Published:Updated:

`என்.ஐ.ஏ மூலம் எங்களை அச்சுறுத்த முயற்சி’ - எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

செய்தியாளர் சந்திப்பு

தமிழக காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல், மாநில அதிகாரத்தை மீறி, துணை ராணுவப் படைகளைக் கொண்டு வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்படுவதாக எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் புகார்.

`என்.ஐ.ஏ மூலம் எங்களை அச்சுறுத்த முயற்சி’ - எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

தமிழக காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல், மாநில அதிகாரத்தை மீறி, துணை ராணுவப் படைகளைக் கொண்டு வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்படுவதாக எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் புகார்.

Published:Updated:
செய்தியாளர் சந்திப்பு

நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அதில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் மூலம் மத்திய அரசு சோதனை என்ற பெயரில் பொய்யான தகவலைப் பரப்பி தங்களின் செயல்பாடுகளை முடக்கும் முயற்சி நடப்பதாக எஸ்.டி.பி.ஐ.கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்
எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், ``தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளை முடக்கும் முயற்சி நடக்கிறது. என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, ஜனநாயக சக்திகளின் குரலை முடக்க முயற்சி செய்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம் வீட்டுக்குள் பெண் காவலர்கள் இல்லாமல் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படை காவலர்களுடன் நுழைந்த ஐ.என்.ஏ அதிகாரிகள், தாங்களே கொண்டு சென்ற பணப்பையுடன் வெளியே வந்திருக்கிறார்கள்.

சோதனை நடக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு
சோதனை நடக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு

வீட்டிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக கையெழுத்துப் போடச் சொல்லி நஜ்மா பேகத்தை மிரட்டியுள்ளனர். அவர் மறுத்ததால், பசியால் அழுத எட்டு மாத கைக்குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அராஜகத்துடன் நடந்துள்ளனர். அதை எதிர்த்த அவரின் கணவரை கைதுசெய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

திட்டமிட்ட சதியுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகளைத் துன்புறுத்திய இந்த அராஜக போக்கு தொடர்பாக மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம் கணவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லாவையும் விடுதலை செய்ய வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், என்.ஐ.ஏ செயல்பாடுகள் இருக்கின்றன.
நெல்லை முபாரக், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்

ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், என்.ஐ.ஏ செயல்பாடுகள் இருக்கின்றன. அதே போல், இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்களையும் குறிவைத்து, என்.ஐ.ஏ. சோதனை நடத்தியிருக்கிறது.

குண்டுவெடிப்பு, கலவரம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளின் நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாத என்.ஐ.ஏ அமைப்பு, ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புகளுக்கு இது போன்ற நெருக்கடிகளைக் கொடுக்கிறது. இதை ஜனநாயக அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் என்.ஐ.ஏ நடத்தும் சோதனைகளின் போது, இங்குள்ள காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை. இது மாநில அரசின் அதிகாரத்தை மீறும் செயல். மாநில அரசை அச்சுறுத்தும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு இந்த அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகிறது.குறிப்பாக பா.ஜ.க ஆளாத மாநிலங்களைக் குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன.

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில், பா.ஜ.க அரசால் என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறன. அவர்களின் நோக்கம் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகளையும், தலைவர்களையும் அச்சுறுத்துவது தான். ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சியை இத்தகைய அடக்குமுறைகளால் ஒடுக்க முடியாது” என்றார்.

நெல்லை முபாரக்
நெல்லை முபாரக்

செய்தியாளர் சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.எஸ்.கனி, ஹயாத் முகமது, மாவட்டச் செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.