Published:Updated:

மிதக்கும் தலைநகரம்... யார் அலட்சியம்?

வெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளம்

பூகோளரீதியாகவே சென்னை மாநகரம் ஒரு நீர்ப்பிடிப்புள்ள பகுதி. நகருக்குள் மட்டும் அடையாறு, கூவம், கொசஸ்தலை என மூன்று ஆறுகள் ஓடுகின்றன.

மிதக்கும் தலைநகரம்... யார் அலட்சியம்?

பூகோளரீதியாகவே சென்னை மாநகரம் ஒரு நீர்ப்பிடிப்புள்ள பகுதி. நகருக்குள் மட்டும் அடையாறு, கூவம், கொசஸ்தலை என மூன்று ஆறுகள் ஓடுகின்றன.

Published:Updated:
வெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளம்

தமிழகத்தின் தலைநகரை அரசியல் வெள்ளம் புரட்டியெடுத்த காட்சிகள் மாறி, இப்போது மழைவெள்ளம் புரட்டியெடுக்க ஆரம்பித்திருக்கிறது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னையின் தெருக்கள் வெள்ளக்காடாகி மிதந்துகொண்டிருக்கின்றன. ‘ஒவ்வொரு முறையும் நிவாரணப் பொருள்கள் வழங்குவதைத் தவிர்த்து, தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எந்த அரசும் ஏற்படுத்தவேயில்லை’ என்கிற அதிருப்தியும் விமர்சனமும் மக்களிடம் கடுமையாக உள்ளன. குறிப்பாக 2015 வெள்ளத்தை, கடந்த அ.தி.மு.க அரசு ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ளவில்லை. பெயருக்குச் சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்ததன் விளைவுதான் தற்போதைய பாதிப்பு என்கிறார்கள் மக்கள். சென்னையின் நீர்நிலைப் பகுதிகளில் 71,000 ஆக்கிரமிப்புகள் இருந்ததாகச் சொன்ன முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவற்றில், சுமார் 14,000 ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டதாகச் சொன்னார். அதிலும் விமர்சனம் உள்ளது. சரி, மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை... மழைநீர் வடிகால்வாய்த் திட்டங்கள் மந்தகதியானதன் காரணம் என்ன என்கிற கேள்விகளைச் சமீபத்தில் பெய்த கனமழையும், அதன் பாதிப்புகளும் எழுப்பியிருக்கின்றன!

மிதக்கும் தலைநகரம்... யார் அலட்சியம்?

காணாமல்போன ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசுகள்!

2015-ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை சார்பில் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில், “2005-ம் ஆண்டு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 525 நீர்ப்பாசனக் குளங்களில், முழு அளவில் நீர் தேக்க முடியாத அளவில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. நகரிலுள்ள மொத்த ஏரிகளில் 69 சதவிகிதம் அளவுக்கு ஆக்கிரமிப்புகளால் நிரம்பியிருக்கின்றன. 381 குளங்கள் முழுமையாக நிரம்ப முடியாத அளவுக்கு, அதன் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இந்தநிலை அப்படியே தொடர்ந்து வந்த நிலையில், சென்னை பெருவெள்ளத்துக்கு முந்தைய 2013-14-ம் ஆண்டில்கூட, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் மாறி மாறி வந்த எந்த அரசும் எடுக்கவில்லை. 2015-ல் பெருவெள்ளம் சென்னையைத் தாக்கியதற்கு இதுதான் முக்கியமான காரணம்” என்று தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும், கடந்த அ.தி.மு.க ஆட்சி விழித்துக்கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

பூகோளரீதியாகவே சென்னை மாநகரம் ஒரு நீர்ப்பிடிப்புள்ள பகுதி. நகருக்குள் மட்டும் அடையாறு, கூவம், கொசஸ்தலை என மூன்று ஆறுகள் ஓடுகின்றன. இவை போக, நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீரோட்டப் பாதைகளும் இருக்கின்றன. ஒரு நகரம் விரிவாக்கம் செய்யப்படும்போது, அங்குள்ள எந்த நீர்நிலையையும் ஆக்கிரமிப்பு செய்யாமல் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், சென்னையின் பெரும்பாலான விரிவாக்கங்கள் மிக அலட்சியமாக நீர்நிலைகளின் மீதே நடந்திருப்பதுதான், வெள்ளம் இப்படி புரட்டிப்போடுவதற்குப் பிரதான காரணம். உதாரணமாக 900 ஏக்கர் பரப்பளவு இருந்த கொரட்டூர் ஏரி, தற்போது 600 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. அதேபோல ராமாபுரம் ஏரியின் பரப்பளவு 27 ஏக்கர், இப்போது மிச்சமிருப்பது ஒருசில ஏக்கர்கள் மட்டும்தான். 214 ஏக்கரில் விரிந்து பரந்திருந்த வில்லிவாக்கம் ஏரியின் அளவு, தற்போது 30 ஏக்கருக்குக் குறைந்துவிட்டது. சிட்லபாக்கம், மதுரவாயல் ஏரிகளின் நிலைமையும் அதுதான். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கான்கிரீட் காடுகள் முளைத்துவிட்டதால், ஏரிகள் மாயமாகிவிட்டன. இதைத் தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கவேண்டிய அரசு கொஞ்சமும் கண்டுகொள்ளாததால், இரண்டு நாள் மழையைச் சந்தித்தாலே வெள்ளக்காடாகிவிடுகிறது தலைநகரம்.

மிதக்கும் தலைநகரம்... யார் அலட்சியம்?

அதிருப்தியடைந்த நீதிமன்றம்... அலட்சியத்துக்கு அபராதம் 100 கோடி!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக 2015-ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில், 2018-ம் ஆண்டு அரசுத் தரப்பில் ஓர் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பக்கிங்ஹாம் கால்வாயிலுள்ள 26,300 ஆக்கிரமிப்புகளில், 408 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கூவம் ஆற்றில் 13,592 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 8,962 ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டோம். அதேபோல, அடையாற்றிலிருந்த 4,161 ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கிறோம். இன்னும், 6,186 ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியிருக்கிறது’ என்று பதிலளித்தது தமிழக அரசின் பொதுப்பணித்துறை. இந்த பதிலில் அதிருப்தியடைந்த தீர்ப்பாயம், ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பொதுப்பணித்துறை, அபராதத் தொகை செலுத்துவதிலிருந்து தடை பெற்றுவிட்டது. மீண்டும் இந்த வழக்கு, பிப்ரவரி 2019-ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், தொழில்நுட்ப உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் நாகின் நந்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பட்டாசு சத்தங்களைக் கேட்கவேண்டியிருந்தது. ‘கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. அரசின் அலட்சியப் போக்கு, சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது’ என்று கண்டித்த அமர்வு, ‘அரசின் இந்த மெத்தனமான போக்குக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவேண்டியிருக்கும்’ என்று எச்சரிக்கையும் விடுத்தது. ஆனால், அதற்குப் பிறகும்கூட காட்சிகள் மாறவில்லை.

மிதக்கும் தலைநகரம்... யார் அலட்சியம்?

பெருகிய ஆக்கிரமிப்புகள்... கண்டுகொள்ளாத பழனிசாமி!

ஜூலை 15, 2019-ல், சட்டமன்றத்தில் பேசிய அப்போதைய முதல்வர் பழனிச்சாமி, ``சென்னையில் ஒருசில ஆண்டுகளில் இந்த ஆக்கிரமிப்புகள் வந்துவிடவில்லை. தி.மு.க ஆட்சிக்காலம் தொட்டு, பல ஆண்டுகளாக ஏற்பட்டவை. அடையாறு, கூவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 71,268 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றில் 14,400 ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கிறோம். மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். இதில் துயரம் என்னவென்றால் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்நிலைப் பகுதிகளின் அருகே ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த அப்பாவிகள் வசித்துவந்த குடிசைகளை மட்டும் அகற்றி, அவர்களை கண்ணகி நகர், துரைப்பாக்கம், புளியந்தோப்புப் பகுதிகளில் மறுகுடியமர்வு செய்தனர். ஆனால், நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து பெரும் நிறுவனங்கள் கட்டியிருந்த கட்டங்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பதே கசப்பான உண்மை.

நம்மிடையே பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், “மொத்தமாக சென்னையின் இன்றைய மோசமான நிலைக்கு தி.மு.க - அ.தி.மு.க இரண்டு அரசுகளின் அலட்சியமும்தான் காரணம். 50 ஆண்டுகளாகத் தங்களுடைய ஆட்சியில் எந்தத் தொலைநோக்குப் பார்வையிலான திட்டத்தையும் இவர்கள் செயல்படுத்தவில்லை. அதேசமயம், கடந்த பத்தாண்டுகளைத் தன்வசம் வைத்திருந்த அ.தி.மு.க அரசுதான் இன்றைய நிலைக்குக் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 14,000 ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டதாகச் சொன்ன எடப்பாடி, மீதமிருந்த 56,000 ஆக்கிரமிப்புகளில் கை வைக்காதது ஏன்? சென்னை போரூர், ஓ.எம்.ஆர் பகுதிகளிலுள்ள ஏரி நீர்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்து மருத்துவமனை, கல்லூரி எனப் பல கட்டடங்கள் உருவாகியுள்ளன. இதையெல்லாம் பழனிசாமி ஏன் கண்டுகொள்ளவில்லை?

‘ஸ்மார்ட் சிட்டி’ என்கிற பெயரில், தி.நகர் பாண்டி பஜாரையே புரட்டிப்போட்டு கடந்த ஆட்சியில் பள்ளம் தோண்டினார்கள். பார்ப்பதற்கு அழகான நடைபாதையை மட்டும் அமைத்தார்களே தவிர, மழைநீர் வடிகால்வாய்ப் பணிகளை உருப்படியாகச் செய்யவில்லை. தற்போது, நவம்பர் 6-ம் தேதி இரவு பெய்த மழையில், தி.நகரே தனித்தீவு ஆனதுதான் மிச்சம். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க அரசு, மழை பெய்தவுடன் உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளில் மும்முரமாகியிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாகப் பல மணி நேரம் ஆய்வுசெய்தார். 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் சென்னையை மூழ்கடித்தபோது, மூன்று நாள்கள் கழித்தே போயஸ் தோட்டத்திலிருந்து வெளியே வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதோடு ஒப்பிடும்போது, முதல் நாளே ரெயின் கோட்டுடன் முதல்வர் களமிறங்கியதைப் பாராட்டலாம்.

ஆனால், இந்த வேகத்தை மழை ஆரம்பிப்பதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தி.மு.க அரசு காட்டியிருக்க வேண்டும். நீர்வழித்தடங்களைத் தூர் வாரியிருக்க வேண்டும். 15 வருடங்களுக்கு முந்தைய ரேடாரைத்தான் தற்போதும் வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகிறது. இதையெல்லாம், தற்போதைய தி.மு.க அரசு ஆய்வுசெய்து மாற்ற உத்தரவிட்டிருக்கலாம். அதேபோல, பெரு நிறுவனங்களிடம், முதலாளிகளிடமிருக்கும் பல ஆக்கிரமிப்புகளுக்குச் சட்டவிரோதமாகப் பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த பட்டாக்களை ரத்து செய்து, நீர்வழித்தடங்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை முதல்வர் அகற்றினால் மட்டுமே மழைக்காலத்தில் சென்னை மிதப்பது நிரந்தரமாகத் தடுக்கப்படும்” என்றனர்.

மிதக்கும் தலைநகரம்... யார் அலட்சியம்?

ஆயிரம் கோடிக் கணக்கில் திட்டங்கள்... அலட்சிய அதிகாரிகள்!

2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, வெள்ளத்துக்கான காரணத்தைக் கண்டறிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்கொண்ட குழு அமைக்கப்பட்டு, அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாததையும், இருக்கும் கால்வாய்களும் செயலிழந்திருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டியது அந்தக் குழு. புதிதாக 334 இடங்களில் மழைநீர் வடிகால் கட்டவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து, 290 கோடி ரூபாய் செலவில் புதிய மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது வரை அந்தப் பணிகள் முடிவுறவில்லை. அதேபோல, 1,101.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட, 326 கி.மீ தூர மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியும் 70 சதவிகிதம் மட்டுமே முடிந்திருக்கிறது.

புவியியல் கட்டமைப்பில் சென்னை மாநகரம் சமதளப் பரப்பில் அமைந்துள்ள நகரம். இங்கு மழைநீர் தேங்குவது இயல்புதான். அப்படி மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காகத்தான் மழைநீர் வடிகால்கள் கட்டமைப்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 1,894 கி.மீ நீளத்துக்கு இந்த மழைநீர் வடிகால்வாய்கள் இருந்தாலும், எந்தப் பராமரிப்பும் இல்லாமலேயே கிடப்பில் கிடக்கின்றன. மழைபெய்கிறபோது மட்டும் கால்வாய்களில் சேரும் செத்தைகளை அப்புறப்படுத்துவதோடு கடமை முடிந்ததாக மந்தகதியாகிவிடுகிறது அரசு நிர்வாகம். சென்னை வெள்ளக்காடாவதற்கு வெறும் அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிகாரிகளும் இதற்கு உடந்தைதான். தலைநகரை பாதிக்கும் வெள்ளநீர், சென்னை நகருக்குள் மட்டும் உருவாவதில்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலிருந்து வரும் மழைநீரும், சென்னை வழியாகத்தான் கடலில் கலக்க வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப திட்டங்களை வடிவமைத்து, இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த அதிகாரியும் முன்வருவதில்லை. 2015 வெள்ளத்துக்குப் பிறகு, சில அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வேகம் காட்டினர். ஆனால், காலப்போக்கில் வந்த அலட்சியத்தால் அந்த வேகம் கரைந்துபோனது.

மிதக்கும் தலைநகரம்... யார் அலட்சியம்?

எது எதற்கோ குழுக்கள் அமைக்கும் முதல்வர் ஸ்டாலின், நீர்வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பெரு நிறுவனங்கள் ‘பட்டா’ என்கிற பெயரில் வளைத்திருக்கும் நீர்பிடிப்புப் பகுதிகளை மீட்டெடுக்கவும் முதற்கட்டமாகக் குழு அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்வாய்கள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே சென்னை பரிதாபமாக மிதப்பது தடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளிலிருந்தும், எதிர்கால ஆபத்துகளிலிருந்தும் சென்னையை மீட்பாரா முதல்வர்?

துடிப்பு காட்டிய மாநகராட்சி!

ஆறு வருடங்களுக்குப் பிறகு பெய்த கனமழை என்பதால், மீண்டுமொரு 2015 அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாதென, மீட்புப் பணிகளில் சென்னை மாநகராட்சி முழு வீச்சில் இறங்கியது. மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களிலும், 160 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டனர். 200 இடங்களில் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. உணவின்றித் தவித்த 7,14,270 பேருக்கு உணவும் மாநகராட்சியால் வழங்கப்பட்டது!