
கொரோனா பரவலின் இரண்டாவது அலை சமீப நாள்களாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால், பகுதி நேர லாக்டெளன் வரும் ஞாயிறு முதல் அமல்படுத்தப்படவிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
2020-ம் ஆண்டு இதே மார்ச் மாதம்தான் கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கியது. சுமார் ஏழு மாதங்கள் தொடர் ஊரடங்குக்குப் பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் குறையத் தொடங்கி, நிலைமை சீரடையத் தொடங்கியிருக்கிறது. சற்று ஆறுதலாகப் பெருமூச்சுவிடுவதற்குள், கொரோனாவின் உருமாறிய வைரஸின் இரண்டாவது அலை வீசத் தொடங்கிவிட்டது. இதுவரை நாடு முழுவதும் 55,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிகப்பட்டுவிட்டனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டைப்போலவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்பது கவலைக்குரிய தகவல்.
இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருப்பதால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் எல்லோரும், பிற மாவட்டங்களில்தான் பிரசாரம் செய்துவருகிறார்கள். சென்னையில் கடைசிக் கட்டத்தில்தான் பிரசாரத்துக்கு வருவார்கள்.

இந்த வேளையில் சென்னையில் கொரோனா தீவிரமாகப் பரவிவருவதால், பகுதி நேரமாகவாவது லாக்டெளன் அமல்படுத்தியாக வேண்டும் என சுகாதாரத்துறை பரிந்துரைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இறுதிக்கட்ட பிரசாரம் இருப்பதால் தேர்தல் முடிந்து பார்த்துக்கொள்ளலாம் என ஆளும் தரப்பில் சொல்லப்பட்டபோதும், சுகாதாரத்துறை லாக்டெளன் அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறதாம்.
பகுதி நேரமாக, அதாவது மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை என 12 மணி நேர லாக்டெளனை, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையில் மட்டும் அமல்படுத்தவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது போகப் போக, தேர்தல் முடிந்து முழு லாக்டெளனாகவும் மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.