Published:Updated:

எப்போதுதான் செயல்பாட்டுக்கு வரும் ஹெச்.பி.எல்?

ஹெச்.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.பி.எல்

அதிகரிக்கும் தடுப்பூசி தேவை... முதல்வர் தலையிட்டும் பலனில்லை...

எப்போதுதான் செயல்பாட்டுக்கு வரும் ஹெச்.பி.எல்?

அதிகரிக்கும் தடுப்பூசி தேவை... முதல்வர் தலையிட்டும் பலனில்லை...

Published:Updated:
ஹெச்.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.பி.எல்

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை, குத்தகை அடிப்படையில் தமிழக அரசிடம் அளிக்கும்படி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தி மூன்று மாதங்கள் ஆகியும், கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது கோரிக்கை. மக்கள் வரிப்பணத்திலிருந்து 594 கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கிய இந்த நிறுவனத்தை, மத்திய அரசு ஏன் இப்படி முடக்கிவைத்திருக்கிறது என்று பொருமுகிறார்கள் மருத்துவத்துறைச் செயற்பாட்டாளர்கள்.

செங்கல்பட்டு அருகே திருமனி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனம் (ஹெச்.பி.எல்) என்கிற ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்த நிறுவனத்தில் வெறிநாய்க்கடி தடுப்பூசி, மஞ்சள் காமாலை நோயைத் தடுக்கும் ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசிகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டோஸ் தேவை இருக்கிறது. அதிலும், தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதால், அந்தத் தடுப்பூசிக்கான தேவையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அதிக அளவு தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் 52 லட்சம் டோஸ்களும், ஜூலை 55 லட்சம் டோஸ்களும், ஆகஸ்ட் 57 லட்சம் டோஸ்களும், செப்டம்பர் ஒரு கோடியே 40 லட்சம் டோஸ்களும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டன. தமிழக அரசும் சிறப்பு முகாம்களை நடத்தி, இலக்கு நிர்ணயித்து தடுப்பூசிகளைச் செலுத்திவருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் மட்டும் தமிழ்நாட்டில் 1,38,60,328 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அக்டோபர் 4-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 3,70,76,731 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில், இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,20,66,795 பேர். இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள், பூஸ்டர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது தடுப்பூசியின் தேவை மேலும் அதிகரிக்கும். இப்படியான நிலையில்தான் ஆண்டுக்கு 58 கோடியே 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட செங்கல்பட்டு ஹெச்.பி.எல் நிறுவனத்தை, விரிவாக்கப் பணிகளுக்காக 300 கோடி தேவைப்படுகிறது என்று காரணம் சொல்லி மத்திய அரசு முடக்கிவைத்திருக்கிறது.

எப்போதுதான் செயல்பாட்டுக்கு வரும் ஹெச்.பி.எல்?

மேற்கண்ட தடுப்பூசி தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் தமிழக முதல்வர் ஸ்டாலின், செங்கல்பட்டு ஹெச்.பி.எல் நிறுவனத்தை தமிழக அரசுக்குக் குத்தகைக்குக் கொடுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து மே 25-ம் தேதி அந்த நிறுவனத்துக்கு நேரில் சென்று ஆய்வும் நடத்தினார். மே 27-ம் தேதி இது தொடர்பான கடிதத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் முதல்வர் டெல்லிக்குக் கொடுத்தனுப்பினார். ஜூன் 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த முதல்வர் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இவ்வளவுக்கும் ஹெச்.பி.எல் நிறுவனத்தை நடத்த விரும்பாத மத்திய அரசு, அதை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுக்க நினைக்கிறது. அதற்காக இரண்டு முறை டெண்டர் வெளியிட்டும், டெண்டர் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இப்படியான சூழலிலும் தமிழக அரசுக்கு இதுவரை மத்திய அரசு பதில் சொல்லாததால் மருத்துவச் செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மத்திய அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

எப்போதுதான் செயல்பாட்டுக்கு வரும் ஹெச்.பி.எல்?

மத்திய அரசுடன் இந்த விவகாரத்தைக் கையாளும் தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டால், “ஹெச்.பி.எல் நிறுவனத்தை ‘பாரத் பயோடெக்’ என்கிற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்விட பேச்சுவார்த்தை நடப்பதாக ஆரம்பத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. இடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாற்றப்பட்டு, மன்சுக் மாண்டவியா வந்த பிறகு, கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் மீண்டும் பேசியபோது தமிழக அரசின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லியிருப்பதுடன், இது தொடர்பான பழைய கடிதங்களை அமைச்சர் பார்வைக்கும், பிரதமர் பார்வைக்கும் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆனால், இதுவரை அதிகாரபூர்வமான பதில் எதுவும் வரவில்லை” என்றார்கள்.

ஹெச்.பி.எல் நிறுவனத்திலிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்களைப் பயன்படுத்தாமலிருந்தால், வீணாகிவிடும் என்பதற்காகவே தினமும் சில மணி நேரம் அவற்றை இயக்கிவருவதாகக் கூறுகிறார்கள் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் சிலர். “ஹெச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனத்தின் துணை நிறுவனமாகத்தான் ஹெச்.பி.எல் தொடங்கப்பட்டது. ஹெச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்தபோது, ‘ஹெச்.பி.எல் நிறுவனம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று சொல்லி, அதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 2021, மார்ச் மாதம் கொண்டுவந்தனர்.

எப்போதுதான் செயல்பாட்டுக்கு வரும் ஹெச்.பி.எல்?

அதன் பிறகு, ஹெச்.பி.எல் நிறுவனத்துக்கென தனி நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை. விஞ்ஞானிகள் உட்பட 125 பேர் தினமும் பணிக்கு வருகிறோம். பல கோடி ரூபாய் செலவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக தினமும் சில மணி நேரத்துக்கு அவற்றை இயக்குகிறோம். கொரோனா முதல் இரண்டு அலைகள் முடிவற்று மூன்றாம் அலை வரப்போகிறது என்றெல்லாம் தகவல்கள் வரும் நிலையில், மக்கள் வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தை மத்திய அரசு ஏன் இப்படி வீணாக முடக்கிவைத்திருக்கிறது என்று புரியவில்லை” என்றார்கள் ஆற்றாமையுடன்!

மாநிலங்களுக்கான தடுப்பூசி தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ‘கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யப்போகிறோம்’ என்றெல்லாம் அறிவிப்பை வெளியிடும் மத்திய அரசு, ஹெச்.பி.எல் நிறுவனத்தை முடக்கிவைத்திருக்கும் மர்மம்தான் என்ன?