Published:Updated:

பொருளாதாரம் - காத்திருக்கும் சவால்கள் - “மீண்டும் ஓர் ஊரடங்கு வேண்டாம்!”

ஜோதி சிவஞானம், பொருளாதாரப் பேராசிரியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

தற்போது தமிழக அரசுக்கு ரூ.5.7 லட்சம் கோடி கடன்சுமை இருக்கிறது. இது பட்ஜெட்டுக்கு உள்ளே வாங்கியிருக்கும் கடன். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தலையில் இருக்கும் கடன்களையும் சேர்த்தால், தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் கோடி. இவ்வளவு கடன்சுமை இருக்கும் நிலையில், புதிதாக ரூ.84,686 கோடி கடன் வாங்கப்போவதாக இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருந்தது. கடனைத் திருப்பிச் செலுத்துவது, கடனுக்கான வட்டியைக் கட்டுவது போன்ற சிரமங்கள் தமிழக அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

ஜோதி சிவஞானம், பொருளாதாரப் பேராசிரியர்
ஜோதி சிவஞானம், பொருளாதாரப் பேராசிரியர்

தமிழகத்தில் புதிதாக அமையவிருக்கும் அரசுக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றில், பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்கெனவே நிறைய பொருளாதார இழப்புகள். அது மீண்டும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் சூழ்ந்திருக்கும் நிலையில் புதிய அரசு பதவியேற்கிறது. அதனால், முதல் நாளிலிருந்தே அவர்களுக்குச் சவால் ஆரம்பிக்கிறது.

கடுமையான நிதிச் சிக்கலில் இருக்கும்போது, பொருளாதாரரீதியாக எப்படியெல்லாம் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை புதிய அரசு ஆலோசிக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது இரண்டு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்தான். புதிய அரசு உடனடியாகச் சமர்ப்பிக்கும் முழுமையான பட்ஜெட்டில் பொருளாதார மீட்சிக்கான திட்டங்களைச் சேர்க்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளையும், வேலை இழப்புகளையும் சரிசெய்யும் வகையிலான திட்டங்களைப் புதிய பட்ஜெட்டில் சொல்ல வேண்டும்.

மேலும், கொரோனாவைச் சமாளிப்பதற்கும் தெளிவான திட்டத்தை அறிவிக்க வேண்டும். அனைவருக்குமான தடுப்பூசி, சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் வசதி, உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அந்தத் திட்டம் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கு காரணமாக, ஏழைகளும் நடுத்தர மக்களும், முறைசாரா தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கியத் துறைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றன. மீண்டும் ஓர் ஊரடங்கை அறிவிக்காமல், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

மிக முக்கியமாக புதிய அரசு செய்ய வேண்டிய விஷயம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைப் போட வேண்டும். அதற்கும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுவிட்டால் உயிரிழப்புகளைத் தடுக்கலாம், ஊரடங்குக்கு அவசியமில்லை, பொருளாதாரம் கீழே போவதைத் தவிர்க்கலாம். குறிப்பாக, அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

பொருளாதாரம் - காத்திருக்கும் சவால்கள்  - “மீண்டும் ஓர் ஊரடங்கு வேண்டாம்!”

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது. அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வளர்ச்சி குன்றியிருக்கிறது. அதனால், வருவாய் குறைந்திருக்கிறது. கடனும் உயர்ந்திருக்கிறது. வளர்ச்சியை அதிகப்படுத்தினால் வரியை உயர்த்தாமலேயே வருவாயை அதிகரிக்கச் செய்யலாம். கடனையும் குறைக்கலாம்.

‘அடுத்த பத்தாண்டுகளில் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியை எட்டுவோம்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கான உரிய திட்டமிடல், ஊரடங்கு இல்லாமல் கொரோனாவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தில் தமிழகம் முன்னேறிச் செல்ல முடியும்.

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் பெருமளவு இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டும். அது கடுமையாகக் குறைந்துவிட்டது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகு, தமிழக அரசின் சொந்த வரி வருவாயும் குறைகிறது. மத்திய அரசிடமிருந்து நமது பங்காக வர வேண்டிய வரி வருவாயும் குறைகிறது.

பொருளாதாரம் - காத்திருக்கும் சவால்கள்  - “மீண்டும் ஓர் ஊரடங்கு வேண்டாம்!”

ஜி.எஸ்.டி பாக்கி, நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்கான நிதி கமிஷன் நிலுவைத் தொகை ஆகியவற்றைச் சேர்த்து மத்திய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.19,591.63 கோடி (2021 ஜனவரி நிலவரப்படி). இதில், மார்ச் மாத இறுதியில் ரூ.3,233 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது. அதைப் புதிய அரசு போராடி வாங்கினால்தான், தமிழக அரசின் நிதி நிலைமை மேம்படும். மாநிலத்தின் வரி வருவாயில் பாதி மதுபானம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களால்தான் கிடைக்கிறது. மீதி ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கிறது. ஊரடங்கை அமல்படுத்தினால், மதுபானம் மற்றும் பெட்ரோல் மூலம் கிடைக்கும் வருவாய் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.

ஜி.எஸ்.டி இழப்பீடு தருவதாக மத்திய அரசு உறுதியளித்தது. அதனால்தான், ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டு தமிழக அரசு கையெழுத்திட்டது. ஆனால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. அந்த இழப்பீட்டை தமிழக அரசு போராடி வாங்க வேண்டும். அதை வாங்கினாலே ஓரளவுக்கு நிதி நிலைமையைச் சமாளித்துவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு