Published:Updated:

“லைஃப்ல செட்டிலாக ஐடியா குடு மச்சி” - 31 கிலோ தங்கம் ஒரே வாரத்தில் மீட்கப்பட்ட பின்னணி!

சென்னை வங்கிக் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை வங்கிக் கொள்ளை

நான் வேலை பார்க்கும் வங்கிக் கிளையில்கூட, கிலோக் கணக்கில் தங்க நகைகள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன. துணிவிருந்தால் முயன்று பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்

“லைஃப்ல செட்டிலாக ஐடியா குடு மச்சி” - 31 கிலோ தங்கம் ஒரே வாரத்தில் மீட்கப்பட்ட பின்னணி!

நான் வேலை பார்க்கும் வங்கிக் கிளையில்கூட, கிலோக் கணக்கில் தங்க நகைகள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன. துணிவிருந்தால் முயன்று பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்

Published:Updated:
சென்னை வங்கிக் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை வங்கிக் கொள்ளை

சென்னை வங்கிக் கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து மூன்று பெண்களும் சிக்குகிறார்கள் என்பதுதான் காவல்துறை வட்டாரத்தில் ஹாட் டாபிக்.

சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கியின் கோல்டு கடன் வழங்கும் கிளையான ‘ஃபெட் பேங்க்’ இருக்கிறது. இந்த வங்கியில் கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை சர்வ சாதாரணமாகக் கொள்ளையடித்தனர். கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, சந்தோஷ் ஆகியோரை போலீஸ் மடக்கியது. அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகளை மீட்ட போலீஸார், மீதமுள்ள நகைகள் எங்கே என்று விசாரித்தனர். அதே வங்கியில் வேலை பார்க்கும் முருகன், தங்கள் இன்னொரு நண்பர் சூர்யா ஆகியோரிடம் இருப்பதாகச் சொன்னார்கள் அவர்கள். கூடவே, “முருகன்தான் இந்தக் கொள்ளைக்கு மாஸ்டர் மைண்ட்” என்பதையும் போட்டுடைத்தனர்.

“லைஃப்ல செட்டிலாக ஐடியா குடு மச்சி” - 31 கிலோ தங்கம் ஒரே வாரத்தில் மீட்கப்பட்ட பின்னணி!

வேறு வழியின்றி முருகனும் சூர்யாவும் வழக்கறிஞர்கள் உதவியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, நகைகளை மொத்தமாகப் பிரித்து பங்கு போட்டது சந்தோஷ்தான் என்று தெரியவந்தது. மீண்டும் சந்தோஷிடம் விசாரித்தபோதுதான், அவரின் உறவினரான செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் 6 கிலோ நகைகள் மறைத்துவைக்கப்பட்ட சங்கதி அம்பலமானது. இப்படி ஒரு வார காலத்தில் முருகன், அவரின் நண்பர்கள் பாலாஜி, சந்தோஷ், சூர்யா மற்றும் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில், நகைக்கடை நடத்திவரும் கோவையைச் சேர்ந்த ஸ்ரீவத்சா ஆகிய ஏழு பேரைக் கைதுசெய்த போலீஸார், கொள்ளை போன மொத்த நகைளையும் மீட்டனர்.

இந்த வழக்கு குறித்து இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் விஜயகுமார் ஆகியோரிடம் பேசினோம். “பி.காம் படித்துள்ள முருகன், கடந்த இரண்டாண்டுகளாக அந்த வங்கியில் கணக்காளராக வேலை பார்த்துவந்தார். முருகனும், அவரின் பள்ளி நண்பர்களான பாலாஜி, சூர்யா, சந்தோஷ் ஆகியோரும் தினமும் ஜிம் ஒன்றில் சந்திப்பது வழக்கம். அப்போது அவர்கள் முருகனிடம், “லைஃப்ல செட்டிலாக ஐடியா குடு மச்சி...” என்று கேட்டுள்ளனர். அதற்கு முருகன், “நான் வேலை பார்க்கும் வங்கிக் கிளையில்கூட, கிலோக் கணக்கில் தங்க நகைகள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன. துணிவிருந்தால் முயன்று பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த நகைகளை எப்படிக் கொள்ளையடிப்பது என்று சீரியஸாக விவாதித்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

“லைஃப்ல செட்டிலாக ஐடியா குடு மச்சி” - 31 கிலோ தங்கம் ஒரே வாரத்தில் மீட்கப்பட்ட பின்னணி!

ஆகஸ்ட் 13-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால், வங்கியில் ஊழியர்களும் குறைவாகத்தான் இருப்பார்கள். வாடிக்கையாளர் கூட்டமும் இருக்காது என்பதால் கொள்ளையடிக்க அன்றைய தினத்தைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். முருகனுக்கும் அன்று விடுமுறை. கேஷுவலாக அந்தப் பக்கம் செல்வதுபோலச் சென்று செக்யூரிட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துவிட்டு, நண்பர்களைக் கொள்ளையடிக்க வரச் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார் முருகன். முகமூடி அணிந்து வந்தவர்கள் இரண்டு ஊழியர்களைக் கத்திமுனையில் மிரட்டி ‘ஸ்ட்ராங் ரூம்’ சாவியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்த தங்க நகைகளை மூட்டைகளில் அள்ளிச் சென்றுள்ளனர்.

குளிர்பானம் குடித்த பிறகுதான் செக்யூரிட்டி மயக்கமடைந்தார் என்பதால், முருகன் எங்களின் சந்தேக வளையத்துக்குள் வந்தார். அவருடைய வாகன எண், செல்போன் அழைப்பின் ஹிஸ்டரியையெல்லாம் வைத்து சந்தோஷ், பாலாஜி, சூர்யா ஆகியோரை நெருங்கினோம். கொள்ளையடிக்கும்போது குடுமி வைத்திருந்த பாலாஜி, அதன் பிறகு தலைமுடியை வெட்டிக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல தன்னுடைய கீரை வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார். பல்லாவரத்தில் உள்ள லாட்ஜில், சந்தோஷின் நண்பர் ஸ்ரீவத்சா நகைகளை உருக்கும்போது புகை அதிக அளவில் வெளியேறியிருக்கிறது. அதனால் அந்தத் திட்டத்தைக் கைவிட்ட சந்தோஷ், ஒவ்வொருவருக்கும் நகையைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். நால்வரையும் விசாரித்தபோதுதான் நகைகளை இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் வீட்டில் மறைத்துவைத்துவிட்டு, சந்தோஷ் சண்டைச் சேவலை விற்பதற்குச் சென்றிருப்பது தெரியவந்தது.

சந்தோஷ், பாலாஜி, முருகன், செந்தில், சூர்யா, அமல் ராஜ்
சந்தோஷ், பாலாஜி, முருகன், செந்தில், சூர்யா, அமல் ராஜ்

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன் `ஜென்டில்மேன்’ உள்ளிட்ட வங்கிக் கொள்ளை தொடர்பான சினிமாக்களை அதிக அளவில் பார்த்திருக்கிறார் முருகன். ‘மண்டையை மறைச்சவன் கொண்டையை மறைக்கலியே’ என்கிற கதையாக, தானே சென்று செக்யூரிட்டிக்கு குளிர்பானம் கொடுத்து மாட்டிக்கொண்டார்” என்றார்கள்.

இந்த வழக்கில் கைதான முருகன், சந்தோஷ், இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆகிய மூவரின் மனைவியருக்கும் கொள்ளை தொடர்பான தகவல் தெரிந்திருக்கிறது. அதனால் அவர்களும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும் இதில் ஒருவரின் மனைவி, சமீபத்தில் முறைகேட்டில் சிக்கிய கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்து பல லட்சங்களை இழந்தவர். எப்படியாவது இழந்த பணத்தை ஈடுகட்ட வேண்டும் என்ற அவரது வேகமும் இந்தக் கொள்ளைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் தனிப்படை போலீஸார்.

வாழ்க்கையில் செட்டிலாக குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தவர்கள், இப்போது புழல் சிறையில் செட்டிலாகியிருக்கிறார்கள்!