அலசல்
Published:Updated:

கல்வி - காத்திருக்கும் சவால்கள்! - தமிழகத்துக்குத் தேவை பிரத்யேக கல்விக் கொள்கை!

காத்திருக்கும் சவால்கள்! - கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
காத்திருக்கும் சவால்கள்! - கல்வி

பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு

தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. எப்போது திறக்கப்படும் என்று யாருக்குமே தெரியாது. அதேசமயம், தற்போது நடைமுறையிலிருக்கும் இணையவழி வகுப்புகள் சமமற்ற அணுகுமுறையாகவே தோன்றுகிறது. அனைத்து மாணவர்களிடமும் இணையவழி வகுப்புக்குத் தேவையான உபகரணங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக, கொரோனா பிரச்னையால் உணவுக்கே வழியில்லாமல் தவிக்கும் கிராமப்புற மாணவர்களிடம் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பது அபத்தம். மேற்கண்ட பிரச்னைக்கு மாற்றாக அந்தந்தப் பகுதியிலிருக்கும் ஆசிரியர்கள், மைக்ரோ அளவில் அங்கிருக்கும் மாணவர்களைத் திறந்தவெளி மற்றும் சமுதாயக் கூடங்களில், சமூக இடைவெளியுடன் அமரச் செய்து நாளொன்றுக்கு ஒரு பாடம் வீதம் நடத்தலாம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

கொரோனா பேரிடர் காலத்திலும் பேருந்துக் கட்டணங்கள் உட்பட அனைத்துக் கட்டணங்களையும் தனியார் பள்ளிகள் வசூலித்துவிட்டன. இது தொடர்பான புகார்களை விசாரிக்க அரசுத் தரப்பில் தனி நிர்வாகம் அமைக்க வேண்டும். பெறப்படும் புகார்களுக்குப் பதிவு எண் ஒதுக்கி, அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்தாரருக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட பிரச்னையைவிட புதிய அரசு எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய சவாலே தேசிய கல்விக் கொள்கைதான். இதை, 2021-22 கல்வியாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சமூகநீதிக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரான இந்தக் கொள்கையை புதிதாகப் பொறுப்பேற்கும் தமிழக அரசு நிராகரித்து, நம் மாநிலத்துக்கென ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். அதற்காக மாநிலக் கல்வி ஆணையத்தை உருவாக்கி, அதன் பரிந்துரையில் மக்களின் தேவை, ஏற்கெனவே இருக்கும் கல்விக் கட்டமைப்பு, மேலும் தேவைப்படும் வசதிகள் என்னென்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதற்குத் தகுந்தாற்போல அந்தக் கொள்கையை வடிவமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் சமூகநீதி அடிப்படையில் கல்வியை மேலும் பரவலாக்கி தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழும்.

கடந்த ஆண்டுகளில் எந்த நிலையிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஒரு பொருட்டாகவே அரசு மதிக்கவில்லை. கல்வி சார்ந்து அமைக்கப்படும் குழுக்களில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. அரசுப் பள்ளிகளில் போதிய அளவு ஆசிரியர்களையும், அலுவலக உதவியாளர்களையும் நியமிக்கவில்லை. புதிதாக அமையும் அரசு, பள்ளி சார்ந்து இருக்கும் பிரச்னைகளை ஆசிரியர், மாணவர், பெற்றோர் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு ஜனநாயகரீதியில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கையை வெளியிட்டு, அவற்றில் ஒன்றுகூட மூடப்படாது என புதிய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மாணவர்களுக்கான அரசு விடுதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அவற்றைப் பராமரிக்கவும், உணவு செலவுக்காகவும் என்றைக்கோ நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் இப்போதும் தொடர்கிறது. நூலகம், இணைய வசதி, விளையாட்டு உபகரணங்களுடன் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த விடுதிகளை மேம்படுத்த வேண்டும். மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தி, அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு விளையாட்டுடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளச் செய்யலாம். இது ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்கும்.

கல்வி - காத்திருக்கும் சவால்கள்! - தமிழகத்துக்குத் தேவை பிரத்யேக கல்விக் கொள்கை!

கேந்திர வித்யாலயா பள்ளிகள் அனைத்திலும் கற்றல் முறைகளும் வாய்ப்புகளும் சமமாக இருக்கின்றன. அதேபோல அரசுப் பள்ளிகளிலும் கற்றல் முறை மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்தி அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய புவியியல் எல்லையை வரையறுத்து அருகமை பள்ளிகளாக அடையாளப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்கிற நெருக்கடி பெற்றோருக்கு ஏற்படாது.

தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் குழுவே, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் எத்தனை ஆசிரியர்கள் அந்தந்தப் பள்ளிகளில் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் அந்தக் குழுவே கண்காணிக்க வேண்டும். அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி போதவில்லை என்று தோன்றினால், வரியாக மக்களிடம் வசூலித்துக்கொள்ளலாம். ஆனால், கல்வியை இலவசமாக அரசு வழங்கும் என அறிவிக்க வேண்டும். ஓர் அரசின் பொருளாதாரம் மேம்பட மேம்பட, கல்வியை மக்களின் உரிமையாக, இலவசமாக வழங்க வேண்டும் என்றுதான் நமது அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது.

இவற்றையெல்லாம் செயல்படுத்த தீர்க்கமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். அதுதான் மாநிலத்தின் கல்வி உரிமையைக் காக்கும்,