Published:Updated:

தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் இல்லையா?

- குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்... தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா?

பிரீமியம் ஸ்டோரி

நவம்பர் 6-ம் தேதி குஜராத் மாநிலக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது பாகிஸ்தான் கடற்படை. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையாக, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரியை 8-ம் தேதி நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல விஷயம்தான்... அதே நேரத்தில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படும்போது இப்படி எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்க மறுப்பது ஏன்?” என்கிற விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.

ஸ்ரீதர் சாம்ரே
ஸ்ரீதர் சாம்ரே

கடந்த அக்டோபர் 26-ம் தேதி குஜராத்தின் ஓக்ஹா துறைமுகத்திலிருந்து குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். `ஜல் பாரி’ என்ற பெயர்கொண்ட படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள்மீது, பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்புப் படையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 32 வயதுடைய தர் சாம்ரே என்ற மீனவர் உயிரிழந்தார். குண்டு பாய்ந்து மற்றொருவர் காயமடைந்தார். கடந்த 2020, ஏப்ரல் மாதமும் இதே போன்று குஜராத்தை ஒட்டியுள்ள அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகள்மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார். ``பாகிஸ்தான் கடற்படை, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது’’ என்று இந்திய அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கடற்படையோ, ``எங்கள் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்துவிட்டனர். அதனால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினோம்’’ என்கிறது.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பாகிஸ்தான் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், ``இந்த விவகாரத்தைத் தீவிரமாக கவனித்துவருகிறோம். பாகிஸ்தான் தூதரகம் வழியாக இந்தப் பிரச்னை எடுத்துச் செல்லப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்திருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். சொன்னதுபோலவே காயமடைந்த மீனவர் கொடுத்த புகாரின்பேரில், குஜராத் போர்பந்தர் மாவட்டத்தின் நவி பந்தர் காவல்துறை பாகிஸ்தான் கடற்படையின் 10 வீரர்கள்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இதையடுத்துத்தான், “குஜராத் கடல் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பதை வரவேற்கிறோம். அதேசமயம், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது ஏன் இது போன்ற சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதில்லை?” என்கிற விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.

தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் இல்லையா?

பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறதுதான்... சமீபத்தில் நடந்த சில சம்பவங்களை மட்டும் பார்ப்போம்... கடந்த அக்டோபர் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பலால் மோதி படகைச் சேதப்படுத்தினர். முற்றிலுமாக விசைப்படகு சேதமடைந்ததால், மீனவர்கள் அனைவரும் கடலில் மூழ்கித் தத்தளித்தனர். இதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார். கடந்த ஜனவரி 18-ம் தேதி, இதே கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்ற மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதில் நான்கு மீனவர்கள் உயிரிழந்தனர். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எதிர்த்து மீனவச் சங்கங்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை.

இதையடுத்தே “தமிழக மீனவர்களெல்லாம் இந்திய மீனவர்கள் இல்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் தமிழக விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ். அவர் நம்மிடம், ``தமிழ்நாட்டைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைத் துப்பாக்கிச்சூடு நடத்தியே கொன்றிருக்கிறது இலங்கை கடற்படை. ஈழப்போர் முடிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்துவது நின்றுவிட்டாலும், ரோந்துக் கப்பல்களால் மோதி மீனவர்களைக் கொன்றுவருகிறது இலங்கை. அதுமட்டுமல்லாமல் தமிழக மீனவர்களைச் சிறைபிடித்து சித்ரவதை செய்வது, மீன்களையும் உடைமைகளையும் பறித்துக்கொள்வது, படகுகளைப் பறித்துச் செல்வது எனத் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை தருகிறது இலங்கை கடற்படை. தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படும்போது செவிடன் காதில் சங்கு ஊதுவதைப்போல அமைதியாக இருக்கும் மத்திய அரசு, குஜராத்தில் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் துடித்துப்போய் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

என்.ஜே.போஸ்
என்.ஜே.போஸ்

குஜராத் மீனவர்கள்மீது அக்கறைகாட்டுவதை நாங்கள் குறை சொல்லவில்லை. அவர்களும் எங்களைப்போல மனிதர்கள்தான். அதேசமயம், தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது ஏன் என்றுதான் கேட்கிறோம். நாங்களும் இந்திய மீனவர்கள்தானே... நாங்களும் அந்நியச் செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டிக் கொடுக்கிறோம்தானே... அப்படியிருக்கையில், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கும்போதோ, உடைமைகளைச் சூறையாடும்போதோ மத்திய அரசு ஏன் கண்டனம்கூட தெரிவிப்பதில்லை? கடந்த எட்டு ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அதற்கு முன்பாக இருந்த காங்கிரஸ் அரசுகூட தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது கண்டனம் தெரிவித்திருக்கிறது. இலங்கை கடற்படை கப்பலைச் சிறைப்பிடித்து, இந்திய மீனவர்களை மீட்டிருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறது.

இன்னொரு பக்கம் கச்சத்தீவு ஒப்பந்தம், மீனவர்கள் எங்கு சென்று வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம் என்கிறது. ஆனால், அந்த ஒப்பந்தம் பற்றி மத்திய அரசு வாய் திறக்க மறுக்கிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கோடியக்கரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத அளவுக்கு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில், இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 200-க்கும் மேற்பட்ட படகுகளை மீட்பதற்கு மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், படகுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டன. படகுகளை இழந்த மீனவர்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கின்றனர். மத்திய அரசாங்கம், தமிழக மீனவர்களை ஒழித்துவிடலாம் என்கிற முடிவிலிருக்கிறதா எனத் தெரியவில்லை’’ என்றவரிடம், “மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லையா?” என்று கேட்டோம்... ``மாநில அரசு, உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் மட்டுமே கொடுக்கிறது. இலங்கை அரசைக் கண்டிக்கவோ, தூதரை அழைத்துப் பேசவோ மாநில அரசுக்கு உரிமையில்லை. மீனவர் பிரச்னையில் மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும்’’ என்றார் ஆதங்கத்துடன்.

தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் இல்லையா?

“தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?” என்று தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். ``குஜராத் மீனவர் கொல்லப்பட்டதற்கு என்ன செய்ததோ, அதையேதான் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் செய்தது மத்திய அரசு. குஜராத் விவகாரத்தில் தூதரை அழைத்துத்தான் கண்டனம் பதிவுசெய்திருக்கிறது மத்திய அரசு. அதே தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரே இலங்கை அரசிடம் பேசினார். உடனடியாக மீனவர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு. 2004-2014 காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படி ஏதாவது சம்பவங்கள் பா.ஜ.க ஆட்சியில் நடந்திருக்கின்றனவா... இல்லையே! எனவே, மீனவர்கள் விஷயத்தில் பா.ஜ.க அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பதே தவறான குற்றச்சாட்டு’’ என்று முடித்துக்கொண்டார்.

சம்பிரதாயமாகப் பேசுவது என்பது வேறு... சட்டரீதியான நடவடிக்கை என்பது வேறு. தமிழக மீனவர்கள் கேட்பது சட்டரீதியான நடவடிக்கையைத்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு