Published:Updated:

சிங்காரச் சென்னை... மழை பெய்தால் தீவு... என்னதான் தீர்வு?

வழக்கமாக அதிதீவிர கனமழை என்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு அல்லது நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும்.

பிரீமியம் ஸ்டோரி

மீண்டும் சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. 2015-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு மீண்டும் சென்னை இப்படியொரு தொடர் மழையைச் சந்திக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தவிக்கிறார்கள். இயல்பு வாழ்க்கை மீண்டும் ஒருமுறை முற்றிலும் முடங்கியிருக்கிறது.

ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு எனச் சென்னையைச் சுற்றிலும் பல நீர்நிலைகள் இருந்தும் சாதாரண சிறு மழைக்கே சென்னையின் சாலைகள் குளங்களாகி விடுகின்றன. புறநகர்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.

வழக்கமாக அதிதீவிர கனமழை என்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு அல்லது நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும். ஆனால் ஆறே ஆண்டுகளில் மீண்டுமொரு பெருவெள்ளத்தைச் சென்னை சந்தித்திருக்கிறது. இதற்குக் காலநிலை மாற்றத்தை மிக முக்கியமான காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் சூழலியலாளர்கள்.

சிங்காரச் சென்னை... மழை பெய்தால் தீவு... என்னதான் தீர்வு?

‘‘24 மணி நேரத்துக்குள் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழைப்பொழிவு இருந்தால் அதை அதிதீவிர காலநிலை நிகழ்வு என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது சென்னையில் 24 மணி நேரத்தில் 29 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது இயற்கை செய்யும் எச்சரிக்கை...'' என்கிறார் சூழலியலாளரான `பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன்.

‘‘தமிழகத்தில் வழக்கமாகத் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் இறுதியில் முடியும். அக்டோபர் 20 வாக்கில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இரண்டு மாதங்களில் சுமார் 600 மி.மீ மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இப்போது இரண்டு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை மெரினா பகுதியில் மேக வெடிப்பு காரணமாக அரை மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதுவே நகரத்திற்குள் பெய்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும்.

சென்னை இதுமாதிரியான பெருமழைகளைப் பல நூற்றாண்டுகளாகக் கடந்துதான் வந்திருக்கிறது. இயற்கையே மிகச்சிறப்பாக ஒழுங்கமைவு செய்திருக்கிற நகர் இது. நகரைச் சுற்றி நான்கு நதிகள் ஓடுகின்றன. அனைத்து நதிகளையும் பக்கிங்ஹாம் கால்வாய் இணைக்கிறது. அது தவிர ஒட்டேரி நல்லா, கார்ட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் என 50 பெரிய கால்வாய்கள் சென்னையில் இருந்தன. 542 சிறிய ஓடைகளும் இருந்தன. மழைநீர் சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய கால்வாய்க்கு வந்து நதிக்குச் சென்று கடலில் கலக்கும். இவை எல்லாவற்றையும் தாண்டி பள்ளிக்கரணை, பழவேற்காடு என இரண்டு பெரிய சதுப்பு நிலங்கள் இருந்தன. வடசென்னையின் மொத்த வெள்ளத்தையும் பஞ்சுமாதிரி உள்வாங்கிக்கொள்ளும் பழவேற்காடு. தெற்கு மற்றும் மத்திய சென்னையின் வெள்ளத்தைப் பள்ளிக்கரணை வாரிச் சேர்த்துக்கொள்ளும்.

இவை அனைத்தையும் ஆக்கிரமித்து கட்டுமானங்களாக மாற்றியதுதான் இப்போது நாம் எதிர்கொள்ளும் அவலநிலைக்குக் காரணம். பெரம்பூர் தொடங்கி மாம்பலம் வரை சென்னையில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்தது. அதன் எஞ்சிய பகுதிதான் இப்போது இருக்கும் சேத்துப்பட்டு ஏரி. அந்த ஏரியின் பிற பகுதிகள் கட்டுமானங்களுக்குள் தொலைந்துவிட்டன.

சிங்காரச் சென்னை... மழை பெய்தால் தீவு... என்னதான் தீர்வு?

இயற்கையாக இருந்த வடிகால் ஏற்பாடுகளைக் குலைத்துவிட்டோம். இன்னொரு பக்கம் காலநிலை மாற்றத்தின் விளைவை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். இந்த இரு விளைவுகளையும் சந்திக்கும் அளவுக்கு நம்மிடம் எந்த ஏற்பாடுகளும் இல்லை. மழைநீர் வடிகால் கால்வாய் என்ற பெயரில் நாம் செய்யும் செலவெல்லாம் சிறிதும் பயனற்றுப் போய்விட்டது. இந்த வெள்ளம் நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான்...'' என்று அக்கறையுடன் சொல்கிறார் சுந்தர்ராஜன்.

2015 பெரு வெள்ளத்திற்குப் பிறகு நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாகத் தொடங்கியது. வெள்ளம் வடிந்ததும் எல்லோருக்கும் ஆர்வமும் வடிந்துபோக, படிப்படியாக அந்தப்பணி கைவிடப்பட்டுவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி நிதி, உலக வங்கி நிதி, ஆசிய வங்கி நிதி, ஜெர்மன் வங்கி நிதி என சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ‘‘இந்த மழைநீர்க் கால்வாய்களை முறைப்படி கட்டாததே சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்கக் காரணம்'' என்று சொல்லும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

‘‘மழைநீர் வடிகால் கால்வாய் என்பது நகரம் முழுமைக்கும் அத்தியாவசியமானதல்ல. இயற்கையாகவே நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் நேரடியாகச் சென்று நீர்நிலைகளில் வடிந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு இடையூறாக இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும். பள்ளமான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் வடிய வாய்ப்பில்லாத பகுதிகளில் மட்டும் கால்வாய்களை அமைத்தால் போதுமானது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மழைநீர் வடிகால் கால்வாய்களைப் பணம் காய்க்கும் மரம்போலப் பயன்படுத்தினார்கள். 2015 வெள்ளத்திற்குப் பிறகு மீண்டும் அப்படியொரு பாதிப்பு ஏற்பட்டுவிடாதவாறு கட்டமைப்புகளை உருவாக்க ஏராளமான நிதி கொட்டப்பட்டது. அவற்றை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் தற்போது சென்னை வெள்ளத்தில் மிதந்திருக்காது.

மழைநீர் வடிகால் என்ற பெயரில் வெறும் கான்க்ரீட் பாக்ஸ்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். எவ்வளவு உயரம் தேவை, எவ்வளவு அகலம் தேவை என எந்த அளவீடும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஜெர்மன் வங்கியில் 300 கோடி ரூபாய் நிதி வாங்கி நீலாங்கரையில் மழைநீர் கால்வாய் அமைக்கிறார்கள். அது இயற்கையான மணல் பூமி. தானாகவே மழைநீர் வடிந்துவிடும். அங்கு மழைநீர்க் கால்வாயே தேவையில்லை.

சுந்தர்ராஜன்
சுந்தர்ராஜன்

மழைநீர்க் கால்வாய் அமைக்கும்போது கிரேடியன்ட் எனப்படும் அளவீடுகளை முறைப்படி செய்யவேண்டும். ‘தாழ்வான பகுதி எது, மேடான பகுதி எது, எங்கே ஆரம்பித்து எங்கே முடிக்க வேண்டும்' என்பதெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த ஆய்வும் செய்யப்படவில்லை.

மழைநீர்க் கால்வாய்ப் பணியை நீர் ஓடி முடியும் இடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால்தான் ஆங்காங்கே கொண்டுவந்து கால்வாய்களை இணைக்க முடியும். ஆனால், பல கால்வாய்கள் நீர்நிலைகளில் முடியாமல் அப்படியே ஓரிடத்தில் நிற்கின்றன. பிறகு எப்படி மழைநீர் வடியும்?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிதியையும் கூட மழைநீர் வடிகாலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அத்திட்டத்தின் மையமாக இருந்தது தி.நகர். அங்கு மழைநீர் வடிகால் அமைக்க அந்தத் திட்டத்திலிருந்து பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மழையில் பெரும்பாதிப்பை தி.நகர்தான் சந்தித்திருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டமே நகரத்தின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதுதான். சென்னையை அழகுபடுத்துவது என்பது மின் விளக்குகளை ஒளிர விடுவதல்ல. பிளாட்பாரங்கள், வடிகால்கள், சாலைகள் என சகல வசதிகளையும் தொலைநோக்கோடு உருவாக்குவது.

மழைநீர் வடிகால்களின் மேப் கொடுங்கள் என்று கடந்த ஐந்தாண்டுகளாக சென்னை மாநகராட்சியிடம் கேட்கிறோம். இதுவரை தரவில்லை. மேடான பகுதிகள் எவை? பள்ளமான பகுதிகள் எவை? எங்கே வடிகால்களின் லிங்க் இருக்கிறது? எங்கே கால்வாய்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன? இதில் எந்தத் தகவலும் மாநகராட்சியிடம் இல்லை.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

நகரத்தின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொண்டு அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து தொலைநோக்கோடு வடிகால் ஏற்பாடுகளைச் செய்யாவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையைத்தான் நாம் சந்திக்கப்போகிறோம்'' என வேதனையுடன் சொல்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

சென்னையின் அடையாளமாக தீவுத்திடல் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் சிங்காரச் சென்னையே தீவாகிவிடுகிறது. இதற்குத் தீர்வு தேடும் மனம் ஆட்சியாளர்களுக்கு எப்போது வரும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு