Published:Updated:

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா சென்னை மாநகராட்சி!

மழை வெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
மழை வெள்ளம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத 38 நாள்கள்!

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா சென்னை மாநகராட்சி!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத 38 நாள்கள்!

Published:Updated:
மழை வெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
மழை வெள்ளம்

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வரும் நாள்களில் மழை தொடரும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். வடகிழக்குப் பருவ மழைக்காலம் என்பதால் வருகிற ஜனவரி மாதம் வரை அவ்வப்போது கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதும், பெருமழை பொழிவதும் வழக்கமானதுதான். ஆனால், அரை மணி நேர மழைக்கே சென்னையின் சாலைகள் வெள்ளத்தில் மிதப்பதுதான் வழக்கமில்லாதது. இந்த நிலையில், ஓரிரு நாள்களுக்குத் தொடர்ந்து மழை பெய்தால், சென்னைக்கு ஏற்படும் அபாயத்தைச் சொல்லத் தேவையில்லை. இயற்கைப் பேரிடர்களைத் தவிர்க்க முடியாது என்றாலும்கூட இந்த அபாயத்துக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமும் ஒரு முக்கியக் காரணமாகியிருக்கிறது.

சென்னையில் மாம்பலம், விருகம்பாக்கம், கேப்டன், ஓட்டேரி உட்பட 16 சிறு கால்வாய்கள் உள்ளன. சாலையில் பொழியும் மழைநீர், வடிகால்கள் மூலம் இந்தக் கால்வாய்களுக்குச் சென்று, அவற்றிலிருந்து அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலில் கலக்கும். ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேற்கண்ட சிறு கால்வாய்களில் எந்த வேலையும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. இதுவே தற்போது சாலைகளில் மழைநீர் தேங்குவதற்குக் காரணம் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா சென்னை மாநகராட்சி!

சென்னை வடபழனியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் சாஜாகுணா இது பற்றி நம்மிடம் விளக்கமாகப் பேசினார். “ஒவ்வொரு வருடமும் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களையும், மழைநீர் வடிகால்களையும் தூர்வாரும் பணிகளை முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டும் அது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி. அதன்படி, சாலைகள் மற்றும் பாலங்கள்துறையின் தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், மழைநீர் வடிகால்துறைக்குப் பொறுப்பாளராக, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

சென்னையில் நவம்பர் 6-ம் தேதிதான் முதல் பெருமழை பெய்தது. தொடர்ந்து நவம்பர் 10, 11, 17, 18 ஆகிய நாள்களில் மழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளக்காடானது சென்னை. இன்றுவரை பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. நவம்பர் 22-ம் தேதி காலை சுமார் அரை மணி நேரம் பெய்த மழையே தி.நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களை மூழ்கடித்தது. சென்னையில் நவம்பர் முதல் வாரம்தான் மழை தொடங்கிய நிலையில், மழைநீர் வடிகால்துறைக்கு பொறுப்பேற்ற ராஜேந்திரன், அதற்கு இடைப்பட்ட 38 நாள்களில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

சென்னை மாநகராட்சியால் 16 சாலை சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றையொட்டியிருக்கும் மழைநீர் வடிகால்களைச் செப்பனிடாததால், 11 சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கின. கொசஸ்தலை கழிமுகப் பகுதி, நேப்பியர் பாலம், அடையாறு ஆகிய முகத்துவாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்தியிருக்க வேண்டும். சென்னையில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள 523 பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்துவதற்குத் தேவையான நீர் இறைக்கும் பம்புகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைநீர் வடிகால்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று சோதித்திருக்க வேண்டும். இவற்றில் எதையுமே மாநகராட்சி செய்யவில்லை. சென்னையிலுள்ள மழைநீர் வடிகால்களின் கட்டமைப்புகள் அனைத்தும் உதவிப் பொறியாளர்களுக்குத்தான் தெரியும். அவர்களில் 127 பேரை முன் யோசனை இல்லாமல் சமீபத்தில் இடமாற்றம் செய்து விட்டார்கள். வார்டு மாறிச் சென்றவர்களுக்கு அங்கிருந்த வடிகால்கள் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை” என்றவர், பாலங்கள் கட்டுவதில் நடந்த குளறுபடிகளால் ஏற்பட்ட பிரச்னைகளையும் சொன்னார்...

“சென்னை மாநகராட்சி சார்பில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பூர் ஸ்டீஃபன்சன் பாலம், கொளத்தூர் - வில்லிவாக்கம் பாலம், ராயபுரம் போஜராஜன் நகர் பாலம், ஆர்.கே.நகர் - தண்டையார் பேட்டை பாலம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததாரர்களிடம் சில ஆதாயங் களை எதிர்பார்த்து, ஏராளமான ஃபைல்களை நிறுத்திவைத்ததால் பாலப் பணிகளில் குளறுபடி ஏற்பட்டு அங்கெல்லாம் குளம்போல தண்ணீர் தேங்கி நின்றது. மொத்தத்தில் அதிகாரிகளின் அலட்சியம்தான் சென்னை இன்று மிதப்பதற்குக் காரணம்” என்று சொல்லி முடித்தார்.

சாஜாகுணா - ராஜேந்திரன்
சாஜாகுணா - ராஜேந்திரன்

நம்மிடம் பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலரோ, “அரசுத் துறைகளில் மூன்றாண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரைதான் ஒரே இடத்தில் ஒருவர் பணிபுரிய முடியும். ஆனால், சென்னை மாநகராட்சியின் தற்போதைய செயற்பொறியாளர் முருகன் மட்டும் 26 ஆண்டுகள் இதே மாநகராட்சியில் பணியாற்றிவருகிறார். இவரைப் போன்றவர்கள் மாநகராட்சியின் கமிஷனரையே ஆட்டுவிக்கும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை” என்றார்கள்!

தலைமைப் பொறியாளர் ராஜேந்திரனிடம் மேற்கண்ட புகார்களுக்கு விளக்கம் கேட்டோம். “நான் மழைநீர் வடிகால் துறைக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் பொறுப்புக்கு வந்தேன். நவம்பர் 7-ம் தேதியிலிருந்துதான் மழை அதிகம் பெய்தது. சென்னையில் கிட்டத்தட்ட 700 இடங்களில் மழைநீர் தேங்கியது. இடைப்பட்ட காலத்தில் கால்வாய்த் தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அவகாசம் இல்லை. தேங்கிய மழைநீரை மோட்டார் பம்பு வைத்து வெளியேற்ற மட்டுமே முடிந்தது. மற்றபடி ஒப்பந்ததாரர்களிடம் ஆதாயம் அடைந்தேன் என்று சொல்வது பொய்” என்றார்.

மேற்கண்ட பிரச்னையை அலட்சியம் என்கிற ஒற்றை வார்த்தையில் கடந்துவிட முடியாது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோவதுடன், மக்களின் உயிருக்கும் இதனால் ஆபத்து ஏற்படுகிறது. இனியேனும் சாட்டையைச் சுழற்றுவாரா சென்னையின் முன்னாள் மேயரும், இந்நாள் முதல்வருமான ஸ்டாலின்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism