updated:

“அடையாள அட்டையே இல்லை... நாங்கள் முன்களப் பணியாளர்களா?”

மயான ஊழியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மயான ஊழியர்கள்

- வலியோடு கேட்கும் மயான ஊழியர்கள்!

“அடையாள அட்டையே இல்லை... நாங்கள் முன்களப் பணியாளர்களா?”

- வலியோடு கேட்கும் மயான ஊழியர்கள்!

Published:Updated:
மயான ஊழியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மயான ஊழியர்கள்

இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மருத்துவப் பணியாளர்களின் சேவை எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியமானது மயான ஊழியர்களின் சேவை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்களே தொட அஞ்சுகிற சமயத்தில், அந்த உடலுக்குச் சகல மரியாதைகளையும் செய்து நல்லடக்கம் பண்ணுகிறவர்கள் மயான ஊழியர்கள்தான். இவர்களைச் சமீபத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அத்துடன் ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் முன்னுரிமை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால், ரூ.10 லட்சம் நிவாரணம்’ ஆகிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. ‘அரசின் இந்த அறிவிப்பு அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா... அவர்களின் உண்மை நிலை என்ன... எதிர்பார்ப்புகள் என்னென்ன?’ என்பதைத் தெரிந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மயான ஊழியர்களைச் சந்தித்துப் பேசினோம்...

சென்னை ஜாபர்கான்பேட்டையிலுள்ள மயானபூமியில் பணியாற்றும் பாபு, ‘‘நான் 30 வருஷமா இங்கே வேலை செய்யுறேன். எனக்கு மாசச் சம்பளம்னு எதுவும் கிடையாது. இங்க வர்றவங்க அவங்களா பார்த்து ஏதாவது கொடுத்தாத்தான் உண்டு. ஆனா, மயான வாசல்லயே ‘இலவசம்’னு போர்டு வெச்சுருக்கிறதைப் பார்த்து, ‘நாங்க எதுக்குப் பணம் தரணும்?’னு பலரும் சண்டை போடுவாங்க. அவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி, கிட்டத்தட்ட பிச்சை எடுக்கிற மாதிரிதான் பணம் வாங்குவோம். எங்களுக்குன்னு எந்த அங்கீகாரமும் கிடையாது. உழைப்புக்கு வருமானமும் கிடையாது. இதுக்கெல்லாம் தீர்வு ஏற்படுத்தினா, உசிரு இருக்கிறவரை இந்த அரசுக்கு நன்றிக்கடனோட இருப்போம்’’ என்றார் கண்ணீருடன்.

“அடையாள அட்டையே இல்லை... நாங்கள் முன்களப் பணியாளர்களா?”

கோவை, திருச்சி, வேலூர் என்று மற்ற ஊர்களிலுள்ள மயான ஊழியர்களிடம் பேசியபோதும், ‘மாநகராட்சி சார்பில் எங்களுக்குச் சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை’ என்றார்கள். கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது. மதுரையில் தத்தனேரி பகுதி மயானத்தில் பணிபுரியும் நாகராஜ் என்பவர் மட்டுமே சம்பளம் கிடைப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், அவருக்கும் வேறு பல வருத்தங்கள் இருக்கின்றன. ‘‘திருமலை மன்னர் காலத்துலருந்து தலைமுறை தலைமுறையா மயானத்துலதான் வேலை செய்யுறோம். ஆனா, இந்தச் சமூகத்துல எங்களுக்குக் கொஞ்சம்கூட மரியாதை கிடைக்குறதே இல்லை. மயானத்துக்கு வர்றவங்கள்ல சிலர், எங்களை நடத்துற முறை ரொம்பவே வேதனையா இருக்கு. நாங்களும் மனுசங்கதான். எங்களைக் கொண்டாடச் சொல்லலை. குறைந்தபட்சம் அன்பாவாவது பேசுங்கன்னுதான் சொல்றோம்’’ என்று வருத்தப்பட்டார்.

“அடையாள அட்டையே இல்லை... நாங்கள் முன்களப் பணியாளர்களா?”

திருச்சியைச் சேர்ந்த மயானத் தொழிலாளி ஆரோக்கிய மேரிக்கும் அதே வருத்தம்தான். “சமுதாயத்துல ஓரங்கட்டப்பட்டு மயானத்துக்குப் பக்கத்துலயே வாழ்ந்துக்கிட்டிருக்கோம். எங்களை மக்களோடு மக்களா வாழ வழிசெய்யணும். மயானத்துக்கு வர்றவங்க போதையில எங்ககிட்ட தகராறு செய்யுறதும், எங்களை அடிக்குறதும் வழக்கமாகிப்போச்சு. அதைத் தடுத்து, எங்களோட பாதுகாப்புக்கு அரசு துணை நிக்கணும். சடலங்களை எரிக்கும்போது ஒருவித துர்நாற்றம் வீசும். அதை சுவாசிக்கிறதால, சுவாசக்கோளாறு ஏற்பட்டு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுது. இந்தத் தொழில்ல ஈடுபடுறவங்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களும், மருத்துவக் காப்பீடும் வழங்கணும். படிப்பு, வேலைவாய்ப்புகள்ல முன்னுரிமை கொடுத்தா, எங்க பிள்ளைகளும் இந்தச் சமுதாயத்துல நல்ல நிலைமைக்கு வருவாங்க’’ என்றார் நம்பிக்கையாக.

கோவை சொக்கம்புதூர் மயானத்தில் தனியொரு பெண்ணாக, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் வைரமணி, ‘‘பத்து வயசுலருந்து இந்த மயானத்துலதான் வேலை பாத்துக்கிட்டிருக்கேன். எனக்கு மூணு பிள்ளைங்க... எல்லாருமே இங்கேதான் பிறந்தாங்க. என் வாழ்க்கையோட சந்தோஷம், துக்கம் எல்லாமே இங்கேதான் நடந்திருக்கு. கொரோனா சமயத்துல நான்பட்ட கஷ்டம் ஏராளம். முன்பெல்லாம் மாசத்துக்கு நாலு சடலம் வர்றதே பெரிய விஷயம். ஆனா, கொரோனா சமயத்துல தினமும் 10 சடலமாவது வரும். மூச்சுவிடக்கூட நேரம் இருக்காது. கடைசியில எனக்கும் கொரோனா வந்து, 10 நாள் தனியார் மருத்துவமனையில இருந்தேன். என் அம்மா காலத்துலருந்து இங்கே வேலை செய்யுறோம். ஆனா, இதுவரைக்கும் எந்த அடையாள அட்டையும் எனக்குக் கிடையாது. பின்ன எப்படி அரசு அறிவிக்கிற நிவாரணங்கள் எங்களுக்குக் கிடைக்கும்?’’ என்றார். அவரின் வார்த்தைகளில் அத்தனை வலி.

“அடையாள அட்டையே இல்லை... நாங்கள் முன்களப் பணியாளர்களா?”

நெல்லை மாநகராட்சி மின்தகன மையத்தில் பணியாற்றும் கார்த்திக், தங்கராஜ், குமார், சுந்தர் ஆகியோரிடம் பேசியபோது, ‘‘எங்கள்ல சிலர் வெளியூர்லருந்து வந்து வேலை செய்யுறோம். எங்களுக்குப் பேருந்துப் பயணம் இலவசம்னு அறிவிச்சா உதவியா இருக்கும். நாங்க தற்காலிகப் பணியாளர்களாத்தான் இருக்கோம். நிரந்தரப் பணியாளர்களாக்க அரசு நடவடிக்கை எடுக்கணும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எரிவாயு தகன மையத்தில், உடல்களை தகனம் செய்யும் பணியில் மங்கலட்சுமி என்ற 55 வயது பெண் உட்பட ஏழு பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். ‘‘நாங்க ஏற்கெனவே தடுப்பூசி போட்டுட்டோம். இப்போ, தடுப்பூசி போடுறதுல முன்னுரிமை கொடுத்து என்ன பயன்? பல ஆண்டுகளா இந்தத் தொழிலைச் செய்துட்டுவர்றோம். ஆனா, நாங்க மயான ஊழியர்கள்தான்கிறதுக்கு மாநகராட்சியிலிருந்து இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கூட தரலை. அப்படியிருக்கும்போது, அரசு அறிவிக்கிற நலத்திட்டங்கள் எப்படி எங்களை வந்து சேரும்?’’ என்றார்கள் குமுறலாக.

“அடையாள அட்டையே இல்லை... நாங்கள் முன்களப் பணியாளர்களா?”

ஆண்டாண்டுக்காலமாக மயானத்தில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு அடையாள அட்டைகூட வழங்கப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். அடையாள அட்டையோ, மாநகராட்சியின் அங்கீகாரச் சான்றிதழோகூட இல்லாமால், அவர்கள் எப்படி நலத்திட்டங்களையோ, நிவாரணத்தையோ பெற முடியும்? சடலம் எரிந்தால் மட்டுமே அவர்களின் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலை மாற வேண்டும். முன்களப் பணியாளர்கள் என்ற அரசின் அறிவிப்பு மட்டும் போதாது, நடைமுறையில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism