Published:Updated:

`ரூ.128 கோடிக்கு கரன்ட் பில்' - முதியவருக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!

ராம் பிரசாத்

''ஒரு நகரத்துக்கான மின்சாரக் கட்டணத்தை என்னை செலுத்தச் சொன்னால், என்னால் எப்படி முடியும்'' என்று குமுறுகிறார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷமிம் என்ற முதியவர்.

ஷமிம்
ஷமிம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷமிம். இவர், தனது மனைவியுடன் ஹப்பூர் சாம்ரி கிராமத்தில் வசித்துவருகிறார். இந்த மாதம் வந்த மின்கட்டணம், இவரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. 2 கிலோவாட் மின் இணைப்புக்கு ரூ. 128, 45, 95,444 தொகை மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என எண்ணிய ஷமிம், இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். ஆனால், மின்வாரிய அதிகாரிகள் கூறியது ஷமிமை அதிர்ச்சியடையவைத்துள்ளது. அந்தத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் கட்டண ரசீது
மின் கட்டண ரசீது

மின்சாரக் கட்டணத்தை செலுத்தாததால், அவரது வீட்டுக்கு வழங்கியிருந்த மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷமிம், “ எங்களது வேண்டுகோளை செவிகொடுத்து கேட்க யாரும் இல்லை. அவ்வளவு பெரிய தொகையை என்னால் எப்படி செலுத்த முடியும். நான் இதுதொடர்பாக புகார் அளிக்கச் சென்ற போது, மின் கட்டணத்தைச் செலுத்தினால்தான் மின்சாரம் வழங்குவோம் எனக் கூறி, மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர்.

ஹப்பூர் நகரத்துக்கான மொத்த மின் கட்டணத்தையும் நான் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் என்னால் இந்தத் தொகையை செலுத்த முடியாது. எனக் கூறியுள்ளார்.

ஷமிம்
ஷமிம்

இதுதொடர்பாக துணை மின் பொறியாளர் ராம் சரண் கூறுகையில், இது தொழில்நுட்பப் பிழையாக இருக்க வேண்டும். அவர்கள் மின் கட்டண ரசீதைக் கொடுத்தால், கணினியில் உள்ள தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்து, புதிய ரசீதை வழங்குவோம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தொழில்நுட்பத் தவறுகள் நடப்பது இயல்புதான் என்றார்.